April 30 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் (மருதமலை)

  1. அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     சுப்ரமணிய சுவாமி (மருதாசலமூர்த்தி)

அம்மன்         :     வள்ளி, தெய்வானை

தல விருட்சம்   :     மருதமரம்

தீர்த்தம்         :     மருது சுனை

புராண பெயர்    :     மருதவரை

ஊர்             :     மருதமலை

மாவட்டம்       :     கோயம்புத்தூர்

 

ஸ்தல வரலாறு :

நவகோடி சித்தர்களில்  முதன்மையானவர்கள் பதினெண் சித்தர்கள், அதில் பாம்பாட்டி சித்தரும் ஒருவர். பாம்பாட்டிசித்தர் வாழ்ந்த காலம் கி.பி 1200 ஆகும். கார்த்திகை மாதம் மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பிறந்தவர். பாம்பைப் பிடிப்பது அவற்றின் விஷத்தை சேமித்து விற்பது. இதுவே பாம்பாட்டி சித்தரின் தொழில். இவர் விஷமுறிவு மூலிகைகளைப் பற்றி அறிந்திருந்ததால் அந்த ஊரில் பாம்புக்கடிக்கு சிறந்த வைத்தியராகத் திகழ்ந்தார். ஒரு முறை மருதமலை அடிவாரம் வந்த போது பாம்பாட்டி சித்தர் பற்றி அறிந்தவர்கள் மலை மேலே நவரத்தினம் மாணிக்க கல் உடைய நாகசர்ப்பம் உள்ளது எனவும் , இந்த பாம்பை பிடித்தால் கோடிஸ்வரனாகி விடலாம் என ஆசைகூற பாம்பாட்டி சித்தருக்கும் ஆசை ஏற்பட மருதமலை ஏறி மாணிக்கல் உடைய பாம்பை தேடினார்.

அப்போது திடீரென பலத்த சிரிப்பொலி கேட்டுத் திரும்பினார். அங்கே மிகப் பிரகாசமான ஒளியோடு சாட்டைமுனி சித்தர் நின்றார். ‘இங்கு எதைத் தேடுகிறீர்கள்?’ என்று வினவினார். அதற்கு பாம்பாட்டி சித்தர் ‘நான் நவரத்ன பாம்பைப் பிடிக்க வந்தேன், அதைக் காணவில்லை’ என்றார். இதைக் கேட்ட சாட்டைமுனி சிரித்தார். ‘நவரத்ன பாம்பை உனக்குள் நீயே வைத்துக் கொண்டு வெளியே தேடுகின்றாயே! இது பயனற்ற செயல் அல்லவா! மிகுந்த உல்லாசத்தைத் தரக்கூடிய ஓர் பாம்பு எல்லோர் உடலிலும் உண்டு, ஆனால் யாரும் அதை அறிவதில்லை. அதனால் வெளியில் திரியும் இந்தப் பாம்பை தேடுவதை விட்டுவிட்டு, இல்லாத பாம்பைத் தேடி ஓடாதே’ என்றார். அப்படியா? என்றவாறே வியந்து சட்டமுனியை நோக்கி ”எமக்கு அதை காண அருள்வீரா” எனக்கேட்க, குண்டலினி, கூடு விட்டு கூடுபாய்தல், பிராயணமப் பயிற்சிகளை பாம்பாட்டி சித்தர்க்கு சொல்லி கொடுத்தார். எல்லாவற்றையும் கேட்டு உண்மையை உணர்ந்த பாம்பாட்டியார் சித்தரின் காலில் விழுந்து வணங்கினார். சட்டைமுனி சித்தர் அருள்புரிந்து விட்டு மறைந்தார்.

பாம்பாட்டி சித்தர்க்கு முருகப்பெருமான் மருதமலையில் மருதமரத்தடியில் பெருகும் மருததீர்த்தம் அளித்து சர்ப்ப ரூபத்தில் காட்சி கொடுத்ததாக வரலாறுகள் உண்டு. மருதமலை முருகர் சன்னதிக்கும் சித்தர் குகைக்ககும் வழி உள்ளதாகவும், அதன் வழியே பாம்பாட்டி சித்தர் தினமும் முருகப்பெருமானை தரிசிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றது.

மருதமலையில் முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார் என்றும், இந்த சிலையே மூலஸ்தானத்தில் இருக்கிறது, இரண்டு கரங்களுடன் உள்ள இவர், பழநி முருகனைப் போலவே, கையில் தண்டத்துடன், இடதுகையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தருகிறார். தலைக்கு பின்புறம் குடுமி உள்ளது. காலில் தண்டை அணிந்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். தினமும் ராஜ அலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக்காப்பு என மூன்றுவித அலங்காரங்களுடன் காட்சி தருவார். விசேஷ நாட்களில் வெள்ளிக்காப்பும், கிருத்திகை, தைப்பூசம் நாட்களில் தங்க கவசமும் அணிகிறார். அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இவரை தண்டாயுதபாணியாக சுய ரூபத்தில் தரிசிக்க முடியும். அப்போது ஆபரணம், கிரீடம் என எதுவும் இல்லாமல், வேட்டி மட்டும் அணிவிக்கின்றனர். அருணகிரியாரால் பாடப்பெற்றவர் இவர். இத்தலம் “ஏழாம்படை வீடாக’ கருதப்படுகிறது.

 

கோயில் சிறப்புகள் :

  • தமிழ் மரபுகளில்  மலையும்  மலை  சார்ந்த இடத்தை  குறிஞ்சி  நிலம்  என்றும்   வயலும்  வயல்  சார்ந்த  இடத்தை  மருதம் என்றும்  அழைக்கிறார்கள்.  இந்த  இரு  நில  அழகுகளையும்  தனதாக்கிக் கொண்டது  போன்ற   அற்புதமான  பெயருடன்  மருதமலை  என்று அழைக்கப்படும் ஸ்தலத்தில் முருகன் பிரகாசத்துடன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.    ‘இருநில  மீது  எளியனும்  வாழ  எனது  முன்  ஓடி  வர வேணும்’  என  அருணகிரி  நாதர்  பாடியுள்ளார்.

 

  • மருதமலை அதன் மூன்று  புறங்களிலும்  மலை அரண்களால்  சூழப்பட்டு  உள்ளது.    கோவிலுக்கு  பின்புறம்   அமைந்துள்ள மலைகளின்  இயற்கை  அமைப்போடு  சேர்த்து பார்க்கும்  போது  மயில்  தோகை விரித்தாற்போல்  காட்சி  அளிக்கிறது.    இதனால்  முருகன்  மயில்  மீது  அமர்ந்த தோற்றம்  நம்  கண்  முன்   தெரிகிறது.

 

  • புராதனமான சிவன் கோயில்களில் சிவன், சுயம்புலிங்கமாக இருப்பார். ஆனால், இத்தலத்தில் முருகன் சுயம்புமூர்த்தியாக இருக்கிறார். இவருடன் வள்ளி, தெய்வானையும் சுயம்புவடிவில் இருப்பது விசேஷம். முருகனுக்கு பின்புறத்தில் பிளவு இருக்கிறது. வள்ளி உயரமாகவும், தெய்வானை சற்று உயரம் குறைந்தும் காட்சி தருகின்றனர். இந்த முருகனே இத்தலத்தின் ஆதிமூர்தியாவார். இவரது சன்னதி “ஆதி மூலஸ்தானம்’ எனப்படுகிறது. இவருக்கு முதல் பூஜை செய்யப்பட்ட பின்பே, பிரதான முருகனுக்கு பூஜை நடக்கிறது.

 

  • மருத மரங்கள்  அதிகமாக காணப்படுவதால்  இந்த  மலை  மருதமலை  என  அழைக்கப்படுகிறது.    மேலும் மருதமால் வரை,  மருதவரை,  மருதவெற்பு,  மருதக்குன்று,  மருதலோங்கல்,   கமற்பிறங்கு,  மருதாச்சலம்,  வேள்வரை  என்றெல்லாம்  பேரூர் புராணத்தில் கூறப்படுகிறது.

 

  • கோயிலுக்குச் சென்றதும் பஞ்ச விருட்சத்தின் அடியில் அருள்பாலிக்கும் ஶ்ரீவிநாயகப் பெருமானை வணங்கிய பிறகே கோயிலுக்குச் செல்ல வேண்டும். அரசு, வேம்பு, அத்தி, வன்னி, கொரக்கட்டை என்ற ஐந்து மரங்களே அந்த பஞ்ச விருட்சங்களாகும்.

 

  • கி பி  12ம்  நூற்றாண்டில்  மருதமலைத்  திருக்கோவில் அமைக்கப்பட்டது என்றும்,  கொங்கு  நாட்டின்  24  பிரிவுகளுள்   ஒன்றான  ஆறைநாட்டின் எல்லையாக  மருதமலை  இருந்தது   என்றும்  அறியலாம்.

 

  • பேரூர் புராணம், காஞ்சிப்புராணம்,  அருணகிரிநாதரின்  திருப்புகழ்  முதலிய  நூல்களில் மருதமலை  சிறப்பித்துக் கூறப்பட்டு  உள்ளது.    மற்றும்  தேவாரப்பாடல்  பெற்ற தலமான திருமுருகன்பூண்டி  கோயில்  கல்வெட்டுகளில்,  மருதமலை   கோயில்  12-ஆம்  நூற்றாண்டைச்  சேர்ந்ததாகத் தகவல்கள்  உள்ளன.

 

  • மருதமலை அடிவாரத்தில்  அமைந்துள்ள  வேல்கோட்டம்  தியான  மண்டபம் என  அழைக்கப்படுகிறது.    இக்கோவிலில்  வேல்தான் மூலவர்    சுமார்  ஆறரை அடி  உயரம்  கொண்ட  அழகிய  சிற்ப  வேலைப்பாடுகளுடன்  கூடிய  வேல் கருவறையில்  பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது.    வேலின்  தண்டுப்பகுதியில் பஞ்சபூத  சக்கரங்கள்  செதுக்கப் பட்டுள்ளன    வேலின்  முகப்பில் இயற்கையான வெளிச்சம்  விழும்   விதத்தில்,  விதானத்தில்  ஒரு  சிறிய  துவாரம்  அமைக்கப் பட்டிருக்கிறது.   முன்  மண்டபம்  ‘சரவணபவ’  எனும்  ஆறெழுத்து மந்திரத்தைக் குறிக்கும்  வகையில்  அறுகோண  வடிவில் அமைந்துள்ளது.

 

  • மருதமலையின் அடிவாரத்திலிருந்து  நடைபயணமாக  மலையேறி  செல்லும் பாதையில்  படிகள்  ஆரம்பிக்கும்  இடத்தில்  தான்தோன்றி  விநாயகர்  சன்னதி உள்ளது.  இச்சன்னதியில்  விநாயகர்,  சுயம்புவாக  இருக்கிறார்    யானைத்தலை மட்டும்  உள்ள  இவருக்கு  உடல்  இல்ல.     இவர்,  மலையிலுள்ள  முருகன் சன்னதியை  நோக்கி,  தும்பிக்கையை  நீட்டி  காட்சி  தருவது  விசேஷம்.   அருகில்  மற்றொரு  விநாயகர்  சிலைபிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது    சுயம்பு விநாயகருக்கு  பூஜை செய்த  பின்பே,  பிரதான  விநாயகருக்கு  பூஜை நடக்கிறது.

 

  • இங்கு முருகன், ‘மருதாச்சலமூர்த்தி’ என்று அழைக்கப்படுகிறார். மருதமரமே இத்தலத்தின் விருட்சம். தீர்த்தத்தின் பெயர் ‘மருது சுனை’. இந்த தீர்த்தம் பிரசித்தி பெற்றது. மலையில் உள்ள ஒரு மருதமரத்தின் அடியில் இருந்து இந்த தீர்த்தம் உற்பத்தியாகி வருவதாக சொல்கிறார்கள். இந்த தீர்த்தமே சுவாமி அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

 

  • காமதேனு என்னும் தெய்வீகப்பசு இம்மலையில பசி நீங்க மேய்ந்து மருத மரத்தின் கீழ் இருந்த நன்னீரைப் பருகியதாக பேரூர் புராணத்தில் கச்சியப்ப முனிவர் கூறியுள்ளார்.

 

  • மிகப்பழமையான காலத்தே நம் முன்னோர்கள் வனத்தை இருப்பிடமாக கொண்டு வாழ்ந்து வந்தனர். பின்னர் நாகரீக வளர்ச்சியில் காடு கெடுத்து நாடாக்கப்பட்ட பின்பு தெய்வங்களுக்குப் பெருங்கோவில்கள் அமைக்கப்பட்டன. இவ்வாறு கோவில்கள் அமைக்கப்பட்ட போதிலும் ஆதியில் இருந்த மரத்தினை அழிக்காது அதனை இன்றளவும் சுவாமிக்கு அருகில் தல விருட்சம் (தலமரம்) என்ற பெயரில் வளர்த்து வருகின்றனர். அவ்வகையில் மருத மரமானது இங்கு ஸ்தல விருட்சமாக இருந்து வருகிறது.

 

  • திருக்கோவில் வளாகத்தில் மூலவர்க்கு சற்று தூரம் தள்ளி படிக்கட்டில் இருந்து கீழே சென்றால் பாம்பாட்டி சித்தர் கோவில் அமைந்துள்ளது. இந்த இடத்தை பாம்பாட்டி சித்தரின் குகை என்று கூறப்படுகிறது. இக்குகைக்கோயில் சிறு குடைவரை அமைப்பில் உள்ளது. உட்புறத்தில் ஒரு பாறை பாம்பு வடிவில் உள்ளது.

 

  • சுமார் 837 படிகளுடன் அமைந்த மலைக்கோயில் இது. வரதராஜப் பெருமாளுக்கு சன்னதி இருக்கிறது. பாம்பாட்டிச்சித்தர் சன்னதி செல்லும் வழியில் சப்தகன்னியர் சன்னதி உள்ளது. ஆடிப்பெருக்கின்போது இங்கு விசேஷ வழிபாடு நடக்கிறது. மலைக்கோயிலுக்குச் செல்லும் வழியில் நடுவே இடும்பன் சன்னதி இருக்கிறது. இச்சன்னதி எதிரே புலி வாகனம் உள்ளது.

 

  • பாம்பாட்டிச்சித்தர் சன்னதியிலுள்ள பாறையில் நாக வடிவம் இருக்கிறது. இந்த நாகத்தின் வடிவிலேயே பாம்பாட்டிச்சித்தருக்கு முருகன் காட்சி தந்தார். இந்த நாகத்தை முருகனாகவே பாவித்து வழிபடுகிறார்கள். இதன் பின்புறம் பீடம் போன்ற அமைப்பில் மூன்று வடிவங்கள் உள்ளது. இவற்றை சிவன், கணபதி, அம்பிகையாக கருதி பூஜை செய்கிறார்கள். பொதுவாக முருகன்தான் சிவன், அம்பாளுக்கு நடுவில் காட்சி தருவார். இங்கு விநாயகர், பெற்றோருக்கு மத்தியில் காட்சியளிப்பது விசேஷம்.

 

  • குமரன் வீற்றிருக்கும், குன்றிருக்கும் மலைகளில் மருதமலைக்குத் தனிச் சிறப்பு உண்டு. இந்த மலையில், மட்டுமே தேரோட்டம் உண்டு. மற்ற மலைகளில் தங்க ரதம் மட்டுமே வலம் வரும். இங்குள்ள தேர் 20 அடி உயரம், 12 அடி அகலம், 10 டன் எடையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

திருவிழா: 

வைகாசி விசாகத்தன்று முருகனுக்கு 108 பால் குட அபிஷேகம் நடக்கிறது, தைப்பூசத்தை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. பூசத்தன்று காலையில் திருக்கல்யாணம், மாலையில் தேர்த்திருவிழா நடக்கும். அன்று சுவாமி, யானை வாகனத்தில் எழுந்தருள்வார்.தினமும் மாலையில் தங்க ரதத்தில் சுவாமி வலம் வருகிறார்

 

திறக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் 1 மணி வரை

மதியம் 2 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்,

மருதமலை – 641046

கோயம்புத்தூர் மாவட்டம்.

 

போன்:

+91-422-2422 490

 

அமைவிடம் :

கோயம்புத்தூரில் இருந்து 14 கி.மீ., தூரத்தில் மருதமலை இருக்கிறது. காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் வசதி உண்டு.

 

Share this:

Write a Reply or Comment

fourteen − two =