February 02 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சங்கரன்கோவில்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்

 

அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோயில்

 

மூலவர்                       :               சங்கரலிங்கம், (சங்கர நாராயணர்)

அம்மன்                     :               கோமதி

தல விருட்சம்         :               புன்னை

தீர்த்தம்                     :               நாகசுனை தீர்த்தம்

ஆகமம்/பூஜை   :               காமீகம்

ஊர்                              :               சங்கரன்கோவில்

மாவட்டம்                :               தென்காசி

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரன்கோவில் ஐம்பூத தலங்களில் ஒன்றாகும். இந்த ஐம்பூத தலங்களில் முதல் தலம் இது. இந்த கோவிலை மண் தலம் என்று அழைக்கிறார்கள்.

 

தல வரலாறு :

ஸ்ரீ கோமதி அம்மன், சிவனை வேண்டி ஊசி முனை மேலிருந்து தவம் செய்யும் யோகினி. சங்கன், பதுமன் என்ற இரு நாக மன்னர்களிடையே சண்டை மூண்டது. சங்கன் தன் கடவுளான சிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் பதுமன் தன் விருப்ப கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் அம்மனிடன் சென்று முறையிட்டனர். சங்கன், பதுமன் மட்டுமின்றி, இறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன் சிவனிடம் வேண்ட, அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், சங்கரநாராயணராக (சங்கரன்-சிவன்; நாராயணன்-திருமால்) காட்சியளித்தார்கள். கடவுளர் இருவருமே சமம் என்றும், அன்பினாலும் தியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும், சிவனும் திருமாலும் இணைந்த சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்தப்பட்டது. நாகர் இருவரும் இறைவனை வழிபட்டு, கோமதி அம்மனுடன் தங்கினர். நாகங்கள் அம்மனுடன் குடியிருப்பதால், இந்த தேவியை வணங்குவதன் மூலம், பயத்தை போக்கலாம். இங்கு உள்ள புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது. புற்று மண்ணை நெற்றியில் திருநீராக எண்ணி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள். பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலே வாழ்ந்து, தேவியின் மகிமைகளை உலகறிய செய்தார். இவரது சமாதியும் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இத்தலம் தென்பாண்டி நாட்டின் பஞ்சபூத தலங்களில் மண்தலம் (ப்ரித்திவி) ஆகும்

நாகராஜக்கள் வழிபட்ட லிங்கத்தை காலப்போக்கில் புற்று மூடி விட்டது. நாகராஜாக்கள் அதனுள்ளேயே இருந்தனர். மணிக்ரீவன் என்ற தேவன் பார்வதி தேவியின் சாபத்தால் மண்ணில் பிறந்து புன்னைவன காவலனாக இருந்தான். அவன் காப்பறையன் என்றும், காவற்பறையன் என்றும் பெயர் பெற்றான்.

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ண நாதருக்கு புன்னைவனத்திலே ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் அவனே காவலன். தோட்டத்தின் ஒரு பக்கம் புற்றொன்று வளர்ந்தது. அதை ஒரு நாள் அவன் வெட்ட அதிலிருந்த பாம்பின் வாலும் வெட்டுப் பட்டது. அப்போது அவன் புற்றின் பக்கத்தில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டான்.

திருநெல்வேலிக்கு மேற்கே பொருநையாற்றின் கரையிலுள்ள மணலூரில் அரசாண்டிருந்த உக்கிரபாண்டியர் அடிக்கடி மதுரை மீனாட்சியம்மையையும், சொக்கநாதப்பெருமானையும் வழிபடுவது வழக்கம். காவற்பறையன் புற்றை வெட்டிச் சிவலிங்கத்தை கண்ட அன்று, பாண்டியருடைய யானை கொம்பினால் தரையை குத்தி கீழே விழுந்து புரண்டது. அப்போது காவற்பறையன் ஓடிவந்து அவரிடம் செய்தியைத் தெரிவித்தான்.

உக்கிரபாண்டியர் அங்கு சென்றதும் சங்கரனார் அசரீரியாக ஆணை தர, பாண்டியர் காட்டை நாடாக்கி சங்கரநாராயணர் கோவிலையும் ஊரையும் தோற்றுவித்தார். கோயிலில் கோபுரத்தைத் தாண்டி நிர்வாக அலுவலக இடப்புறத் தூணில் காவற்பறையனின் திருவுருவம் உள்ளது.

 

கோயில் சிறப்புகள் :

  • இங்கு சிவன் பாதி, விஷ்ணு பாதி இணைந்து சங்கர நாராயணராக காட்சித் தருவது சிறப்பம்சம் ஆகும்.
  • மூலஸ்தானத்தில் சிவனும், பெருமாளும் ஒன்றாக அருளுகின்றனர்.

 

  • சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. இச்சன்னதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது.

 

  • உத்ராயண, தட்சிணாயன காலங்களில் சூரிய பகவான் தனது சாலைகளுடன் வந்து சிவபெருமானை பூஜிக்கும் தினத்தில் சூரிய பூஜை வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த காலங்களில் சூரிய பூஜை என்ற விழா கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்ச் 21,22,23 மற்றும் செப்டம்பர் 21,22,23 ஆகிய நாட்களில் சங்கரலிங்க மூர்த்தியை சூரிய பகவான் தரிசிப்பதை நாம் இன்றும் காண முடியும்.

 

  • பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலே வாழ்ந்து, தேவியின் மகிமைகளை உலகறியச் செய்தார். இவரது சமாதியும் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது.

 

  • இங்கு தல விநாயகர் அனுக்ஞை விநாயகர் எனப்படுகிறார்.

 

  • கோயில் நுழைவு வாயிலில் அதிகார நந்தி, தன் மனைவியுடன் காட்சி தருகிறார். சிவன் எதிரேயுள்ள நந்தி ருத்ராட்ச பந்தலின் கீழ் இருக்கிறார்.

 

  • சந்திரன் (மதி) போல பொலிவான முகம் கொண்ட அம்பிகை, இங்கு தவம் புரிய வந்தபோது, தேவலோக மாதர்கள் பசுக்கள் வடிவில் அவளுடன் வந்தனர். எனவே இவள், “கோமதி’ என்று பெயர் பெற்றாள். ஆவுடையாம்பிகை என்றும் இவளுக்கு பெயர் உண்டு. “ஆ’ என்றாலும் “பசு’ தான். “பசுக்களை உடையவள்’ என்று பொருளுண்டு.

 

  • சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்றுதான் லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வர். ஆனால், இக்கோயிலில் சித்திரை மற்றும் ஐப்பசி மாதப்பிறப்பன்று அன்னாபிஷேகம் செய்கின்றனர். துவங்கும் புதிய வருடத்தில் உணவிற்கு பஞ்சமில்லாத நிலை இருக்க வேண்டும் என்பதற்காக சித்திரையிலும், ஐப்பசி புண்ணிய கால துவக்கம் என்பதால் அம்மாதத்தின் முதல் நாளிலும் இந்த அபிஷேகத்தை செய்கிறார்கள்.

 

  • பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடப்பதுபோல, இங்கும் கொண்டாடப்படுகிறது. இதற்காக கோயிலின் வடக்கு பிரகாரத்தில் சொர்க்கவாசல் இருக்கிறது. அன்று மகாவிஷ்ணு, பல்லக்கில் அனந்த சயனத்தில் எழுந்தருளி, ரதவீதி சுற்றி வருவார். அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும்.

 

  • ஆடித்தபசு விசேஷம்: “தபஸ்’ என்றால் “தவம்’ அல்லது “காட்சி’ எனப்பொருள்படும். அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கர நாராயணராக காட்சி தர வேண்டி தவமிருந்து அவரது காட்சியைப் பெற்ற நாளே ஆடித்தபசு திருநாளாகும். இந்த விழா, 12 நாட்கள் நடக்கும். அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் இவளுக்கு காட்சி தருகிறார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்குச் செல்வார்.

 

  • சக்தி பீடங்கள் 108-ல் சங்கரன்கோவில் கோமதி அம்மனின் தலம் 8-வது பீடமாக கருதப்படுகிறது. சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் கோமதி அம்மனை “பேசும் தெய்வம்’’ என்று சொல்கிறார்கள்.

 

  • சங்கரன்கோவில் தல வரலாற்றில் கோமதி அம்மனை “கூழை நாயகி’’ என்று குறிப்பிட்டுள்ளனர். கூழை என்றால் “வால் அறுந்த நாகம்’’ என்று பொருள்.

 

  • சங்கரன்கோவிலில் காலை பூஜையின் போது துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள். மற்ற நேரங்களில் விபூதி வழங்கப்படுகிறது. பூஜையின்போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலையை அணிவிக்கிறார்கள்.

 

  • வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்புத் தொல்லை இருந்தால், சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அதன் வெள்ளி உருவங்களை வாங்கி காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.

 

  • பொதுவாக கோவில் கருவறை சுற்றுச்சுவர் பின்புறத்தில் லிங்கோத்பவர் அல்லது விஷ்ணு காட்சி தருவார்.

 

  • ஆனார் இங்கு யோக நரசிம்மர் இருக்கிறார். சங்கரன்கோவில் தலத்தில் வழிபட்டால் ஒற்றுமை குணம் உண்டாகும். நானே பெரியவன் என்ற மமதை எண்ணம் நீங்கும்.

 

  • இங்கு பக்தர்கள் கோமதி அம்மைக்கு நேர்ந்து கொண்டு மாவிளக்கு எடுத்து வழிபடுவது சிறப்பாகும். இதற்காக இங்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவு கூடி மாவிளக்கு எடுப்பார்கள். இந்த மாவிளக்கு வழிபாடு செய்வதற்காக முறைப்படி விரதம் இருந்து பச்சை அரிசி அல்லது தினையை இடித்து மாவாக்கி அதனுடன் வெல்லம் கலந்து மாவிளக்கு தயார் செய்வார்கள் என்பது சிறப்பம்சம்.

 

  • மற்ற திருக்கோவிலில் வடக்கு நோக்கி காட்சியருளும் துர்க்கை அம்மன் இங்கே தெற்கு திசை நோக்கி காட்சியளிப்பது சிறப்பம்சம் ஆகும்.

 

  • இந்த கோவிலில் விடுதலைக்காக போராடிய பூலித்தேவருக்கு தனி அறை உள்ளது. அதில் அவருடைய திருவுருவ படம் இருக்கிறது.

 

  • ஐப்பசி மாதம் இத் தல சுப்பிரமணியருக்கும், சண்முகருக்கும் கந்த சஷ்டி திருவிழா இனிதே நடைபெறும். இதில் இத்தல ஆறுமுக நயினாருக்கு நடைபெறும் ஆறுமுகார்ச்சனை மற்றும் ஆறுமுக தீபாராதனை மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

 

  • பெரும்பாலான முருக தலங்களில் கந்தசஷ் டியின்போது, சூரசம்ஹாரத் திற்கு ஒரு முகம் கொண்ட சுப்பிரமணியராக மட்டுமே முருகன் செல்வார். ஆனால் இங்கு ஆறு முகங்களுடன் சண்முகர் செல்கிறார். சம்ஹாரத்தின்போது முருகன், விஸ்வரூபம் எடுத்ததன் அடிப்படையில் இவ்வாறு செல்வதாகச் சொல்கிறார்கள். மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

 

  • இக்கோவிலின் கிழக்கு வாசலில் 125 அடி உயரமுள்ள 9 நிலை கொண்ட இராஜகோபுரம் அமைந்துள்ளது. இக்கோபுரம் சங்கரலிங்கம் பெருமானின் கர்ப்பகிரகத்திற்கு நேரே தலைவாசலில் அமைந்துள்ளது.

 

  • இந்து சமயத்தில் உட்பிரிவுகளான சைவம், வைணவம், சாத்தேயம், கானாபத்தியம், கௌ மாரம், பேரவம் போன்ற யாவும் அன்பே உருவான ஒரே இறைவன் தம் சக்தியை பல உருவங்களில் வெளிப்படுத்தி நம்மை ஆட்கொண்டுள்ளார் எனும் பெருமை நிலை நாட்டப்பட்டு இருப்பதை நாம் இத்திருத்தலத்தின் மூலம் காண முடிகிறது.

 

நடைதிறப்பு :

காலை 5.00 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.

 

திருவிழாக்கள் :

ஆடிமாதம் ஆடித்தவசு திருவிழா 15 நாட்கள் (ஆடித்தவசு திருவிழா சித்திரை பிரமோற்சவ திருவிழாவின் 9-ம் நாளன்று அம்பாள் திருத்தேரோட்டமும் நடைபெறும்),

  • புரட்டாசி நவராத்திரி திருவிழா 9 நாட்கள்,
  • ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 12 நாட்கள்,
  • மார்கழி திருவெம்பாவை திருவிழா 10 நாட்கள்,
  • சித்திரை பிரம்மோற்சவ திருவிழா 10 நாட்கள்,
  • ஐப்பசி சஷ்டி 7 நாட்கள்,
  • தை தெப்பத் திருவிழா 3 நாட்கள் (தை மாதாந்திர வெள்ளிக்கிழமை அன்று தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது).

 

கோயில் முகவரி :

அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயில்,

சங்கரன்கோவில் – 627 756,

திருநெல்வேலி மாவட்டம்.

 

போன்: 

+91- 4636 – 222 265, 94862 40200.

அமைவிடம் :

இந்த கோவில் செல்ல திருநெல்வேலி புது பஸ் நிலையத்தில் இருந்து 10 நிமிடத்துக்கு ஒரு பஸ் உண்டு. நெல்லையில் இருந்து 52 கிலோ மீட்டரில் இந்த கோவில் உள்ளது. கோவில் பட்டியில் இருந்து கழுகுமலை வழியாகவும் சங்கரன்கோயிலை அடையலாம். ராஜபாளையம் மற்றும் தென்காசியில் இருந்தும் சங்கரன்கோவிலுக்கு பாதை உள்ளது

 

Share this:

Write a Reply or Comment

two × 1 =