அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : திருமாகறலீஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர், நடராஜர்
அம்மன் : திரிபுவனநாயகி
தல விருட்சம் : எலுமிச்சை
தீர்த்தம் : அக்னி
புராண பெயர் : திருமாகறல்
ஊர் : திருமாகறல்
மாவட்டம் : காஞ்சிபுரம்
ஸ்தல வரலாறு :
மும்மூர்த்திகளில் தானே சிறந்தவன் என்று செருக்குற்று இருந்த பிரம்மாவை சிவபெருமான் சபித்தார். தனது சாபம் நீங்க பிரம்மா இத்தலம் வந்து ஒரு லிங்கம் பிரதிஷடை செய்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றார். பின்பு சத்தியலோகம் செல்லும் போது ஆண்டு முழுவதும் காய்க்கும் அதிசயப்பலாமரம் ஒன்றை நட்டார். அப்பலாமரம் நாள்தோறும் கனி கொடுத்து வந்தது. ராஜேந்திர சோழ மன்னன் இந்த அதிசய பலாமரத்தைக் கண்டு வியந்து அந்த ஊரிலிருந்து தினமும் ஒருவர் இந்த பழத்தை எடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் சேர்க்க வேண்டுமென உத்தரவிட்டான். நடராஜருக்கு இப்பழத்தை மதிய வேளையில் நைவேத்தியம் செய்து அதை மன்னருக்கு கொடுப்பது வழக்கம். தினந்தோறும் வீட்டுக்கு ஒருவர் என்ற முறையில் மன்னனுக்கு சென்று கொடுத்து வந்தனர்.
ஒருமுறை அந்தண சிறுவனின் முறை வந்தது. இந்த மரத்தில் இருந்து தினமும் பழம் பறித்துப் போக மக்களை ஏவும் மன்னன் வேலைக்காரர்களை இதற்கென நியமித்திருக்கலாமே என எண்ணிய அவன் ஒரு தந்திரம் செய்தான். அந்த ஊர் மக்களிடம் நான் சிறுவன் பழத்தை சுமக்க சிரமப்படுவேன் நீங்கள் எல்லோரும் போய் இந்த பழத்தை கொடுத்து வாருங்கள். நான் இங்கிருந்து உங்கள் வீடுகளை பார்த்து கொள்கிறேன் என்று கூற அனைவரும் சிதம்பரம் சென்று விட்டனர். இந்த மரம் இருந்தால் தானே பிரச்னை வரும். இதை அழித்து விட்டால் நம் ஊர் மக்கள் தினமும் பழம் சுமக்கும் தொல்லை இருக்காதே எனக் கருதியவன் அந்த மரத்தை எரித்து விட்டான். ஊர் திரும்பிய மக்களிடம் பலாமரத்தில் தானாக தீப்பிடித்து சாம்பலாகி விட்டதாக தெரிவித்தான். ஊராரும் நம்பிவிட்டனர். மறுநாள் பலாப்பழம் சிதம்பரம் செல்லவில்லை. அந்த சிறுவனை அழைத்து மன்னர் விசாரித்தார். அப்போது அவன் பலாப்பழத்தை சிதம்பரம் கொண்டு வருவதற்கு தாங்கள் எங்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை. எனவே தான் மரத்தை எரித்தேன் என்றான்.அதற்கு மன்னன் தகுந்த வசதி வேண்டும் என நீ இதை என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். இதை நீ செய்யாததால் உனது கண்களை கட்டி நாடு கடத்த உத்தரவிடுகிறேன் என்றான்.
காவலர்கள் சிறுவனை அழைத்துச் சென்ற போது மன்னனும் கூடச் சென்று தண்டனை நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்துகொண்டு திரும்பினான். அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு விடப்பட்ட ஊர் திருத்தணிக்கும் திருவள்ளுருக்கும் இடையில் விடிமாகறல் என்று வழங்கப்படுகிறது. அரண்மனைக்கு வரும் வழியில் ஓரிடத்தில் பொன்னிற உடும்பு ஒன்று தென்பட்டது. அதை பிடிக்க காவலாளிகள் சென்ற போது அது ஓர் புற்றினுள் சென்று மறைந்தது. மன்னன் ஆட்கள் சிலரை அழைத்து புற்றைச் சோதித்துப் பார்க்க உத்தரவிட்டான். காவலாளிகள் அந்த புற்றை ஆயுதங்களால் அந்த புற்றை கலைத்த போது உடும்பின் வாலிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அப்போது அசரீரி தோன்றி சிறுவன் என்றும் பாராமல் நாடு கடத்தியதற்காக கண்டனக்குரல் எழுந்தது. மன்னன் மயங்கி விழுந்தான். மயக்கம் தெளிந்த மன்னனிடம் மீண்டும் அசரீரி தோன்றி சிவபெருமானே உடும்பாக வந்ததாகவும் அவ்விடத்தில் ஓர் சிவாலயம் கட்டி வழிபாடு செய்யும்படியும் ஆணையிட்டார். மன்னனும் அதன்படியே செய்தான். இன்றும் கூட உடும்பின் வால் அளவிலுள்ள லிங்கம் தான் மூலஸ்தானத்தில் உள்ளது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. குலோத்துங்க சோழன், சுந்தரபாண்டியன், விசயகண்ட கோபாலதேவர் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளது. கல்வெட்டுக்களில் இத்தலம் சயங்கொண்ட சோழமண்டலத்துப் பொற்கோட்டத்து மாகறல் நாட்டு மாகறல் என்றும் கோயிலுக்கு நிலங்கள் விடப்பட்டச் செய்திகளும் குறிக்கப்பட்டுள்ளன. திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனை போற்றிப்பாடிய பதிகத்தை உணர்ந்து ஓதவல்லவர்களின் தொல்வினைகள் நீங்கும் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.
கோயில் சிறப்புகள் :
உற்சவர் சோமாஸ்கந்தர், நடராஜர். மூலவர் திருமாகறலீஸ்வரர், அடைக்கலங்காத்த நாதர், உடும்பீசர். இறைவன் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மகம்வாழ்வித்தவர், பாரத்தழும்பர், புற்றிடங்கொண்டார், நிலையிட்ட நாதர், மங்கலங்காத்தவர், பரிந்து காத்தவர், அகத்தீஸ்வரர் ஆகிய பெயர்களும் உண்டு.
இறைவன் உடும்பின் வால் போன்று காட்சி அளிக்கிறார். அம்பாள் திரிபுவனநாயகி, புவனநாயகி. தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்
செய்யாற்றின் வடகரையில் கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடனும், இரண்டு பிராகரங்களுடனும் இவ்வாலயம் உள்ளது. பிராகாரத்தில் பொய்யாவிநாயகர், ஆறுமுகர், 63 நாயன்மார்கள், நால்வர், நவக்கிரகங்கள் சந்நிதிகள் உள்ளன. கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், சிறிய தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை திருமேனிகள் உள்ளன. விசாலமான வெளிப்பிரகாரம் வலமாக வந்து படிக்கட்டுகளையேறி விநாயகர் மறுபுறம் சுப்பிரமணியர், துவாரபாலகர்கள் உள்ளனர்.
இராஜேந்திர சோழ மன்னருக்கு பென்னுடும்பின் வால் வடிவில் இவ்வாலயத்தின் இறைவன் காட்சியளித்துள்ளார்.
மூலவரின் விமானம் கஜபிருஷ்ட (யானையின் பின் பகுதி) அமைப்பில் அமைந்துள்ளது. விமானத்தில் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தி உள்ளார்.
சம்பந்தரின் இங்கு பாடிய பதிகம் ‘வினை நீக்கும் பதிகம்’ என்னும் சிறப்புடையது
இக்கோயிலில் யானைமீது முருகன் அமர்ந்திருக்கும் அபூர்வ திருமேனி அழகுறக் காட்சித் தருவதைக் காணலாம்.
இத்தலத்தில் முருகப்பெருமான் மயில்மீது ஆறு திருமுகங்களுடன் இருதேவியர் உடனிருக்க வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
முருகப்பெருமான் சூரபத்மன் முதலிய அரக்கர்களை அழிக்க போர் செய்த போது தப்பிப் பிழைத்த மாக்கிரகன் என்ற அசுரன் சிவபூஜை செய்து வந்தான். அவன் இத்தலம் வந்த போது இங்குள்ள இறைவனுக்கு தன் பெயரால் மாக்கிரன் என பெயர் சூட்டினான். இப்பெயர் மருவி மாகறலீசர் என்று மாறியது.
திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இந்திரன் முருகனுக்கு திருமணப்பரிசாக வெள்ளை யானையை கொடுத்தான். புதுமணத்தம்பதிகளை வெள்ளையானையில் அமரச்செய்து அக்காட்சியை கண்ணாற கண்டு மகிழ்ந்தான். மகாவிஷ்ணுவும் இக்காட்சியை காண விரும்ப முருகன் இத்தலத்தில் வெள்ளையானை மீது அமர்ந்து காட்சி தந்தார்.
மக்கட்பேறு வேண்டுவோர் இங்கு வந்து அங்கப்பிரதட்சணம் செய்யும் வழக்கம் முன் காலத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
சேலம் சுப்பராயப் பிள்ளை என்பவர் தம் உடலில் இடுப்பின் கீழ் செயலற்றுப் போக எல்லாவித மருத்துவமும் செய்து பலனின்றிப்போக, திருமுறையில் கயிறுசார்த்திப் பார்த்து, இத்தலப்பதிகம் வர, இங்கு வந்து தங்கி, நாடொறும் இறைவனை வழிபட்டுத் தலப்பதிகத்தைப் பாராயணம் செய்து சிலகாலம் வாழ்ந்து இப்பெருமானருளால் உடல் பூரணகுணம் பெற்றுத் திரும்பினார். இந்நிகழ்ச்சி அண்மைக் காலத்தில் நிகழ்ந்ததாகும். இப்பகுதியில் உள்ள சமய அன்பர்கள் அனைவரும் இதை அறிவர்.
திருவிழா:
மாசி மாதம் பத்துநாள் பிரம்மோற்ஸவம்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை,
மாலை மணி 6 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்,
திருமாகறல் -631 603,
காஞ்சிபுரம் மாவட்டம்.
போன்:
+91- 94435 96619.
அமைவிடம் :
காஞ்சிபுரத்திலிருந்து 16 கி.மீ. தூரத்திலுள்ள இவ்வூருக்கு, கீழ்ரோடு வழியாக உத்திரமேரூர் செல்லும் பஸ்களில் செல்ல வேண்டும்.