May 03 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் மேல்மலையனூர்

  1. அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     அங்காளபரமேஸ்வரி

தல விருட்சம்   :     வில்வம்

ஊர்             :     மேல்மலையனூர்

மாவட்டம்       :     விழுப்புரம்

 

ஸ்தல வரலாறு :

தட்சன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து அன்னை பார்வதி தேவி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்ற வரம் பெற்றான். பார்வதி தேவி அவ்வாறே தக்கனின் மகளாக பிறந்தாள். அவளுக்கு தாட்சாயணி என்று பெயர் வைத்து வளர்த்து வந்தான். தாட்சாயணி தேவிக்கு திருமண வயது வந்ததும் சிவபெருமான் தட்சனுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். தக்கன், சிவபெருமானே தனக்கு மருமகன் ஆகிவிட்டார் என்று ஆணவத்துடன் இருந்தான். ஒருமுறை தட்சன் தனது மகளையும் மருமகனையும் காண கயிலாயம் சென்றான். அங்கிருந்த பூதகணங்கள் தட்சனை மறித்தனர். பூதகணங்களிடம், தட்சன் நான் சிவபெருமானின் மாமனார் என்றான். இதைக்கேட்ட பூதகணங்கள் நகைத்தனர். பூதகணங்களிடம் அவன் பட்ட அவமானத்தால் தட்சன் எப்படியாவது சிவபெருமானை அவமதிக்க வேண்டும் என்று நினைத்து  பிரயாகை புண்ய பூமியில் மாபெறும் வேள்வி (யாகம் ) ஒன்றை ஏற்பாடு செய்தான். இந்த யாகத்திற்கு பிரம்மா, விஷ்ணு, தேவர், முனிவர்கள் அனைவருக்கும்  அழைப்பு விடுத்தான்  ஆனால் தனது மகளான தாட்சாயணிக்கும் சிவபெருமானுக்கும் அழைப்பும் விடுக்கவில்லை, அவிர்பாகமும் கொடுக்கவில்லை. இதை அறிந்த தாட்சாயணி தேவி, தந்தையான தட்சனிடம் சென்று நியாயம் கேட்டாள். நீயே அழையா விருந்தாளியாக வந்திருக்கிறாய் சரி வந்ததும் வந்தாய் வேள்வியில் கலந்து கொள் என்றான். ஆனால் அந்த சிவனை அழைக்கவும் மாட்டேன், அவிர்பாகமும் கொடுக்க மாட்டேன் என்றான். மனம் கலங்கிய கண்களுடன் தாட்சாயணி தேவி சிவனை நிந்தனை செய்த உனக்கு நான் மகளாக இருக்கமாட்டேன் இந்த யாகம் அழியக்கடவது என்று சாபமிட்டுவிட்டு அந்த வேள்வி தீயில் இறங்கி தன்னை மாய்த்துக் கொண்டாள் தாட்சாயணி தேவி.

தாட்சாயணி தீயில் மாண்டதை அறிந்த சிவபெருமான் வீரபத்திரனை அனுப்பி தட்சனையும் , யாகத்தையும் அழித்தார். சிவபெருமான் தீயிலே இருந்த தாட்சாயணி உடலை எடுத்து தோல் மீது போட்டுக்கொண்டு பித்து பிடித்தவர் போல் ஆகாயமார்கத்தில் அகோர தாண்டவம் ஆடிக்கொண்டு இருந்தார். உலக நன்மைக்காக மகாவிஷ்ணு தன் கையில் இருந்த சுதர்சன சக்கரத்தை தாட்சாயணி உடலின் மீது செலுத்த அது என்ன 51 துண்டுகளாக சிதறி இந்த பாரத தேசத்தில் 51 இடங்களில் விழுந்தது. இதுவே பின்னாளில் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படுகிறது. அப்படி முதலில் விழுந்த உறுப்பு (வலதுகை) தண்டகாருண்யம் என்ற காட்டு பகுதியில்  விழுந்தது இதுவே பின்னாளில் மேல்மலையனூர் என்று அழைக்கப்படுகிறது.

 

சிவனைப்போல பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் தானும் சிவபெருமானுக்கு நிகரானவர் என்று பிரம்மன் ஆணவம் கொண்டார். இதையடுத்து அவருடைய ஒரு தலையை கிள்ளி எடுத்தார், ஈசன். இதனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. ஈசன் கிள்ளிய பிரம்மனின் தலை, சிவபெருமானின் கையில் மண்டை ஓடாக மாறி ஒட்டிக்கொண்டது. அவர் ஒரு கையில் கபால திருவோடு, மற்றொரு கையில் சூலாயுதம் தாங்கியபடி, உடலெங்கும் சாம்பலை பூசிக்கொண்டு ஊர், ஊராக அலைந்து திரிந்தார். அதன் ஒரு பகுதியாக மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் குடிகொண்டிருக்கும் இத்தலத்துக்கு வந்தார். அங்காள பரமேஸ்வரி அம்மன், சிவன் கையில் இருந்த கபாலத்துக்கு உணவிட்டு, சாதத்தை கீழே சிதறிபோகும் படி செய்தார். அப்போது சிவன் கையில் இருந்த கபாலம் கீழே இறங்கி சாதத்தை பொறுக்கியது. உடனே அங்காள பரமேஸ்வரி அம்மன் விஸ்வரூபம் எடுத்து கபாலத்தை காலால் மிதித்து அதை அடக்கினார். இதையடுத்து சிவனை பிடித்து இருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது. கபாலத்தை அடக்கிய பிறகும், அங்காளம்மனின் கோபம் தணியவில்லை. அவளது கோபத்தை தணிக்க தேவர்கள் அனைவரும் தேர்த் திருவிழா நடத்த முடிவு செய்தனர். தேவர்களும், முனிவர்களும் அந்த ரதத்துக்கு சக்கரமாகவும், அச்சாணியாகவும், மாடங்களாகவும், மரப்பலகை களாகவும், சிம்மாசன மேடையாகவும் மாறி நின்றனர். அங்காள பரமேஸ்வரி கோபம் தணிந்து அந்த தேரில் ஏறி அமர்ந்து வீதி வலம் வந்தாள். தேரோட்டம் முடிந்ததும் தேவர்களும், முனிவர்களும் தேரைவிட்டு அகன்று சுயரூபம் பெற்று மறைந்தனர் என்பது கோவில் வரலாறு.

 

கோயில் சிறப்புகள் :

  • இத்தலத்தில் வீற்றிருக்கும் அம்மன், புற்று மண்ணால் சுயம்புவாக உருவானவள் என்கிறது தல வரலாறு.

 

  • நான்கு திருக்கரங்களுடன், இடதுகாலை மடித்து, வலதுகாலைத் தொங்கவிட்டபடி, பிரம்ம கபாலத்தை மிதித்தவாறு, வடக்கு திசை நோக்கி அருட்காட்சி புரிகிறார் அம்மன்.

 

  • புற்று வடிவில் தோன்றிய இந்த அம்மனுக்கு ‘புற்று தேவி’ என்றும் பெயருண்டு.

 

  • கோபத்திலிருந்த அங்காளம்மனை சாந்தப்படுத்தும் நிகழ்வாகவே தேர்திருவிழாவும், அமாவாசை தினங்களில் ஊஞ்சல் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறதாம். அதன்படி, மாசிமாதம் அமாவாசை அன்று மேல்மலையனூர் மயானத்தில் நடைபெறும் மயானக்கொள்ளை திருவிழா பிரசித்தி பெற்றதாகப் பார்க்கப்படுகிறது.

 

  • அங்காள பரமேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன என்றாலும், அன்னைக்கு மேல்மலையனூர் ஆலயமே தலைமை ஆலயமாகும்.

 

  • திருக்கோயிலின் தெற்கு பகுதியில் மலாந்து படுத்து பெரிய உருவமாக பெரியாயி அருள் புரிகிறாள்.

 

  • போளூர், திருவண்ணாமலை, ஆரணி, செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் போன்ற நகரப் பகுதிகளை உள்ளடக்கிய மிக பரந்த பரப்யையே ஆதியில் தண்டகாருண்யம் என்று அழைத்தனர். தண்டகாருண்யத்தின் மையப்பகுதியான இடமே இன்றைய மேல்மலையனூர் ஆகும். தண்டகாருண்ய பகுதிகளே சோழ மண்டலத்தில் தொண்டை மண்டலம் மற்றும் நடுநாடுப் பகுதிகளாக கடையேழு வள்ளல்களால் ஆளப்பட்டன. கடையேழு வள்ளல்களின் பராம்பரியத்தில் வந்த ஒரு சிறந்த சிற்றரசனே “மலையன்” என்பவராவார். இவர் தண்டகாருண்யத்தின் மையப்பகுதியான பூங்காவனத்தை ஆட்சி புரிந்துள்ளார். தண்டகாருண்ய பகுதிகள் பெரும்பாலும் பூமிக்கு மேல் மலைப்பகுதியை கொண்டதாகும். மேல் மலைப்பகுதியை ஆண்ட மலையன் என்பாரின் பெயராலேயே மலையன் ஊர் “மலையனூர்” என்ற காரண பெயரானது.

 

  • இத்திருக்கோவிலின் மேற்குபுற வாயிற்படியின் அருகில் கோபால விநாயகர் சன்னதியும், தெற்கே அன்னபூரணி சன்னதியும், வடக்கே பாவாடைராயன் சன்னதியும் தெற்கே குளக்கரையின் மேல் பெரியாயி சன்னதியும் அமைந்துள்ளது.

 

திருவிழா: 

ஆடி வெள்ளிக்கிழமைகளும், நவராத்திரியும், கார்த்திகை தீபமும், தைப் பொங்கலும், மாசி மாத தேர்த்திருவிழாவும் இங்கு முக்கிய திருவிழாக்களாகும்.

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணிமுதல் மதியம் 12 மணி வரையிலும்,

பிற்பகல் 2 மணிமுதல் இரவு 8 மணிவரையிலும் திறந்திருக்கும்

இந்த சன்னதி அமாவாசையன்று இரவு முழுவதும் திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில்,

மேல்மலையனூர் – 604 204,

விழுப்புரம் மாவட்டம்.

 

போன்:    

+91 – 4145 – 234 291

 

அமைவிடம் :                    

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து வடக்குதிசையில் 20 கிலோமீட்டர் தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து கிழக்கு திசையில் 20 கிலோமீட்டர் தொலைவிலும் மேல்மலையனூர் திருத்தலம் உள்ளது. விழுப்புரத்திலிருந்து நிறைய பஸ் வசதி உள்ளது.

 

melmalayanur angala parameswari temple entrance

 

Share this:

Write a Reply or Comment

three × 1 =