March 31 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… புன்னைநல்லூர்

புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் வரலாறு

 

மூலவர்        :     மாரியம்மன் ( முத்துமாரி), துர்க்கை

தல விருட்சம்   :     வேம்புமரம்

தீர்த்தம்         :     வெல்லகுளம்

புராண பெயர்    :     புன்னைவனம்

ஊர்             :     புன்னைநல்லூர்

மாவட்டம்       :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு :

சோழர்கள் தங்களின் படை பலத்தை மட்டுமின்றி அம்பிகையின் பாதுகாவலையும் திடமாக நம்பினார்கள். தங்கள் தலைநகரின் எட்டு திக்கிலும் அம்பிகைக்கு ஆலயம் அமைத்தார்கள். அதன்படி தஞ்சைக்குக் கிழக்கே கோயில் கொண்டவளே இந்த மாரியம்மன்.

சோழர்கள் காலத்துக்குப் பிறகு அம்பிகையின் நினைப்பும் மறந்து போனது, நாட்டு மக்களுக்கு. பின்னர் 17ம் நூற்றாண்டில் வெங்கோஜி மன்னர் காலத்தில் மீண்டும் வழிபாடுகள் நடந்தன. அதன் பிறகும் என்ன காரணத்தினாலோ இங்கே வழிபாடுகள் தடைப்பட்டுப் போயின.

பிற்காலத்தில் மராட்டிய மன்னர் துளஜா என்ப வரின் மகளுக்கு வைசூரி கண்டு பார்வை பறிபோனது. மன்னர் வேதனை கொள்ள, அவரின் கனவில் சிறுமியாய் வந்து தன்னையும் தான் இருக்கும் இடத்தையும் அம்பிகை வெளிப்படுத்தினாள்.

அம்மன் சொன்னபடி அவள் இருக்கும் இடத்தை அறிந்த மன்னர், சதாசிவ பிரம்மேந்திரரின் வழிகாட்டுதலுடன் அவளுக்கு கோயில் அமைத்ததாகச் சொல்வர். அவர் அம்மனை பூஜிக்க, அவர் மகளுக்கும் அம்மன் அருளால் பார்வை கிடைத்ததாம். புன்னை மரங்கள் நிறைந்த வனத்தில் குடி கொண்டதால் புன்னைநல்லூர் என்று தலம் பெயர் பெற, அங்கே மாரியம்மனாக கோலோச்சுகிறாள் அம்பிகை!

கோயில் சிறப்புகள் :

  • இத்தலத்தில் அம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு சதாசிவ பிரம்மேந்திரரால் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது

 

  • சதாசிவ பிரம்மேந்திர சுவாமி புற்றுவடிவில் இருந்த அம்மனுக்கு மாரியம்மன் வடிவத்தைக் கொடுத்து, ஸ்ரீசக்ரமும் பிரதிஷ்டை செய்தார்.

 

  • அம்மனின் விக்கிரகம் புற்றுமண்ணால் ஆனது என்பதால், அபிஷேகம் கிடையாது ஐந்து வருடங் களுக்கு ஒருமுறை தைலக் காப்பு மட்டுமே. ஒரு மண்டல காலத்துக்கு இந்த தைலக்காப்பு நடைபெறும். அப்போது அம்மனைத் தரிசிக்க இயலாது என்பதால், வெண்திரையில் அம்மனின் உருவை வரைந்து, அந்த  திரைக்கே அர்ச்சனை ஆராதனைகள் நடைபெறும்

 

  • விஷ்ணு துர்க்கைக்கும் அம்பாள் உற்சவ மூர்த்திக்கும் நித்தியபடி அபிஷேகம் நடைபெறுகிறது.

 

  • அம்மன் சன்னதிக்கு அருகில் உள்ள தொட்டி உள்தொட்டி என்றும், பிரகாரத்தை சுற்றி உள்ள தொட்டி வெளித்தொட்டி என்றும் அழைக்கப்படுகிறது. அம்மை நோய்கண்டவர்கள் இந்த இரண்டு தொட்டிகளிலும் குடம் குடமாக தண்ணீர் ஊற்றுகின்றனர். இவ்வாறு செய்வதால் அம்பாளின் உஷ்ணம் தணிக்கப்படுகிறது.

 

  • ஒவ்வொரு வருடமும் கோடைநாட்களில் அம்பாளுக்கு முகத்திலும், சிரசிலும் முத்து முத்தாக வியர்வை வியர்த்து தானாக மாறிவிடும் பழக்கம் தற்போது வரை உள்ளது. இதன் காரணமாகவே அன்னையை முத்து மாரி என்று அழைக்கின்றார்கள்.

 

  • தமிழகத்திலேயே மிகச் சிறப்பாக முத்துப்பல்லக்கு திருவிழா நடைபெற்று வருவது, இக்கோவிலில் மட்டும்தான். மற்ற கோவில்களில் பல்லக்கு உற்ஸவங்கள் நடைபெற்றாலும், அவையெல்லாம் சிறிய அளவிலான பல்லக்குகளாக அமைக்கப்பட்டிருக்கும், புன்னைநல்லூர் உற்ஸவர் மாரியம்மன் பவனி வரும் முத்துப்பலக்கு மிகப் பிரம்மாண்டமானதாகும்.

 

  • சரபோஜி மன்னர் தஞ்சையை ஆண்ட காலத்தில், மகா மண்டபம், நர்த்தன மண்டபம், கோபுரம் மற்றும் இரண்டாவது பெரிய சுற்றுச்சுவர் கட்டி பெரும் திருப்பணி செய்யப்பட்டது. மராட்டிய மன்னரான சிவாஜி இக்கோயிலுக்கு 3வது திருச்சுற்றும், ராணி காமாட்சியம்பா பாயி சாகேப் உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபமும் கட்டி கொடுத்துள்ளனர்

 

  • இத்திருக்கோயில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 திருக்கோயில்களில் ஒன்றாகும்.

 

திருவிழா: 

  • ஆடி மாதம் – முத்துப்பல்லக்கு

 

  • ஆவணி மாதம் – கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறும்.

 

  • புரட்டாசி மாதம் – தெப்ப உற்சவம் மற்றும்

 

  • நவராத்திரி திருவிழா

 

திறக்கும் நேரம்:

திங்கள் முதல் சனி வரை காலை 5.30 மணி முதல் இரவு 9 வரை.

ஞாயிறு மட்டும் காலை 4.30 மணி முதல் இரவு 10.30 வரை.

 

முகவரி:  

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,

புன்னைநல்லூர் – 613 501,

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:    

+91- 4362- 267740.

 

அமைவிடம்:

தஞ்சை நகரிலிருந்து கிழக்கே 7 கி.மீ. தொலைவில் புன்னை நல்லூர் கோயில் இருக்கிறது. தஞ்சையிலிருந்து அடிக்கடி பேருந்துப் போக்குவரத்து வசதி உள்ளதால் கோயிலுக்கு செல்வது மிக எளிது.

 

Share this:

Write a Reply or Comment

one − 1 =