அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில் வரலாறு
மூலவர் : யோக நரசிம்மர் (அக்காரக்கனி )
உற்சவர் : பக்தவத்சலம், சுதாவல்லி
தாயார் : அமிர்தவள்ளி
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம், தக்கான்குளம்
புராண பெயர் : திருக்கடிகை, சோளசிம்மபுரம்
ஊர் : சோளிங்கர்
மாவட்டம் : வேலூர்
நாளை என்பது இல்லை நரசிம்மனிடத்தில் உங்கள் வேண்டுதல் நியாயத்தின் அடிப்படையில் தர்மப்படி வேண்டிய அப்போதே உடனே அங்கேயே அருளுபவர் நரசிம்மர். திருமாலின் தசாவதாரங்களில் திடீரென தோன்றி அருளியவர் நரசிம்மர்.
ஸ்தல வரலாறு :
நாரயணன் எடுத்த அவதாரங்களிலேயே ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். ஏனெனில் இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார் என்ற உண்மையைக் கண் கூடாக வெளிப்படுத்திய அவதாரம் அது மட்டுமில்லாமல் சிறுவன் பிரகலாதனின் சொல்லை சத்தியமாக்க உதவிய அவதாரமும் ஆகும். பக்த பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர் வசிஷ்டர் கஸ்யபர் அத்திரி மகரிஷி ஜமத்கனி கவுதமர் பரத்வாஜர் ஆகிய சப்த ரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். விஸ்வாமித்திரர் இம்மலையில் ஒரு நாழிகை (24 நிமிடம்) நேரம் நரசிம்மரை துதித்து பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். இந்த ஆலயத்தில் ஒரு நாழிகை நேரம் இருந்தாலே அனைத்து துன்பமும் விலகும். இங்கு ஒரு நாழிகை நேரம் (24 நிமிடம்) தங்கியிருந்து நரசிம்மனை தரிசித்தால் அனைத்தும் கிடைக்கும் என புராண நூல்கள் சொல்லுகின்றன
ராமாவதாரம் முடிந்ததும் ராமன் ஆஞ்சநேயரிடம் இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதைப் போக்கி வை என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து ராமரை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து ரிஷிகளை காப்பாற்றினார். இதனை கண்ட ராமர் அனுமனிடம் நீ எனக்கு முன்பாக கையில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்து என் பக்தர்களின் குறைகளை போக்கி அருள்வாயாக என அருளினார். அதன்படி நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையலில் யோக ஆஞ்சநேயராக சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.
வட மதுரையை ஆட்சி செய்து கொண்டு இருந்த இந்திரத்துய்மன் என்ற அரசர் கடுமையான கோபம் கொண்டவர். எதற்கு எடுத்தாலும் இவருடைய வாய் பேசாது. அவர் கையில் இருக்கும் போர்வாள் தான் பேசும். இப்படி சினம் கொண்ட அரசர் ஸ்ரீ நரசிம்மரின் தீவிர பக்தர். அரசர் இந்திரத்துய்மன் நரசிம்மரை வணங்குவதால் நரசிம்மரை போல் கோபம் அதிகம் ஏற்படுகிறது. அதனால் அரசரை ஸ்ரீ யோக நரசிம்மரை வணங்க சொல்லலாம் என்று அமைச்சர்களுக்குள் பேசி அதை பக்குவமாக அரசருக்கு எடுத்து சொல்ல ஒரு அமைச்சர் மன்னரிடம் சென்றார். அரசரிடம் சென்ற அமைச்சர் நரசிம்மரை வணங்கினால் வீரம் கிடைக்கும். அது போலவே ஸ்ரீயோக நரசிம்மரை வணங்கினால் செல்வம் செல்வாக்கு கிடைக்கும். வாழ்க்கைக்கு தேவையானது முக்கியமானது மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை தரக் கூடியவர் ஸ்ரீயோக நரசிம்மர் என்ற அமைச்சரின் பேச்சு அரசருக்கு ஸ்ரீயோக நரசிம்மரை வணங்க வேண்டும் என்ற மன மாற்றத்தை தந்தது. ஸ்ரீ யோக நரசிம்மரை வணங்க தொடங்கினார் இந்திரத்துய்மன். ஒரு நாள் அரசர் காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றார். மான் ஒன்று பொன்னை போன்று ஜொலித்தது. அதை கண்ட அரசர் அந்த மானை தன் அரண்மனைக்கு அழைத்து செல்ல விரும்பி மானை பிடிக்க நினைத்தார். ஆனால் அந்த மானை பிடிக்க முடியவில்லை. பொன் மான் மன்னருக்கு விளையாட்டு காட்டியது. இதனால் சோர்வடைந்த மன்னர் ஒர் இடத்தில் களைப்பாக அமர்ந்தார். அப்போது அந்த பொன் மான் மன்னர் கண் முன்னே ஒரு ஜோதியாக மாறி ஆஞ்சநேயனாக காட்சி கொடுத்து நான் என்றும் உனக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று கூறி மறைந்தார். யோக நரசிம்மரின் அருளால்தான் தமக்கு அஞ்சனேயர் ஆசி கிடைத்திருக்கிறது என்று ஆனந்தம் கொண்ட அரசர் மகிழ்ந்து அனுமனுக்கு அதே இடத்தில் கோயில் கட்டினார். பிற்காலத்தில் வந்த சோழர்கள் அங்கு கற்கோவிலாகக் கட்டினார்கள்.
கோயில் சிறப்புகள் :
- சோளிங்கர் சோளிங்கபுரம் என்று தற்போது வழங்கப் பெறும் இவ்வூர் பண்டைக் காலத்தில் திருக்கடிகை என்ற பெயரில் வழங்கப் பெற்றுள்ளது. இதனை பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரத்தின் மூலமும் திருமங்கையாழ்வார் பாசுரங்களின் மூலமும் அறியலாம்.
- புராண நூலின் படி இம்மலையின் பெயர் கடிகாசலம் என்பதாகும். கடிகா என்பதும் கால அளவின் ஒரு கூறு. அசலம் என்றால் மாலை. நரசிம்ம பெருமாள் இரண்ய வதத்தை முடித்துக் கொண்டு பாற்கடலுக்கு செல்லும் வழியில் அகத்தியருக்கு கடிகை மாத்திரைப் பொழுது காட்சியளித்ததால் கடிகாசலம் எனப் பெயர் பெற்றது.
- நரசிம்மர் குடிகொண்டுள்ளதால் சிம்மபுரம் எனவும் சோழர்கள் நாட்டின் எல்லையாக ஒரு காலத்தில் இது இருந்ததால் சோழ சிம்மபுரம் என அழைக்கப்பட்டது.
- சோளிங்கர் மலையில் 750 அடி உயரத்தில் 1305 படிக்கட்டுகளுடன் கடிகாசலம் எனும் மலை குன்றின் மீது 200 அடி நீளம் 150 அடி அகலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் இக்கோயில் அமைந்துள்ளது. யோக நரசிம்மர் வீற்றிருந்த திருக்கோலத்தில் சாளக்கிராம மாலை அணிந்து கொண்டு சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களுடன் இருகால்களையும் யோகாசனத்தில் மடித்து அமர்ந்தபடி யோகப் பட்டையுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவருக்கு அக்காரக்கனி என்ற பெயரும் உள்ளது.
- நாச்சியார் அம்ருதவல்லித் தாயார் என்ற திருநாமத்தோடு அழைக்கப் படுகிறாள். உலக உயிர்களைக் காப்பதற்கு உரிய முறையில் பெருமாளுக்கு உதவுவதால் அம்ருதவல்லி என வழங்கப்படுகிறாள். ஆரம்பத்தில் மலை ஏறும் வழியில் தாயாருக்கு தனிச் சன்னதி இருந்தது. சில காலத்திற்கு முன் அந்த சன்னதி சிதிலமடைந்த போது தாயார் மலை மீது கொண்டு தனி சன்னதியில் வைக்கப்பட்டாள்.
- அக்கார அடிசல் எனும் விசேஷப் பாயசம் நரசிம்மருக்கு படைக்கப் படுகிறது. வெள்ளிக் கிழமைகளில் பெருமாளுக்கும் தாயாருக்கும் பால் தயிர் தேன் சர்க்கரை நெய் ஆகியவற்றைச் சேர்த்து பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது.
- ஆண்டின் 11 மாதங்கள் யோக நிலையில் தரிசனம் தரும் நரசிம்மர் கார்த்திகை மாதம் முழுவதும் கண் திறந்த நிலையில் அருள் பாலிக்கிறார்.
- இம்மலைக்கு கிழக்கே உள்ள சிறிய குன்றில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 406 ஏறிக் கடக்க வேண்டும். இந்த ஆஞ்சநேயர் நரசிம்மரைப் போலவே யோக நிலையில் நான்கு திருக்கரங்களுடன் ஒரு கையில் சங்கு ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெப மாலையுடன் அமர்ந்திருக்கிறார்.
- ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது. பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை அம்ருதவல்லித் தாயாரிடம் கூறினால் அவர் நரசிம்மரிடம் அதை பரிந்துரைப்பார். நரசிம்மர் அக்கோரிக்கையை நிறைவேற்றச் சொல்லி ஆஞ்சநேயரிடம் கூறுவார். எனவே இங்கு தாயார் பெருமாள் பின்பு ஆஞ்சநேயர் என தரிசிக்க வேண்டும்.
- தீர்த்தம் தாயார் பெயரால் அம்ருத தீர்த்தம் என்றும் பெருமாள் பெயரால் தக்கான் குளம் மற்றும் பாண்டவ தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. கோவிலில் வைகாசை ஆகமம் முறைப்படி பூஜைகள் நடத்தப்படுகிறது. யோகநரசிம்மருக்கும் தாயாருக்கும் வெள்ளிக் கிழமை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். யோக ஆஞ்சநேயருக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது.
- பொதுவாக பெருமாள் கோயில்களில் மூலவரின் கருவறையிலேயே உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வார்கள். ஆனால் இங்கு கருவரையில் மூலவர் மட்டுமே அருள் பாலிக்கிறார். உற்சவர் பக்தோசித பெருமாள் சுதாவல்லி அமிர்தவல்லி எனும் தனது இரு தேவியருடன் மலை அடிவாரத்திலிருந்து 2 கிமீ தூரத்தில் தனிக் கோவில் கொண்டுள்ளார். அங்கு அமிர்தவல்லித் தாயார் மற்றும் சுதாவல்லி தாயார் தனித்தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார்கள்.
- அமிர்த தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன.
- உற்சவர் பக்தவத்ஸல பெருமாள் பக்தர்களை அன்போடு அரவணைத்துச் செல்வதால் பக்தவத்ஸலன் எனப்படுகிறார்.
- உசிதம் என்றால் விருப்பம் எனப்படும். பக்தர்கள் விருப்பப்படி அருளவல்லவர் ஆகையால் பக்தோசிதப் பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். அருளுவதில் தக்கவராக இருப்பதால் தக்கான் எனவும் அழைக்கப்படுகிறார்.
- இங்கு பிறந்த தொட்டாச்சார்யர் ஆண்டு தோறும் காஞ்சி சென்று வரதராஜப்பெருமாளை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை உடல் நிலை சரியில்லாத இவரால் காஞ்சி செல்ல முடியவில்லை. இங்கு உள்ள தக்கான் குளக்கரையில் அமர்ந்து காஞ்சி பெருமாள் கோயிலில் நடக்கும் கருட சேவையை நினைத்து பார்க்க முடியவில்லையே என்று வருந்தினார். உடனே பெருமாள் கருட வாகனத்தில் இங்கு உள்ள நரசிம்ம குளத்தில் தரிசனம் தந்தார். இன்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் பெருமாள் கருட வாகனத்தில் சோளிங்கர் தக்கான் குளத்திற்கு எழுந்தருளி தொட்டாச்சார்யருக்கு அருள் பாலிக்கிறார். இந்தக் குளத்தில் நீராடினால் பிரம்மதோஷம் கூட நீங்கும் என்று புராண நூல்கள் குறிப்பிடுகிறது
- தொண்டை நாட்டு 22 திவ்யதேசங்களில் ஒப்பற்ற திவ்யதேசம் இது. காஞ்சிபுரத்திற்கும், திருவேங்கடமலைக்கும் இடையிலுள்ள திவ்ய தேசம் ஆகும். சப்தரிஷிகளுக்காக கோபம் தணிந்து யோக முத்திரையில் தியான கோலத்தில் காட்சியளித்த இடம்.
- சுவாமி உட்கார்ந்திருக்கும் பாறை அடிவாரம் வரை ஒரே மலையைச் சேர்ந்த குன்று என்பது அதிசயம்.
திருவிழா:
சித்திரை மாதம்:
- சித்திரை பெருந்திருவிழா, பத்து நாட்கள் நடைபெறும். தங்க கருட சேவை திருத்தேர்.
- இராமானுஜர் விழா 10 நாட்கள்.
வைகாசி மாதம்:
- நரசிம்ம ஜெயந்தி,
- வசந்த உற்சவம்,
- வைகாசி கருட சேவை தொட்டாசார் சவை,
- நம்மாழ்வார் விழா 10 நாட்கள்.
ஆனி மாதம்
- கோடைத்திருநாள் (3நாட்கள்),
- பரதத்துவ நிர்ணயம் கருட சேவை,
- ஆதிகேசவப்பெருமாளுக்கு வருஷ திருநட்சத்திரமான திருவோண விழா.
ஆடி மாதம்
- ஆண்டாள் திருவாடிப்பூர விழா 10 நாட்கள் திருவாடிப் பூரத்தன்று திருக்கல்யாண புறப்பாடு.
- ஆடி பவுர்ணமி கஜேந்திர மோட்சம் கருடசேவை.
- ஜேஷ்டாபிஷேகம்(கவசம் களைந்து திரு அபிஷேகம் நடந்து பின் கவசம் அணிதல்).
ஆவணி மாதம்
- திருப்பவித்ரோற்சவம்-7நாட்கள். பெரியமலையில் நடை பெறும்.
- ஸ்ரீஜெயந்தி- மறுநாள் உரியடி கண்ணனுக்கும் பெரு மாளுக்கும் நான்கு வீதி புறப்பாடு.
புரட்டாசி மாதம்
- நவராத்திரி உற்சவம் 10-நாட்கள் பெருமாள், தாயார் இரு வருக்கும்.
- விஜயதசமி, குதிரை வாகனம்.
ஐப்பசி மாதம்
- டோலோற்சவம் எனும் ஊஞ்சல் திருவிழா 5 நாள் நடை பெறும்.
- மணவாள மாமுனிகள் 10 நாள் உற்சவம்.
- கடை வெள்ளிக்கிழமை.
- தீபாவளி ஆஸ்தானம்.
- வனபோஜனம்.
கார்த்திகை மாதம்
- பெரியமலையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சிறியமலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் உற்சவ புறப்பாடு. திருமஞ்சனம் முதலிய விசேஷம்.
- கார்த்திகை தீபத் திருவிழா- சொக்கப்பனை கொளுத்துதல்.
- திருமங்கையாழ்வார் 10 நாள் உற்சவம்.
- அனுமன் ஜெயந்தி சின்னமலையில் ஸ்ரீஆஞ்ச நேயருக்கு விசேஷ உற்சவம்.
மார்கழி மாதம்:
- பகல் பத்து திருநாள்,
- வைகுண்ட ஏகாதசி,
- முக்கோடி துவாதசி தீர்த்தவாரி உற்சவம்,
- இராப்பத்து திருநாள். இறுதி நாளில் நம்மாழ்வார் பரமபதம் புகும் திருவடி தொழும் விழா,
- ஆண்டாள் மார்கழி நீராட்டம் 3 நாள் நடைபெறும்.
- ஜனவரி முதல் தேதி திருப்படித் திருவிழா
தை மாதம்:
- பொங்கல்-சங்கராந்தி ஆண்டாள் திருக்கல்யாணம்,
- கனுப்பாரி (பரி) வேட்டை,
- கிரி பிரதசட்னம்,
- தைப்பூசம்,
- தை அமாவாசை தொடங்கி தெப்பல் உற்சவம் 3 நாள் நடைபெறும்.
மாசி மாதம்:
- தவன உற்சவம், 3 நாள்,
- மாசி உத்திரரடத் திருநாள் 10 நாள். (சுவாமி தொட்டாசார்- அவதார உற்சவம்),
- மாசி மகம்- தெப்பல் உற்சவம் 3 நாள்.
பங்குனி மாதம்:
- யுகாதி (அ) தெலுங்கு வருடப்பிறப்பு உற்சவம். பஞ்சாங்க சிரவணம்,
- பெரியமலையில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணம்.
திறக்கும் நேரம்:
மலைக்கோயில்களில் காலை 8 முதல் மாலை 5.30 மணிவரை தரிசனம் செய்யலாம்.
முகவரி:
அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில்,
சோளிங்கர்- 631102.
வேலூர் மாவட்டம்
போன்:
+91- 4172 263515
அமைவிடம் :
சோளிங்கர் தலமானது வேலூர் மாவட்டத்தில் உள்ளது. திருத்தணி-சித்தூர் நெடுஞ்சாலையில் திருத்தணிக்கு 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு செல்ல அரக்கோணத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு.