March 13 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருவீழிமிழலை

அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     நேத்திரார்ப்பணேசுவரர், விழியழகீசர், விழியழகர்.

உற்சவர்        :     கல்யாணசுந்தரர்

அம்மன்         :     சுந்தரகுஜாம்பிகை, அழகுமுலையம்மை.

தல விருட்சம்   :     வீழிச்செடி

தீர்த்தம்         :     வீஷ்ணுதீர்த்தம், 25 தீர்த்தங்கள்

புராண பெயர்    :     திருவீழிமிழலை

ஊர்             :     திருவீழிமிழலை

மாவட்டம்       :     திருவாரூர்

 

ஸ்தல வரலாறு :

மஹாவிஷ்ணுவின் கையில் இருந்த சக்ராயுதம் தேய்ந்துபோனபோது, ஆற்றல் பொருந்திய வேறொரு சக்கரத்தைப் பெறுவதற்காக சிவபெருமானை மஹாவிஷ்ணு பூஜித்ததாகப் பல்வேறு புராணத் தகவல்கள் உண்டு. அப்படி சிவபெருமானை விஷ்ணு பூஜித்ததாக திருமாற்பேறு (திருமால்பூர்), திருப்பைஞ்ஞீலி, திருவீழிமிழலை ஆகிய சிவஸ்தலங்களின் தல புராண வரலாறுகள் கூறுகின்றன. இம்மூன்று தலங்களில், திருவீழிமிழலை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

சலந்திரனைச் சம்ஹரிக்க திருமாலுக்கு சக்கரம் தேவைப்படுகிறது. அதை சிவபெருமானிடம் இருந்து பெறுவதற்காக திருவீழிமிழலைக்கு வருகிறார். ஆயிரம் தாமரை மலர்களால் சிவனை அர்ச்சித்தால் எண்ணியது கிடைக்கும் என்று அறிகிறார். அதன்படி, ஆயிரம் தாமரை மலர்கள் சேர்த்து அர்ச்சனை செய்ய ஆரம்பித்து 999 மலர்களால் அர்ச்சனை செய்துவிடுகிறார். விஷ்ணுவை சோதிக்க நினைத்த சிவபெருமான், 1000-வது மலரை மறைத்து விடுகிறார். 1000-வது மலரைக் காணாமல் விஷ்ணு தவிக்கிறார். இன்னொரு தாமரை மலரைக் கொண்டு வந்து அர்ச்சனையைத் தொடர நேரமும் இல்லை. குறைந்த ஒரு மலருக்குப் பதிலாக, தாமரை மலருக்கு ஒப்பான தனது இரு கண்களில் ஒன்றையே பிடுங்கி எடுத்து, எந்தக் குறையும் இல்லாமல் பூஜையை முடித்தவுடன், சிவபெருமானும் காட்சி கொடுக்கிறார். அத்துடன், திருமால் விரும்பியபடி அவருக்கு சக்ராயுதத்தையும் கொடுத்து அருள் செய்கிறார். இப்படி மஹாவிஷ்ணு தன் கண்ணையே கொடுத்து சிவனை அர்ச்சித்த தலம்தான் திருவீழிமிழலை. இப்படி ஈசனை திருமால் வழிபட்ட செய்தியை திருநாவுக்கரசர் தனது பதிகம் மூலமாகப் பாடுகிறார். நான்காம் திருமுறையில் இடம் பெற்றிருக்கும் “பூதத்தின் படையர் பாம்பின்” என்று தொடங்கும் பதிகத்தின் 8-வது பாடலில், இத்தல வரலாறு குறித்துப் பாடுகிறார்.

 

கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துக்கு முன் பெரிய அழகிய திருக்குளம் உள்ளது. இறைவன் நேத்ரார்ப்பனேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது. மூலவர் சுயம்பு உருவில் சுமார் 5 அடி உயரத்தில் நற்காட்சி தருகிறார். மூலவர் லிங்கத்துக்குப் பின்புற கர்ப்பக்கிருக சுவரில், பார்வதி – பரமேசுவரர் திருமண கோலத்தைக் காணலாம். இறைவன் உமையை மணந்துகொண்ட தலம் என்னும் நிலைக்கேற்ப, கர்ப்பக்கிருக வாயிலில் அரசாணிக்கால் என்னும் தூணும், வெளியில் மகாமண்டபத்தில் பந்தக்கால் என்னும் தூணும் உள்ளன. மகாமண்டபத்தில், மாப்பிள்ளை சுவாமியாக கல்யாணசுந்தரர் காட்சி தருகிறார். இவரே இத்தலத்தின் உற்சவமூர்த்தி. அவரது வலது பாதத்தின் மேலே திருமால் அர்ச்சித்த கண்மலரும், அதன் கீழே சக்கரமும் இருக்கக் காணலாம்.

 

கைலாயத்தில் வசிக்கும் சிவபெருமானுக்கும், காத்தியாயணி அம்பிகைக்கும் திருமண வைபவம் நடைபெற்ற தலம் திருவீழிமிழலை. ஆகவே, இத்தலம் ஒரு திருமணத்தலம். கோவிலின் பிரதான நுழைவு வாயில் கோபுரத்தைவிட, கர்ப்பக்கிருஹத்தின் மேல் இருக்கிற 16 சிம்மங்கள் தாங்கக்கூடியதாக உள்ள விமானமே சிறப்பானது. இதற்கு விண்ணிழி விமானம் என்று பெயர். சக்கரம் பெற்ற திருமால், வைகுண்டத்தில் இருந்து கொண்டுவந்து இந்த விமானத்தால் இக்கோவிலை அலங்கரித்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. இறைவி சுந்தர குசாம்பாள் சந்நிதி, மூலவர் சந்நிதிக்கு அருகில் உள்ளது. ஆலயத்தின் முதல் பிராகாரத்தில் இருக்கும் நூற்றுக்கால் மண்டபம், சிற்ப வேலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மூலவரின் வலப்பக்க மண்டப அறையில், கையில் கண்ணோடு அர்ச்சிக்கும் பாவனையில் திருமால் காட்சி தருகிறார்.

இத்தலம் வீழிச்செடி, சந்தனம், சண்பகம், பலா, விளா முதலிய மரங்கள் அடர்ந்த காடாகப் பல காலம் இருந்தது. மிழலைக் குறும்பர் என்னும் வேடுவர் ஒருவர் இத்தலத்தில் வசித்து வந்தார். அவர் தினம் ஒரு விளாங்கனி நிவேதனம் செய்து வீழிநாதரை வழிபட்டு வந்தார். அதன் பலனாக, ஈசன் அவர் முன் தோன்றி அருளாசி வழங்க, அவர் தவக்கோலம் பூண்டு, அருந்தவங்கள் செய்து அட்டமாசித்திகள் கைவரப் பெற்றார். இந்த மிழலைக் குறும்பருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது.

இக்கோயிலில் உள்ள வெளவால் நெத்தி மண்டபம், மிகச் சிறப்பான வேலைப்பாடுகள் கொண்டதாகும். அக்காலத்தில், கோயில் திருப்பணிகள் செய்யும் ஸ்தபதிகள், திருவீழிமிழலை வெளவால் நெத்தி மண்டபம் மற்றும் திருவலஞ்சுழி கல் பலகணி போன்ற அரிய திருப்பணிகள் நீங்கலாக மற்றவை செய்து தருகிறோம் என்று ஒப்புக்கொள்வார்கள். அத்தகைய சிறப்புபெற்ற இந்த வெளவால் நெத்தி மண்படம், இன்று கல்யாண மண்டபமாக விளங்குகிறது.

ராஜகோபுரம் கடந்து நுழைந்தவுடன், வலதுபுறம் உள்ள இந்த வெளவால் நெத்தி மண்டபம் அகலமான அமைப்புடன் நடுவில் தூண் இல்லாமல், சுண்ணாம்பு கொண்டு ஒட்டப்பட்டுள்ள வளைவான கூரை அமைப்புடன் உள்ள இந்த மண்டபம், கட்டட வேலைப்பாட்டில் மிகமிக அபூர்வமானது. வெளவால்கள் வந்து வசிக்க முடியாதவாறு கூரை அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். சித்திரை மாதத்தில், இறைவன் – இறைவி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

 

கோயில் சிறப்புகள் :

  • இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

  • இங்கு பாதாள நந்தி உள்ளது. முழு கோயிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது.

 

  • இங்கு இறைவன் காசியாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிப்பதால், மாப்பிள்ளை சுவாமி எனப்படுகிறார்.

 

  • கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம்.

 

  • தேவார மூவராலும் பாடல் பெற்ற தலங்கள் பல உண்டு. அவற்றில் திருவீழிமிழலை தலமும் ஒன்றாகும். இத்தலம் 23 திருப்பதிகங்களையுடையது. வீழிச்செடிகள் நிறைந்திருந்ததால் இவ்வூருக்கு திருவீழிமிழலை என்று பெயர் ஏற்பட்டது.

 

  • திருமாலின் உற்சவத் திருமேனி ஒன்று ஒரு கையில் தாமரை மலரும், மறுகையில் கண்ணும் கொண்டு, நின்ற கோலத்திலிருப்பதை இக்கோயிலில் காணலாம். இங்கு இறைவனுக்கு முன்னே நந்தி தேவருக்குப் பதிலாக, திருமால் கூப்பிய கரத்தோடு நின்றிருக்கிறார் !

 

  • திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சேர்ந்தே இத்தலத்துக்கு வருகிறார்கள். அவர்கள் வரும்போது, நாட்டில் கடும் பஞ்சம். மக்கள் உணவின்றித் தவிக்கின்றனர். இந்த நிலையில் அப்பர், சம்பந்தர் இவர்களுடன் வந்த அடியார்களுக்கு உணவு அளிப்பது சிரமமாக இருக்கிறது. இருவரும் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி பதிகங்கள் பாடுகிறார்கள். மறுநாள் காலையில், கிழக்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும், மேற்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும் இருப்பதை இருவரும் காண்கிறார்கள். அவற்றைக் கொண்டு அடியவர்களுக்கு உணவு அளிக்கின்றனர். நாட்டில் பஞ்சம் தீரும் வரையில் இவ்வாறு தினமும் படிக்காசு பெற்று தொண்டு செய்திருக்கின்றனர். படிக்காசு அளிப்பதிலும், அப்பருக்கு நல்ல காசும், சம்பந்தருக்கு மாற்றுக் குறைந்த காசும் இறைவன் கொடுத்தார். சம்பந்தர் அதைப் பார்த்து “வாசி தீரவே காசு நல்குவீர்” என்னும் பதிகம் பாடிய பிறகு அவருக்கும் நல்ல காசு கொடுத்து அருள் செய்தார். அவ்வாறு வைத்தருளிய பலிபீடங்கள், கோயிலின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ளன. படிக்காசுப் பிள்ளையார், மேற்கு பலிபீடத்தின் அருகில் உள்ளார். அருகில் சம்பந்தர், அப்பரின் உருவங்கள் உள்ளன. இவ்விருவரும் தங்கியிருந்த திருமடங்கள், வடக்கு வீதியில் கீழ்க்கோடியிலும் (சம்பந்தர்) மேற்குக் கோடியிலும் (அப்பர்) உள்ளன.

 

  • படிக்காசு விநாயகர் கோயிலில் சம்பந்தர், நாவுக்கரசர் திருஉருவச்சிலைகள் உள்ளன. இருவரும் தாம் பெற்ற படிக்காசுகளைக் கொண்டு பொருட்களை வாங்கிய கடைத்தெரு, இப்போது ஐயன்பேட்டை என்றழைக்கப்படுகிறது. அங்கே உள்ள சுவாமி பெயர், செட்டியப்பர். அம்பாள், படியளந்த நாயகி. ஐயன் தராசு பிடித்த கையோடும், அம்பிகை படியைப் பிடித்தபடியும், உற்சவ மூர்த்தியாகக் காட்சி அளிக்கின்றனர்.

 

  • கோயிலின் எதிரில் பெரிய குளம் உள்ளது. மிகப் பெரிய கோயில். கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. இக்கோயில் மாடக்கோயில் அமைப்புடையது.

 

  • இத்திருக்கோயிலைச் சுற்றி; பத்ம தீர்த்தம், புஷ்கரணி, விஷ்ணு தீர்த்தம், திரிவேணி சங்கமம், குபேரதீர்த்தம், இந்திர தீர்த்தம், வருண தீர்த்தம், இலக்குமி தீர்த்தம், வசிட்ட தீர்த்தம் முதலாக 25 தீர்த்தங்கள் உள்ளன.

 

  • தலவிருட்சம் ஒவ்வொரு யுகத்திற்கும் ஒன்றாக மாறுபடுகிறது என்பர். இப்போது பலா, தலமரமாக விளங்குகிறது.

 

  • சோலை சூழும் திருவீழிமிழலையில் வாழும் பெருமாளே! (முருகா, குமரா, உயிர்கா என ஓத அருள்தாராய்!) சூரனுக்கு அஞ்சி, முனிவர்களும் தேவர்களும் ஓலமிட்டதை இங்கு அருணகிரியார் பாடியுள்ளார். கந்தபுராணத்திலும் இக்கருத்தை உடைய பாடல் வருகிறது.

 

திருவிழா: 

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி

அருள்மிகு நேத்ரார்ப்பணேஸ்வரர் திருக்கோயில்,திருவீழிமிழலை,

திருவீழிமிழலை அஞ்சல்,

குடவாசல் வட்டம்,

திருவாரூர் மாவட்டம் – 609 505.

 

போன்:    

+91-4366-273 050, 94439 24825

 

அமைவிடம் :

மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் பேரளம் வழியாக பூந்தோட்டம் வந்து, அங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் அரிசிலாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ. சென்றாலும் இத்தலத்தை அடையலாம். அருகில் உள்ள பெரிய ஊர் பேரளம்.

 

Share this:

Write a Reply or Comment

eighteen + seventeen =