June 23 2022 0Comment

மேஜர் சுதிர் குமார் வாலியா

மேஜர் சுதிர் குமார் வாலியா

 

சினிமாவில் 50,100 கோடி
சம்பளம் வாங்கி கொண்டு

தேசம் பற்றி
மருத்துவர்கள் பற்றி
கேவலமாக வீர வசனம் பேசி
கதாநாயகியை மானபங்கப்படுத்த வந்த 50 பேரை ஒத்தை ஆளாக அடித்துத் துவைத்து

அதன் பிறகு அவர்கள்
செய்ய வந்த வேலையை
தானே செய்யும் சினிமா ஹீரோவுக்காக கை தட்டுபவர்கள் தான் நீங்கள் என்றால்
நீங்கள் அவசியம்
படிக்க வேண்டிய பதிவு இது….

ராணுவத்தில் சிறுவயதில்
சேர்ந்து அபார சாதனை
படைத்து ஹீரோவாக வாழ்ந்த
ஒரு உண்மையான ஹீரோவின் உண்மை கதை இது:

மேஜர் சுதிர் குமார் வாலியா என்பவர்
இந்திய ராணுவத்தின் மிகவும் புகழ் பெற்ற பல போர் முனைகளில் வீர தீர சாகசம் புரிந்த 9 பாரா கமாண்டோ ஸ்பெஷல் ஃபோர்சஸ் (9 Para SF) படைப்பிரிவை சேர்ந்தவர்.

சுதிர் குமார் வாலியாவின்
9 Para SF படைப்பிரிவு இந்திய தேசத்தின் எதிரிகளுக்கு எதிராக எண்ணற்ற அதி ரகசிய (Covert) ஆபரேஷன்களை மிகவும் வெற்றிகரமாக நடத்திய படை பிரிவாகும்.

சுதிர் குமார் வாலியாவைப்
பற்றிய சில தகவல்களையும்
இங்கு பகிர்வதில் நான் பெருமையுறுகிறேன்.

ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சுஜன்பூர் திஹ்ரா என்னுமிடத்தில் உள்ள சைனிக் ஸ்கூலில்
பள்ளிக் கல்வியை முடித்த இவர்,
பின்னர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள கடக்வாஸ்லா என்னுமிடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற நேஷனல் டிஃபன்ஸ் அகாடமி (NDA) யில் பயிற்சியினை வெற்றிகரமாக முடித்த பின்,

இந்திய ராணுவத்தின் ஜாட் ரெஜிமென்டில் நான்காவது பட்டாலியனில் சேர்ந்தார்.

உலகின் மிக உயரமான மிக கொடுமையான போர்முனையான சியாச்சின் பனி உச்சியில்
தன்னார்வ வீரர்களைக் கொண்டே இந்திய ராணுவம் தனது நிலைகளை காத்து வருகிறது.

சியாச்சின் மலையுச்சியின் கொடுமையான சூழல் காரணமாக தன்னார்வ வீரர்கள் மட்டுமே அங்கு பணியில் இருப்பர்.

அதுவும் ஒரு முறை ஆறுமாத காலத்தை சியாச்சினில் உயிருடன் கழித்துவிட்டால்.

பின்னர் அந்த வீரர் அவரது சர்வீஸ் காலம் முழுதும் சியாச்சின் பக்கமே போக வேண்டாம்.

இப்படிப்பட்ட இடத்தில் சுதிர் குமார் வாலியா ஆறு மாதம் பணியை முடித்த போது,

பாகிஸ்தானியரின் தாக்குதல்கள் அப்போது மிக கடுமையாக இருந்த சமயம் என்பதால் சியாச்சின் போஸ்டின் நிலைமையை கருத்தில் கொண்டு,

இன்னொரு ஆறு மாத காலத்திற்கு தானாகவே பணி செய்ய முன் செய்த போது இந்திய ராணுவத்தின் தலைமையகமே அதிர்ந்து தான் போனது.

கொடுமையான சூழலில்
இன்னொரு ஆறு மாத காலத்திற்கு சுதிர் பணி செய்ய வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்ட போதும்.

கொடுமையான சியாச்சினில் பிடிவாதமாகவும் வெற்றிகரமாகவும் இரண்டாவது ஆறு மாத கால பணியை முடித்த மாவீரர் சுதிர்.

இவரது திறமையும்
வெளியே தெரியாத பல ரகசிய ஆபரேஷன்களில் இவர் காட்டிய தீரத்தையும் கண்டு .

இவருக்கு
பதவியுயர்வு வழங்கப்பட்டு
அப்போது
இந்திய ராணுவத்தின்
பிரதான தளபதியாக இருந்த
ஜெனரல் வேத பிரகாஷ் மாலிக்
(Chief of the Army Staff – COAS) அவர்களின் நேரடி உதவியாளராக அதாவது Aide-de-camp (ADC) என்னும் உயர்ந்த பதவியையும் மிக சிறிய வயதிலேயே பெற்றார்

அந்த நேரத்தில் தான்
கார்கில் யுத்தம் வந்தது

இவரது நைன் பாரா எஸ்.எஃப் கார்கிலில் போரில் ஈடுபட்டிருந்த நேரம்

ஒரு நாள் COAS அறைக்குள்
நுழைந்த சுதிர் சல்யூட் அடித்து

தனது வேண்டுகோளை
கூறியபோது பிரதான தளபதியே சற்று அதிர்ந்து தான் போனார்.

காரணம் தன்னை ADC பொறுப்பிலிருந்து விடுவித்து கார்கில் போர்முனையில் ரிப்போர்ட் செய்யம்படியாக ஆர்டரை தாருங்கள் என்று கேட்டபோது

உனக்கு என்ன பைத்தியமா?
என்று பிரதான தளபதியே
அதிர்ந்து போய் கேட்டார்

மன்னிக்கவும் சார்
என்னுடைய நண்பர்கள்
அங்கே போர்முனையில்
எதிரியின்
புல்லட்டுகளையும் எரிகுண்டுகளையும்
மார்ட்டர் குண்டுகளையும் எதிர்நோக்கும் போது
நான் இங்கே டெல்லியில் ADC போஸ்டில் சுகமாக எப்படி இருக்க முடியும் சார்

என் மனசெல்லாம் போர் முனையில் தான் உள்ளது.ஆதலால் தயவுசெய்து
என்னை போர்முனைக்கு அனுப்புங்கள்.

பிரதான தளபதியோ சிரித்துக்கொண்டே

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தண்ணி காட்டதானே அங்கே போக துடிக்கிறாய்..

எனக்கு இது கூடவா உன்னைப்பற்றித் தெரியாது என்று கூறி விடை கொடுத்தார்

போர்முனையின் பேஸ் கேம்பில்
சுதிர் போய் இறங்கிய உடனேயே..
நைன் பாரா வீரர்கள் கோஷம் இமயமலை குன்றுகளில் பட்டு விண்ணை முட்டும் அளவிற்கு எதிரொலித்ததாம்.

சுதிர் போர்முனையில் இறங்கிய
பத்தாவது நாளில் கார்கிலின் முஸ்கோ பள்ளத்தாக்கு செக்டரில் 5200 மீட்டர் உயரத்தில் உள்ள ஜுலு உச்சியை (Zulu top ) பிடித்தார்.

அதுமட்டுமல்லாமல் அதன் பின்
அந்த பகுதியில்
இந்திய ராணுவ கட்டுப்பாட்டை பாகிஸ்தானியர்களால் நெருங்கவே முடியாத வலுவான நிலைமையினை
ஏற்படுத்தினார்

கார்கில் யுத்தம் வெற்றிகரமாக முடிந்த பின்னரும்

காஷ்மீர் மாநிலத்தில்
ஊடுருவியுள்ள பாகிஸ்தானிய பயங்கரவாதிகளுக்கெதிரான போர்முனையில் சென்று பணியாற்றினார்

1999 ஆம் ஆண்டு
ஆகஸ்ட் 29 ஆம் நாள்
காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில்

ஹப்ருதா காட்டுப்பகுதியில் மறைந்திருந்த பாகிஸ்தானிய பயங்கரவாதிகளுக்கெதிரான தாக்குதலை ஐந்தே ஐந்து பேர் கொண்ட தனது சிறு படைப்பிரிவுடன் தொடுத்தார்

ஏறக்குறைய 20க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளில் ஒன்பது பேர்களை
இவரே தனியொருவராக மேலுலகம் அனுப்பியும் வைத்தார்

மேற்கொண்டு முன்னேறும்போது

பயங்கரவியாதிகளின் குண்டுகள் அவரது முகம் / கை / நெஞ்சு / வயிற்று பகுதிகளில் பாய்ந்து அவரை நகர முடியாது வீழ்த்தியது

அவரை உடனடியாக
மெடிக் எவாகுவேஷன் என்னும் முறையில் போர்முனையிலிருந்து தூக்கி வர அவரது சக வீரர்கள் முனைந்த போது

அவர்களைத் தடுத்து நான் ஆர்டர் தருகிறேன்

முதலில் மிஷனை முடியுங்கள்
என்று வயர்லெஸ்ஸில் ஆர்டர்களைக்கொடுக்க
மீதமிருந்த பயங்கரவாதிகளும் சுத்தமாக ஒழிக்கப்பட்டனர்

அடிபட்டு 35 நிமிடங்கள் கழித்தே மெடிக் எவாகுவேஷன்
மூலம் சுதிரை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லமுடிந்தது

ஆனால் அதிக ரத்த இழப்பு காரணமாக சுதிர் வீரமரணம் அடைந்தார்

உயிர் பிரிந்த பின்னரும் அவரது கை பிடியில் வயர்லெஸை இறுக்கி வைத்திருந்தார் என்பது கவனிக்கத்தக்க விஷயம் ஆகும்.

பின்குறிப்பு 1:

இவரது தந்தையார்
திரு. ரூலியா ராம் அவர்களும் இந்திய ராணுவத்தில் சுபேதார் மேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்

பின்குறிப்பு 2 :

இவரது வீரத்தைப் பாராட்டி
இந்திய அரசு நம் ராணுவத்தின் மிக உயரிய விருதான அசோக் சக்ரா விருதை (posthumous ஆக) வழங்கி கவுரவித்தது

என் இனிய அன்பு தமிழ் மக்களே

இவருக்கும் இவர் குடும்பத்திற்கும் இவரைப் போன்று
உயிர் தியாகம் செய்த ஆயிரக்கணக்கான வீரர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்திற்கும் நன்றி சொல்வோம்

நான் தூங்க தங்கள் தூக்கத்தை தொலைத்த இதுபோன்ற ஆயிரக்கணக்கான எல்லை கருப்பண்ண சுவாமிகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நம்முடைய தின வழிபாட்டில் நாம் விரும்பும் இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

என்றும் அன்புடன்

டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

four × 2 =