அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : வீரட்டேசுவரர்
உற்சவர் : அந்தகாசுர வத மூர்த்தி
அம்மன் : பெரியநாயகி , சிவானந்த வல்லி
தல விருட்சம் : சரக்கொன்றை
தீர்த்தம் : தென்பெண்ணை
புராண பெயர் : அந்தகபுரம், திருக்கோவலூர்
ஊர் : திருக்கோவிலூர்
மாவட்டம் : விழுப்புரம்
ஸ்தல வரலாறு :
பார்வதி ஈசனின் இரு கண்களையும் விளையாட்டாக மூடியதால் இருள் சூழ்கிறது. இருள் சூழ்ந்து அந்த இருளே அசுரனாக மாறுகிறது. அந்தகம் என்பது இருள். அந்த அந்தாகசூரனுக்கும் ஈசுவரனுக்கும் யுத்தம் நடக்கிறது. சிவன் தன் கரத்தில் உள்ள கதையால் அந்தகனுடைய தலையில் அடிக்க அவன் தலையிலிருந்து ரத்தம் பீறிட்டு பூமியில் விழுகிறது. ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் பல அசுரர்கள் உற்பத்தி ஆகி போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பார்வதி காளி சொரூபம் கொண்டு அந்தகனின் தலையிலிருந்து வெளிப்படும் ரத்தத்துளிகளை கபாலம் கொண்டு கையிலேந்தி அசுர உற்பத்தியை தடுக்கிறாள். வெளிப்பட்ட ரத்தங்கள் ரத்தக்கோடுகளாகி எட்டு திசையிலும் விழுந்து குறுக்கும் நெடுக்குமாக 8, 8 ஆக 64 பாகங்களாக விழுகிறது. அந்த 64 இடத்தில் சிவன் தனது அருளால் 64 பைரவர்களை உற்பத்தி செய்து அங்கு இருக்க செய்கிறார். 64 பைரவ சக்திகளையும் உற்பத்தி செய்து அசுர உற்பத்தியை தடுத்து அசுரனை வதம் செய்து தேவர்களுக்கு அனுகிரகம் செய்கிறார். இவ்வாறு அந்தகனை அழித்து அஞ்ஞானத்தை நீக்கி நிஜ சொரூப மெய்ஞானத்தை அருளியவர் வீரட்டானேசுவரர் ஆவார்.
திருக்கயிலாயம் செல்வதற்காக ஈசனை உருகி வேண்டிக்கொண்டிருந்தார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இதையடுத்து அயிராவணம் என்னும் யானையை ஈசன் அனுப்பினார். அதில் ஏறிய சுந்தரர் கயிலாயம் புறப்பட்டார். அவரோடு அவரது நண்பரான சேரமான் பெருமானும் குதிரையின் காதில் பஞ்சாட்சரம் ஓதி குதிரையில் ஏறி கயிலாயம் சென்றார். இருவரும் வானில் சென்றபோது கீழே திருக்கோவிலூர் என்ற சிவதலத்தில் வீற்றிருக்கும் தல விநாயகரை அவ்வையார் வழிபட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் சுந்தரரும் சேரமானும் அவ்வையே நாங்கள் கயிலாயம் செல்கிறோம் நீயும் வருகிறாயா என்று கேட்டனர். கயிலாயம் செல்லும் எண்ணம் யாருக்குத்தான் இருக்காது நானும் வருகிறேன் என்று கூறிய அவ்வை விநாயகர் வழிபாட்டை அவசரம் அவசரமாக முடிக்க எண்ணினார். சுந்தரர் சேரமான் இருவரும் வான்வழியாக கயிலை செல்லும் போது அவ்வை இந்த தலத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார். தானும் கயிலை செல்ல எண்ணி அவசரமாக பூஜை செய்தாராம். உடனே விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்ய அருளினார். சீதக் களப எனத் தொடங்கும் விநாயக அகவல் பாடி பூஜை செய்த பிறகு விசுவரூபம் கொண்டு தன் துதிக்கையால் அவ்வையாரை சுந்தரர், சேரமான் ஆகியோர் சென்றடையும் முன்பே கயிலையில் விட்டார் கணபதி. இவர் விசுவரூபம் எடுத்ததாலேயே பெரிய யானை கணபதி என்று பெயர் பெற்றார்.
கோயில் சிறப்புகள் :
- இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
- அந்தகாசூரனை சிவபெருமான் சம்ஹாரம் செய்த திருத்தலம் இது. அட்ட வீரட்டத் தலங்களில் மிகவும் தொன்மையனாதும் வரலாற்றுச் சிறப்பு பெற்றதுமான 2 வது வீரட்டான திருத்தலம் இது.
- வாஸ்து சாந்தி (வீடு கட்டுதல்) எனப்படும் ஐதீகம் தோன்றியதற்கு காரணமான தலம் இது. கிரகப் பிரவேச காலங்களில் வீடு கட்டும் காலங்களிலும் இந்த 64 பைரவர்களே வாஸ்து பூஜை எனப்படுகிறார்கள்.
- சுவாமி மூலஸ்தானத்தில் பைரவ சொரூபமாக உள்ளார்.
- சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற தலம்.
- அம்பாள் திரிபுர பைரவி உற்பத்தி தலம் இது. சப்த மாதாக்கள் உற்பத்தியான தலம் இது. 64 பைரவர்கள் 64 பைரவிகள் உற்பத்தியான தலம் இது.
- இத்தலத்தில் பாரி வள்ளல் தன் மகள்களான அங்கவை சங்கவை இருவரையும் திருக்கோயிலூரை ஆண்ட மன்னனுக்கு அவ்வையார் கபிலர் இருவரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணத்தை வைத்து அமைந்த பெயர்களே சுற்றுப்புற கிராமங்களின் பெயர்களாக இப்போதும் உள்ளன.
- முருகப்பெருமான் ஆறுமுகராக ஆறு திருமுகத்துடனும் 12 திருக்கரங்களுடனும் தேவியர் இருவருடம் மயில் மீது அமர்ந்து அருள்பாலிக்கின்றார். இத்தலத்து முருகப்பெருமான் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.
- முருகன் அசுரனை கொன்றதால் பிரம்மகத்தி தோசம் நீங்க பூமியில் சிவபூஜை செய்ய வேண்டினார். அம்பாள் எந்த இடம் என்று உணர்த்த அம்பாள் தன் கையிலிருந்த வேல் விழுந்த இடம் திருக்கைவேலூர் என்று பெயர் பெற்று பின்நாளில் பெயர் மறுவி திருக்கோவிலூர் ஆனது. முருகன் சிவனை பூஜை செய்த தலம் இது.
- நாயன்மார்களில் இருவரான மெய்ப்பொருள் நாயன்மார், நரசிங்க முனைய நாயனார் ஆகியோர் அவதரித்த ஊர் இது.
- தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய திருமுறை கண்ட சோழன் ராஜராஜ சோழனும் அவன் சகோதரன் ஆதித்ய கரிகாலனும் பிறந்த ஊர்…
- திருக்கோவலூர் மேலூர், கீழையூர் என இரு பிரிவுகளாக உள்ளது. அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்றான வீரட்டேஸ்வரர் கோவில் கீழையூர்ப் பகுதியில் தெண்பெண்ணையாற்றின் கரையிலும் மேலூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திரிவிக்ரமப் பெருமாள் வைணவ ஆலயமும் உள்ளன.
- முதலாழ்வார்கள் மூவரும் ஓர் இடைகழியில் சந்தித்து, மாலவனின் பெருமையை அனுபவித்த திவ்ய தேசம் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று சொல்லப்படும் முதல் மூன்று ஆழ்வார்களின் வரலாற்று நிகழ்ச்சி இடம் பெற்ற தலம்
- இத்தல இறைவனை முருகப்பெருமான், ராமர், பரசுராமர், கிருஷ்ணர், இந்திரன், காளி, எமன், காமதேனு, சூரியன், குரு, உரோமச முனிவர், கண்வ மகரிஷி, மிருகண்டு முனிவர், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர், வாணாசுரன், ஆதிசேஷன், மன்மதன், குபேரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளனர்.
- மத்வ சம்பிரதாயத்தின் ஆசார்யரான ரகூத்தம சுவாமிகளது பிருந்தாவனம் அமைந்த இடம்
- ஞானானந்தகிரி சுவாமிகளது தபோவனம் அமையப் பெற்ற திருத்தலம்.
- காருண்ய மூர்த்தியாக விளங்குகிற சிவபெருமான், சில நேரங்களில் உக்கிர மூர்த்தியாகி துஷ்ட நிக்ரக மும் செய்துள்ளார். சிவனாரது வீரஸ்வரூபம் பெரிதும் வெளிப்பட்ட இடங்களை வீரட்டங்கள் என்றும், அங்குள்ள பெருமான்களை வீரட்டேஸ்வரர் என்றும் அழைக்கிறோம். இத்தகைய தலங்கள் எட்டு. அட்ட வீரட்டத் தலங்களான திருக்கண்டியூர், திருக்கோவிலூர், திருப்பறியலூர், திருவிற்குடி, வழுவூர், திருக்குறுக்கை, திருக்கடவூர், திருவதிகை ஆகியவற்றில், திருக்கோவிலூர் இரண்டாம் இடம் வகிக்கிறது. அந்தகாசுரனை வதம் செய்த இடம் இது
திருவிழா:
மாசிமகம் – 10 நாட்கள் – பிரம்மோற்சவம்
கார்த்திகை – 3 ம் சோம வாரம் சங்காபிசேகம்
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 5 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில்,
திருக்கோவிலூர்-605 757,
விழுப்புரம் மாவட்டம்.
போன்:
+91- 9842608874, 9486280030
அமைவிடம்:
திருவண்ணாமலையில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோவிலூர் உள்ளது. பண்ருட்டி, கடலூர், விழுப்புரத்தில் இருந்தும் ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.