February 08 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்குறுங்குடி

அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில் திருக்குறுங்குடி

 

மூலவர்            :           வைஷ்ணவ நம்பி

தாயார்  :           குறுங்குடிவல்லி நாச்சியார்

தீர்த்தம் :           திருப்பாற்கடல், பஞ்சதுறை

புராண பெயர்: திருக்குறுங்குடி

ஊர்                  :           திருக்குறுங்குடி

மாவட்டம்       :           திருநெல்வேலி

 

திருக்கோயில் தலவரலாறு:

ஒரு சமயம் இரண்யாட்சகன் என்ற அசுரன் பூமியை கொண்டு செல்ல முயல்கிறான். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்கிறார். அப்போது பூமித்தாய் இந்த பூமியிலுள்ள ஜீவராசிகள் பகவானை அடைய வழி கூறுங்கள் என வராகமூர்த்தியிடம் கேட்க, இசையால் இறைவனை அடையலாம் என்கிறார்.

மகேந்திர கிரி அடிவாரத்தில் பாணர் குடியில் பிறந்த நம்பாடுவான் என்பவர் இத்தலத்து பெருமாள் மீது மிகுந்த பக்தி கொண்டு கைசிகப் பண்ணில் அவரை பாடி வணங்கி வந்தார். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று விரதம் இருப்பது அவர் வழக்கம்.

ஒரு சமயம் அவர் விரதம் இருக்கும் அன்று அவர் பாடியவண்ணம் காட்டுப் பாதையில் நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது பிரம்ம ராட்சசன் ஒருவன் அவரை உண்ணப்போவதாக அவரிடம் தெரிவித்தான். நம்பாடுவானும் தான் விரதத்தில் இருப்பதால் விரதம் முடிந்ததும் அவனுக்கு உணவாக தன்னைத் தருகிறேன் என்றார். ராட்சசன் இவரை நம்ப மறுத்ததால், தான் திருமால் பக்தன் என்றும் பொய் சொல்ல மாட்டேன் என்றும் அவனிடம் கூறுகிறார். அவனும் அதற்கு உடன்படுகிறான்.

பிரம்ம ராட்சசனுக்கு கொடுத்த வாக்குப்படி தனது இறுதி யாத்திரையை எண்ணி பெருமாளைப் பார்க்க நினைத்தார். ஆனால் உள்ளே செல்ல முடியாததால் (பாணர் இனத்தவர்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை) வருத்த மிகுதியால் கோயிலுக்கு வெளியே நின்று ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கிறார். திடீரென்று துவஜஸ்தம்பம் விலகி எம்பெருமான் தெரிய சந்தோஷமாக நம்பாடுவான் பெருமாளை தரிசனம் செய்தார்.

நம்பாடுவனுக்காக விலகிய நகர்ந்த கொடிமரம் இன்னமும் அப்படியே விலகி இருப்பதை இங்கு காணலாம். தரிசனம் முடித்து நம்பாடுவான் பிரம்ம ராட்சசனைக் காணச் செல்லும்போது, காட்டு வழியில் திருக்குறுங்குடி பெருமாள் வயது முதிர்ந்த அந்தணராக வேடமிட்டு அவ்வழியே செல்லவேண்டாம் என்றும் அங்கு பிரம்ம ராட்சசன் இருக்கிறான் என்றும் அங்கு சென்றால் உங்களை அவன் உண்டுவிடுவான் என்றும் அவரிடம் தெரிவிக்கிறார்.

இருப்பினும், “பரவாயில்லை. நான் இத்தல பெருமான் மீது சத்தியம் செய்திருக்கிறேன். நான் சத்தியம் தவறமாட்டேன்” என்று நம்பாடுவான் அந்த முதியவரிடம் தெரிவிக்கிறார். அதைக் கண்டு மகிழ்ந்த பெருமாள் தன் சுயரூபம் காட்டி அவருக்கு அருள்பாலித்தார்.

பிறகு பிரம்ம ராட்சசனிடம் சென்று தன்னை உணவாக உட்கொள்ளும்படி கூற, அவன் தனக்குப் பசி இல்லை என்று கூறி இவரது விரத புண்ணியத்தில் கால் பாகத்தையாவது கொடுங்கள் என்று சரண் அடைந்தான். ஏன் இந்த பிரம்ம ராட்சச கோலம் என்று நம்பாடுவான் கேட்க அதற்கு அவன், “முற்பிறவியில் யோகஷர்மா என்ற அந்தணராக இருந்தபோது யாகம் செய்வதை இழிவாகப் பேசியதால் இவ்வாறு ஆகிவிட்டேன். உண்மையான பக்தர்களின் தரிசனத்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்பதால் இப்போது நீங்கள் எனக்கு சாபவிமோசனம் கொடுக்க வேண்டும்” என்று கூறினான்.

நம்பாடுவானும் மிக்க மகிழ்ச்சியுடன் தான் கைசிகம் என்ற பண் பாடிப் பெற்ற பலத்தில் பாதியை அவனுக்கு தருகிறேன் என்று கூறியதும் அவனுக்கு சாப விமோசனம் கிடைத்தது. இந்த வரலாற்றை வராக மூர்த்தியே தன் மடியில் இருக்கும் பிராட்டியிடம் சொல்லியதாக கைசிக புராணத்தில் கூறப்படுகிறது.

 

ஸ்ரீ இராமானுஜர்

ஸ்ரீ இராமானுஜர் பல திவ்ய தேசங் களை மங்களாசாசனம் செய்து வரும்போது, திருக்குறுங்குடி வந்தார். அவரிடம் நம்பி, அவரை ஆசாரியனாகக்கொண்டு, தான் சிஷ்யனாக இருக்க விருப்பம் தெரிவித்து, அவருக்கு திவ்ய ஆசனம் அளித்தார். இராமானுஜரும், நம்பிக்கு த்வய மந்திரோபதேசம் செய்து, “ஸ்ரீ வைஷ்ணவ நம்பி” என்று தாஸ்ய நாமம் கொடுத்தார். திருவட்டாறு, திருவெண்பரிசாரம் போன்ற திவ்யதேசங்களைக் கடந்து, திருவனந்தபுரம் சென்ற இராமானுஜரை, அங்குள்ள நம்பூதிரி களின் வேண்டுகோளுக்கு இரங்கி, பெருமாள் இராமானுஜரைத் திருக்குறுங்குடியில் விட்டுவிடுமாறு தனது கருடனைப் பணித்தார். கருடனும், திருக்குறுங்குடியில் உள்ள திருவட்டப்பாறையில் விட்டுவிட்டார்.

காலையில் கண்விழித்த இராமானுஜர், திருக்குறுங்குடியில் இருந்ததைக் கண்டு வியந்து, அனுஷ்டானம் முடித்த பின், திருமணக் காப்பிடத் தனது சிஷ்யனான வடுக நம்பியை அழைத்தார். நம்பி, வடுக நம்பியாக வேடம் பூண, இராமானுஜரும் அவருக்கு திருமண் காப்பிட்டார். நம்பியை சேவிக்க சன்னதிக்கு சென்ற இராமானுஜர், வடுக நம்பியை தன்னருகே காணாமல் தேடிய போது, தம்மால் இடப்பட்ட திருமண் காப்பு, நம்பியின் திருநெற்றியில் இருப்பதைக் கண்டு அதிசயித்தார்.

 

கோயில் சிறப்புகள் :

  • வாமன க்ஷேத்திரம் என்ற பெருமை வாய்த்ததால், குறியவன் வசிக்கும் குடில் எனும் அர்த்தம் தொனிக்கக் குறுங்குடி என்று பெயர் பெற்றது.

 

  • வராஹ மூர்த்தியின் மடியிலிருந்து பூமிப் பிராட்டி கைசிக மஹாத்மியத்தை இத்தலத்தில் உபதேசம் பெற்று, பின் பூவுலகில் ஆண்டாளாக அவதரித்துப் பெருமாளின் பெருமையைப் பரப்பியதால், ஆண்டாளின் அவதாரக் காரணத் தலம் திருக்குறுங்குடி.

 

  • நம்மாழ் வாரின் பெற்றோர்களான காரியும், உடைய நங்கையும் இத்தலத்தில் வந்து புத்திர பாக்கியம் வேண்டிப் பிரார்த்தித்ததால், திருக்குறுங்குடி நம்பியின் அம்சமாக நம்மாழ்வார் அவதரித்தார். எனவே இத்தலத்தில், நம்மாழ்வாருக்குத் தனி சன்னதி இல்லை…

 

  • திருமங்கை ஆழ்வார் பரமபதம் அடைந்த தலமும் இதுவே.

 

  • இத்தலத்தில், பெருமான் ஐந்து நிலைகளில் சேவை சாதிக்கிறார். நின்ற நம்பி, இருந்த நம்பி, கிடந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி மற்றும் மலை மேல் நம்பி என்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

 

  • தாயார் இங்கு குறுங்குடி வல்லி நாச்சியார் என்ற பெயரோடு அருள் பாலிக்கிறார்.

 

  • இங்கு மற்ற கோயில்களைப் போலல்லாமல் கொடிமரம் விலகி இருப்பது தனிச்சிறப்பு.

 

  • பெரிய பெரிய சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இத்திருக்கோவிலில் சிவனுக்கென்று தனிச் சன்னிதி உள்ளது. இங்கே எழுந்தருளி இருக்கும் சிவபிரானுக்கு ‘மகேந்திரகிரி நாதர்’ என்றும் ‘பக்கம் நின்ற பிரான்’ என்றும் பெயர்.

 

  • வராக அவதாரங்கொண்ட பெருமாள் மகாலக்ஷ்மியுடன் சிலகாலம் இங்கு தங்கியிருந்ததாகவும், தமது மிகப்பெரிய வராக உருவத்தை குறுகிய உருவமாகக் குறைத்து இருந்த காரணத்தால் ‘குறுங்குடி நம்பி’ என்றும், இந்த ஸ்தலம் ‘குறுங்குடி’ என்றும் பெயர் பெற்றதாகவும் கூறுவர். அதனால் இந்த ஸ்தலம் ‘வாமன க்ஷேத்ரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

 

  • கோட்டை மதில் சுவரைப் போன்று உயரமான சுற்றுச் சுவர். அருமையான சிற்பங்கள் கோவில் உள்ளேயும், வெளி மண்டபத்திலும் உள்ளன. கரண்ட மாடு பொய்கை என்ற புஷ்கரணியும், தல விருட்சமான பனைமரமும் உள்ளேயே அமைந்துள்ளன.

 

  • இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது “கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால், ஸ்ரீ தெய்வநாயகன் மற்றும் ஸ்ரீவரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சிலைகள் கிடைக்கும்” என்ற அசரீரி கேட்டான், அசரீரியின்படி அ;நத இடத்தை தோண்ட மேற்படி தெய்வ ரூபங்களை கிடைக்கப் பெற்றான். அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோயிலில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்ததாக செய்தி உலவுகிறது.

 

  • திருமங்கையாழ்வார் 25 பாசுரங்களும், நம்மாழ்வார் 13 பாசுரங்களும், திருமழிசையாழ்வார் 1 பாசுரமும், பெரியாழ்வார் 1 பாசுரமும் ஆக 40 பாசுரங்கள் பாடியுள்ளனர்.

 

திருவிழாக்கள்:

சித்திரை வசந்தோற்சவம், வைகாசி ஜேஷ்டாபிஷேகம், ஆவணி பவித்ர உற்சவம், புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசி ஊஞ்சல் உற்சவம், தை தெப்ப உற்சவம், பங்குனி பிரம்மோற்சவம் போன்ற நாட்களில் சிறப்பு ஆராதனைகள், சுவாமி வீதியுலா நடைபெறும். மோட்சம் வேண்டி இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.

 

திறக்கும் நேரம்:          

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:          

அருள்மிகு அழகிய நம்பிராயர்(வைஷ்ணவ நம்பி) திருக்கோயில்

திருக்குறுங்குடி-627 115.

திருநெல்வேலி மாவட்டம்.

 

போன்:

+91 4635 265 289

 

அமைவிடம்:

நாகர்கோவில் – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில்

பணகுடியிலிருந்து 15 கிமீ தொலைவிலும்,

திருநெல்வேலியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும்,

வள்ளியூர் ரெயில் நிலையத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திலும்,

நாகர்கோவிலில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும் திருக்குறுங்குடி திருத்தலம் உள்ளது.

 

 

 

 

 

Share this:

Write a Reply or Comment

4 × 2 =