January 27 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பிரம்மதேசம் திருக்கோயில்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் பிரம்மதேசம்

மூலவர்                   :           கைலாசநாதர்

அம்மன்                   :           பெரியநாயகி

தல விருட்சம்       :           இலந்தை

தீர்த்தம்                    :           பிரம்மதீர்த்தம்

ஊர்                             :           பிரம்மதேசம்

மாவட்டம்              :           திருநெல்வேலி

 

கோவில் வரலாறு:

அகத்தியரின் சீடராக திகழ்ந்த உரோமச மகரிஷி என்பவருக்கு பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டுவிட அவர் பல தலங்களுக்கு சென்றும் சிவபெருமானை வணங்கி வருகிறார். அப்படி அவர் தென் திசையில் பொதிகை மலை அடிவார பகுதிக்கு வந்த போது கடனை ஆற்றின் தெற்கே இருந்த வனத்திற்குள் வரும்போது ஒரு இலந்தை மரத்தின் அடியில் சுயம்பு உருவில் இருந்த சிவலிங்கத்தை காண்கிறார். அந்த லிங்கத்திற்கு முறைப்படி பூஜைகள் செய்து வணங்கி வர அவருக்கு இறைவன் காட்சியளித்து அவருடைய பிரம்மகத்தி தோஷத்தை நீங்கச் செய்ததாக வரலாறு கூறப்படுகிறது.

ஆதி காலத்தில் பிரம்மனும், சிவபெருமானை புறக்கணித்து நடத்தப்பட்ட தட்சனின் யாகத்தில் பங்கு கொண்ட பாவத்தை போக்க இங்கு தீர்த்தம் உருவாக்கி இத்தலத்தில் வந்து கைலாசநாதரை வணங்கி அருள்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தான் இத்தலம் “அயனீச்சரம்” என்றும், இங்குள்ள தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்றும் புராண காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. அயன் என்ற சொல்லுக்கு பிரம்மன் என்று பொருள்.

இதன் பின் வந்த காலங்களில் ராஜ ராஜ சோழனால் இக்கோவில் கட்டப்பட்டு, பின்னர் விஜயநகர பேரரசர்களால் விரிவாகப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

கோயில் சிறப்புகள்:

  • பிரம்மாவின் பேரனான ரோமசமுனிவர் இக்கோயிலில் எழுந்தருளி அருள்புரியும் இறைவனை வழிபட்டதால் பிரம்மதேசம் என்ற பெயர் வழங்கப்படுவதாக புராண வரலாறு கூறுகிறது.

 

  • காஞ்சி காமகோடி பீடத்தின் மூன்றாவது ஆசார்யாள் ஸ்ரீ சர்வக்ஞாத்மேந்திர சரசுவதி சுவாமிகள் அவதரித்த தலம் இவ்வூர் என்ற சிறப்பும் உண்டு.

 

  • காஞ்சி காமகோடி பீடத்தின் மூன்றாவது ஆசார்யாள் ஸ்ரீ சர்வக்ஞாத்மேந்திர சரசுவதி சுவாமிகள் அவதரித்த தலம் இவ்வூர் என்ற சிறப்பும் உண்டு.

 

  • இங்கு தனி சன்னதியின் கருவறையில் காட்சித்தரும் அம்மையின் பெயர்பெரியநாயகி. வடமொழியில் இவள் பிருகன்நாயகி என்று அழைக்கப்படுகிறாள். இவள் தனது வலக் கரத்தில் மலர் ஏந்தியும், இடக் கரத்தை கீழே தொங்கவிட்ட படியும், சற்றே இடைநெளித்து, தன் முகத்தில் புன்சிரிப்பு காட்டி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

 

  • இத்திருக்கோவிலின்தல விருட்சமான இலந்தை மரம் தனி சன்னதியில் உள்ளது. இந்த மரத்திற்கு அடியில் தான் முன்னர் சுவாமி சுயம்பு மூர்த்தியாக உரோமச முனிவருக்கும், பிரம்மாவுக்கும் காட்சியருளினார். இங்கு ஆதியில் தோன்றிய இலந்தையடி நாதர் சன்னதி தனியாக அமையப்பட்டுள்ளது.

 

  • இங்கு சுமார் ஏழடி உயரத்தில் நின்ற கோலத்தில் கம்பீரமாக காட்சித் தருகிறார் இத்தலத்தின் சிறப்பு வாய்ந்த மூர்த்தியானகங்காளநாதர். இவருடன் பூத கணங்கள், அப்சரஸ் கன்னிகள், இந்திரன், சந்திரன், சூரியன் ஆகிய பரிவார மூர்த்திகளும் ஒரே சன்னதியில் காட்சித் தருகிறார்கள்.

 

  • சூரியன், உத்தராயணம் தட்சிணாயனம் காலங்களில் பிரம்மதேசம் கயிலாசநாதர் கருவறைக்கு வந்து தனது வெம்மையான கரங்களால் இறைவனை தழுவுகிறார்.

 

  • தனி சபையுடன் கூடிய சன்னதியில்புனுகு சபாபதி திருநடன காட்சியளிக்கிறார். இவர் ஓம் என்ற பிரணவ வடிவமைப்புடன் கூடிய ஒரே கல்லில் செதுக்கப்பட்ட திருமேனி ஆவார்.

 

  • சிவபெருமான் தான் அத்திச்சுரம் என்று சிறப்பிக்கப்படும்சிவசைலம், திருவாலீச்சுரம் என்று சிறப்பிக்கப்படும் அயன் திருவாலீஸ்வரம், அயனீச்சுவரம் என்று சிறப்பிக்கப்படும் பிரம்மதேசம் ஆகிய இம் மூன்று தலங்களிலும் சுயம்பு மூர்த்தியாக உள்ளதை அத்திரி மகரிஷியிடம் தெரிவித்துள்ளதாக பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

 

  • இங்குள்ளநந்தி ஒரே கல்லில் மிகவும் பிரம்மாண்டமாகவும், கலைநயத்துடனும் செதுக்கப்பட்டது என்ற சிறப்பை கொண்டது.

 

  • கோயில் ராஜகோபுரத்தின் முழு உருவ நிழலும் எதிரேயுள்ள தெப்பக்குளத்தில் விழும்படியாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

 

  • இக்கோயிலில் காணப்படும் பூதலவீர உதய மார்த்தாண்டன் (கி.பி. 1515) கல்வெட்டில் இவ்வூர் முள்ளிநாட்டு ராஜராஜ சதுர்வேதி மங்கலத்து பிரம்மதேசம் எனவும், இறைவன் கைலாயமுடையார் எனவும் குறிப்பிடப்படுவதைக் காணலாம். விஜயநகர மன்னர் வீர பிரதாப சதாசிவ தேவ மகாராயர் கல்வெட்டும் காணப்படுகிறது.

 

  • ஆதி கயிலாயங்களில் முதன்மையானதாக இந்தக் கோவில் திகழ்கின்றது.

 

  • பஞ்ச பீட ஸ்தலங்களில் கூர்ம பீடமாகவும் அமைந்துள்ளது

 

  • தெற்கில் இருந்து வடக்கு நோக்கி கயிலாசநாதரை , பிரம்ம தேசத்தில் ஓடிக்கொண்டிருக்கும் கடனா நதியானது வலம் வருவதால், காசிக்கு சென்று சிவதரிசனம் செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம் இங்கேயும் கிடைக்கும் என்பதுஐதீகம்.

 

நாலாயிரத்தம்மன்:

முற்காலத்தில் ராஜ ராஜ சோழனால் வேதம் ஓதிய அந்தணர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட இத்தலம், வளமான ஊர் என்பதால் அடிக்கடி படையெடுப்புகளும், கள்வர்கள் தொந்தரவும் அதிகமாக இருந்தது. இவ்வூர் மக்களின் பாதுகாப்புக்காக, ராஜராஜ சோழன் தன்னுடைய படை வீரர்கள் நாலாயிரம் பேரை இங்கு காவல் வைத்திருந்தான். அந்த நாலாயிரம் வீரர்களும் வைத்து வணங்கிய அம்மன் தான் நாலாயிரத்தம்மன் என்று கூறப்படுகிறது.

இந்த ஊரில் உள்ள பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலுக்கு வடமேற்கு திசையில் எல்லை காவல்தெய்வமாக இந்த நாலாயிரத்தம்மன், தனிக்கோவில் கொண்டு வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இந்த அம்மனின் உற்சவமூர்த்தத்துக்கு, பிரம்மதேசம் கைலாசநாதர் கோவிலுக்குள் தனி சன்னதி அமையப்பெற்றுள்ளது.

இந்த ஊரின் எல்லையில் வடக்கு நோக்கிய திருக்கோவிலில், வடக்கு வாசல் கொண்ட செல்வியாக அம்மை, தன் வலது காலை மடித்தும், இடது காலை தொங்க விட்டும், அமர்ந்த நிலையில், எட்டு திருக்கரங்களோடு, சிரித்த முகத்தவளாக கருவறையில் காட்சித்தருகிறாள்.

கருவறைக்கு வெளியில் உள்ள மண்டபத்திலும் தனியாக ஒரு அம்மையின் திருமேனி அமைப்பெற்றுள்ளது சிறப்பு. இவளே ஆதிகாலத்து அம்மையாக விளங்குகிறாள்.

திருவிழாக்கள்:

இங்கு பங்குனி மாதம் தெப்பத் திருவிழா, ஆடி மாதம் நந்தி களபம், ஐப்பசி திருக்கல்யாணம், ஐப்பசி கந்த சஷ்டி விழா, கார்த்திகை தீபம், மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மாசி மாதம் சிவராத்திரி ஆகிய விழாக்கள் விமரிசையாக நடைபெறும்.

திறக்கும் நேரம்:          

காலை 7 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:          

அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயில், பிரம்மதேசம் – 627413. திருநெல்வேலி மாவட்டம்.,

தொடர்புக்கு:

+91- 4634 – 254247, 94428 94094

அமைவிடம்:

திருநெல்வேலி மாநகரிலிருந்து மேற்கே சுமார் 40 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது அம்பாசமுத்திரம்.

இங்கு செல்ல திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பாபநாசம் செல்லும் பேருந்தில் ஏறி, அம்பாசமுத்திரத்தில் இறங்கி, அங்கிருந்து 10 நிமிட பயணமாக சிற்றூந்துகள், நகரப்பேருந்துகள் மற்றும் தனியார் கட்டண வாகனங்களில் இத்தலத்தை சென்றடையலாம்.

 

 

Share this:

Write a Reply or Comment

sixteen + 16 =