February 10 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்புல்லாணி கோவில்

ராமரின் வெற்றிக்கு வழி காட்டிய

திருப்புல்லாணி கோவில்

வரலாறு

 

 

மூலவர்                 :               ஆதிஜெகநாதர் (திவ்யஷாபன் ), கல்யாணஜகநாதர்

உற்சவர்                 :               கல்யாண ஜெகந்நாதர்

தாயார்                  :               கல்யாணவல்லி, பத்மாசனி

தலவிருட்சம்      :               அரசமரம்

தீர்த்தம்                 :               ஹேம, சக்ர, ரத்னாகரதீர்த்தம்

புராணபெயர்     :               திருப்புல்லணை

ஊர்                        :               திருப்புல்லாணி

மாவட்டம்          :               ராமநாதபுரம்

 

ராமாயணகாலத்துக்கு முற்பட்ட தலமாக விளங்குவதால், புராதன கோவில்களின் வரிசையில் முன்னிலை வகிக்கிறது, ‘திருப்புல்லாணி’திருத்தலம். 108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது. இந்த ஆலயத்தின் மூலவரான ஆதிஜெகன்னாதப்பெருமாள் திருமகளும், நிலமகளும் இருபுறமும் நிற்க, அமர்ந்தநிலையில் அருட்காட்சி நல்குகிறார். புனிதபாரதத்தில் எத்தனை ஜெகன்னாதர்கோவில் இருப்பினும், இவர் மிகவும் பழமையானவர் என்பதால் ஆதிஜெகன்னாதர் எனப்படுகிறார்.  இறைவனுக்கு ‘புல்லாணித் தென்னன் தமிழன்’என்பது திருமங்கை ஆழ்வார் செல்லமாக வைத்த பெயர்.

ஸ்தலவரலாறு :

தர்ப்பைபுல் நிரம்பியகாடு. அருகே கடல். அந்த காட்டில் தங்கள் சிந்தையை ஸ்ரீமந்நாராயணனிடம் வைத்து கடும் தவம் செய்தனர் முனிவர் மூவர். காலவ, கன்வ, புல்லவ மகரிஷிகளான அந்த மூவரின் கடுந்தவத்தில் மகிழ்ந்த பெருமான் அவர்கள் முன்னே ஓர் அரசமரமாக தோன்றினார்.  ஆனால் அவர்களுக்கோ அதில் திருப்தி ஏற்படவில்லை.  தாங்கள் விரும்பும் காப்பாளன்,  லோகநாயகனாகவே காட்சிதர வேண்டும் என பிரார்த்தித்தனர். அவர்களின் பிரார்த்தனைக்கு இரங்கிய பகவான்,  ஆதிஜகந்நாதனாகக்காட்சி அளித்தார்.  அந்தத் தலமே இன்று நாம் காணும் திருப்புல்லாணி திருத்தலம்.

ஜகந்நாதபெருமாள், புவனேஸ்வர்(புரி) தலத்தில் உத்தரஜகந்நாதனாகவும், திருமழிசை தலத்தில் மத்திய ஜகந்நாதனாகவும், திருப்புல்லாணியில் தட்சிணஜகந்நாதனாகவும் காட்சி தருகிறார் என்பர். அந்த அளவில் மிகச் சிறப்பு வாய்ந்தது மட்டுமன்றி, ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108  திவ்ய தேசங்களில் ஒன்றென்பதால் பிரதான புண்ணியத்தலமாகவும் திகழ்கிறது இந்தத்தலம்.

இது ராமாயணகாலத் தொடர்பு கொண்டது. இலங்கையில் சிறைப்பட்ட சீதையை மீட்பதற்காக,  ராமபிரான் தம்பி லக்குவனுடன் இங்கேவந்தார். இடையில் கடல் விரிந்திருந்தது.  தமக்கு வழி விடு மாறு கடல் அரசனிடம் வேண்டுகோள் விடுத்தார் ஸ்ரீராமர்.  கடலரசன் செவிமடுக்கவில்லை.  மூன்று தினங்கள் இவ்வாறு ராமபிரான் காத்திருந்தார். அப்போது,  தன் தமையனுக்காக தர்ப்பைப் புல்லில் படுக்கை அமைத்து அளித்தான் லக்குவன்.

இதனை நினைவூட்டும் வகையில் ஆதிசேஷன் மீது தர்ப்பைப்புல் பாய் விரித்தபடி,  ராமர் இங்கே சயனக்கோலம் கொண்டு தர்ப்பசயன ராமராகக் காட்சி தருகிறார். லக்குவன் ஆதிசேஷன் அம்சம் என்பதால்,  ராமனுக்கு படுக்கையாக ஆதிசேஷ உருவில் உள்ளார். சீதையை மீட்கப் புறப்பட்ட கோலம் என்பதால்,  இங்கே சீதை அருகினில் இல்லை. அனுமன் மட்டும் உடன் உள்ளார். கருவறை சுவரில் சூரியன், சந்திரன், தேவர்கள் ஆகியோர் பாலம் அமைக்க ஆலோசனை செய்த கோலத்தில் உள்ளனர்.

பாலம் கட்ட அனுமதி கேட்டும் முன்னேவராததால்,  சினமுற்ற ஸ்ரீராமன் கடலரசனின் மீது அம்புதொடுக்க முயன்றார். இதனால் அச்சம் மிகக்கொண்ட கடலரசன், ராமன் முன் தோன்றி, சரண் புகுந்தான்.  இதனை நினைவூட்டும் வண்ணம், தர்ப்பசயன ராமர் சந்நிதி முன் கடலரசன் தம்பதி சகிதனாக முன் மண்டபத்தில் காட்சி தருகிறான். அருகே, வீடணன். மேலும், ராமனின் படையை உளவு பார்க்க ராவணன் அனுப்பி வைத்த அரக்கர்கள் இருவர், ராமனைக் கண்டதும் திருவடி பணிந்தனர். அவர்கள் இருவரும் ராமனின் திருவடி அருகே வணங்கியபடி காட்சி தருகின்றனர்.

திருப்புல்லாணியில் இருந்து, சுமார்  4 கி.மீ., தொலைவில் உள்ளது சேதுக்கரை. இங்கிருந்து தான் இலங்கை செல்ல கடலில் ராமர் பாலம் அமைத்தார். இங்கே அனுமனுக்கு ஒரு கோயில் உள்ளது. இலங்கையை நோக்கி காட்சி தருகிறார் அனுமன். இங்குள்ள ரத்னாகர தீர்த்தம் எனப்படும் கடற்கரையில் சித்திரை,  பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார்.  அமாவாசை நாட்களில் இங்கே மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கின்றனர்.

 

கோயில் சிறப்புகள் :

  • ஆதிஜெகந்நாதர் (அமர்ந்தகோலம்), சயனராமர் (கிடந்தகோலம்), பட்டாபிராமர் (நின்றகோலம்), அரசமர பெருமாள், பட்டாபி ராமர் என இத்தலத்தில் மகாவிஷ்ணு வின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் தரிசிக்கலாம்.

 

  • இந்த கோவில் தீர்த்தம், மூர்த்தி, தலம் என்ற மூன்று சிறப்புகளுடன் புராணப் புகழ்பெற்றும், சரித்திர புகழுடன் சிறந்த திவ்ய தேசமாக விளங்குகிறது.

 

  • விஷ்ணுவின் அவதாரமான ராமபிரான் ஜெகநாதனை வணங்கி அவரால் கொடுக்கப்பட்ட வில்லை பெற்று ராவண சம்ஹாரம் செய்து சீதாபிராட்டியை மீட்க அனுக்கிரகிக்கப்பட்ட தலமாகவும், ராமபிரானை ராவணன் தம்பி விபீஷணன் சரண் அடைந்து இலங்கைக்கு அரசனாக முடிசூடப்பட்ட தலமாகவும் விளங்குகிறது.

 

  • கடற் கடவுள் தன் பத்தினி யோடு ராமனை சரணடைந்து தன் குற்றம் மன்னிக்கப்பட்ட இடமாகவும், சுகசாரணர்களுக்கு அபயம் அளித்து, புல்லவர்,  கண்ணுவர் போன்ற முனிவர்கள் ஆதிஜெகநாதரை சரணடைந்து பரம பதம் பெற்ற தலமாகவும் திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவில் விளங்குகிறது.

 

  • இந்த தலம் சரணாகதி தருமத்தை அனுஷ்டிக்கக்கூடிய புண்ணிய ஸ்தலமாக திகழ்கிறது.

 

  • ராமர் சயனநிலையில் இருப்பது இக்கோவிலின் சிறப்பு அம்சம். எங்கும் காண இயலாத விசேஷ அசுவத்தமும் (அரசமரம்), நாகத்தின் மீது நடமாடும் சந்தானக் கண்ணனும், சிற்பக்கலையின் களஞ்சியமாக கிரீடம், பட்டாக் கத்தியுடன் காட்சியளிக்கும் தர்ப்பசயணன் ராமனும்,  ரசாயண சத்துக்கள் நிரம்பிய சக்கர தீர்த்தமும் இத்தலத்தின் மாபெரும் சிறப்புக்கு சான்றுகளாய் திகழ்கின்றன.

 

  • கோவில் தல விருட்சமாக உள்ள அரசமரம் சாமி சன்னதியின் மேற்கில், வெளிப் பிரகாரத்தில் நாச்சியார் சன்னதிக்கு பின் பக்கம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. ஆற்றுநீர், குளத்துநீர், கடல் நீர் என மூன்று நீர்ப்பெருமை பெற்ற தலமாக திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோவில் விளங்கிவருகிறது.

 

  • தனக்கு குழந்தைகள் இல்லையே என்று கவலைப்பட்ட தசரதச் சக்ரவர்த்தி, ரிஷிகளின் ஆலோசனையின் பேரில் புத்திர காமேஷ்டி யாகம் செய்யத் தயாரானார். அந்த யாகத்துக்கான மூல மந்திரத்தைத சரதன் உபதேசம் பெற்ற இடம் இந்தத்தலமே. எனவே, இங்கே ஆதிஜகந்நாதப் பெருமானை வழிபட்டால் புத்திர பாக்கியத்துக்கு நிச்சயம் வழி செய்வார் என்பது நம்பிக்கை.

 

  • சீதையை மீட்க அருளும் படி ஜகந்நாதரிடம் வேண்டினார் ஸ்ரீராமர். அவருக்கு ஒருபாணம் கொடுத்தார் ஸ்ரீஜகந்நாதர். அந்த பாணத்தைப் பிரயோகித்து ராவணனை அழித்தார் ராமபிரான். எனவே, எந்தச் செயலையும் துவங்கும் முன், ஆதிஜகந்நாதரை வேண்டினால் அதுவெற்றி பெறும் என்பது நம்பிக்கை.

 

  • பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையில், “மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்” எனச்சொல்லியுள்ளார். இத்தகைய சிறப்பு பெற்ற அரசமரமே இத்தலத்தின் விருட்சமாகும்.  இந்த மரம் சுவாமி சன்னதிக்குப் பின்புறம் உள்ளது. பக்தர்கள் இதை மகாவிஷ்ணுவாக கருதி வழிபடுகிறார்கள்.

 

  • பொதுவாக மகாலட்சுமியை மடியில் இருத்திக்காட்சி தரும் நரசிம்மர், இங்கு ஸ்ரீதேவி,  பூதேவியுடன் காட்சி தருகிறார். நரசிம்மரின் இந்த தரிசனம் விசேஷமானது. தவிர,  ஜெகந்நாதர் சன்னதி கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மர் இருக்கிறார். பக்தர்கள் இவருக்கு சந்தனகாப்பிட்டு வழிபடுகிறார்கள்

 

  • சீதையை மீட்டு இராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த இராமர், இங்கு சுவாமியைத் தரிசித்துச் சென்றார். இவர் பட்டாபிராமனாக சீதை, இலட்சுமணருடன் கொடி மரத்துடன் கூடிய சன்னதியில் காட்சி தருகிறார். சித்திரை மாதத்தில் இவருக்கு பிரம்மோற்ஸவம் நடக்கிறது.

 

  • பொதுவாக பெருமாள் தலங்களில் சுவாமி, குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் தாயாருடன் இணைந்து (சேர்த்தி)காட்சிதருவார். ஆனால், இங்குசுவாமி வெள்ளி தோறும் தாயாருடன் காட்சிதருகிறார். அன்று ஊஞ்சல் உற்சவம் நடக்கும்.

 

  • ககன், சாரணன் என இரண்டு தூதர்களை இராவணன் இங்கு அனுப்பி ராமனை வேவு பார்க்கச் சொன்னான். இராமனைக்கண்டதும் அவர்கள் அவரைச்சரணடைந்தனர். மூலஸ்தானத்திற்குள் ராமர் பாதத்தின் அருகில் வணங்கியபடி இவர்கள் இருக்கின்றனர்.

 

பெருமாளின்ஐந்துநிலைகள்

அரசமரமாகப்பெருமாள்

ஆதிஜெகநாதபெருமாள்

சந்தானகோபாலகிருஷ்ணர்

சயனராமர்

பட்டாபிஷேகராமர்

 

திருவிழா:            

பிரம்மோற்சவத்திருவிழா – பங்குனிமாதம்ராமர்ஜெயந்திதிருவிழா – சித்திரைமாதம். இவைதவிரவைகுண்டஏகாதசி, கிருஷ்ணஜெயந்தி, பொங்கல், தீபாவளி மற்றும் வாரத்தின் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலில் கூட்டம் பெருமளவில் இருக்கும்.

 

திறக்கும்நேரம்: 

காலை 7 மணிமுதல் 12.30 மணிவரை, மாலை 3.30 மணிமுதல்இரவு 8 .30 மணிவரைதிறந்திருக்கும்.

 

முகவரி:               

அருள்மிகு ஆதிஜெகநாதபெருமாள் திருக்கோயில்,

திருப்புல்லாணி – 623 532

ராமநாதபுரம் மாவட்டம்.

 

போன்: 

+91-4567- 254 527; +91-94866 94035

அமைவிடம்:

ராமநாதபுரத்தில் இருந்துசுமார் 10 கி.மீ. தொலைவு. ராமேஸ்வரம் செல்லும் ரயில்களில் செல்லலாம். பேருந்து வசதி உண்டு.

 

Share this:

Write a Reply or Comment

11 − eight =