அவளும், ஆண்டாளும், அவனும்: –

ஸ்ரீ

god

  • வாழ்க்கை முடியவே முடியாது என்கின்ற முடிவெடுத்து நிறைய பேர் சந்தோஷமாக வாழ்வதாக நடித்து கொண்டிருக்கிறார்கள்.
  • வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் முடிந்து விடும் என்று தெரிந்தும் சந்தோஷமாக சிலபேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த சிலரில் நானும் ஒருவன்.

எதிர்பார்ப்பு நிறைந்த உலகம்

ஏமாற்றத்திற்கு குறைவில்லா உலகம்

ஏற்றத்திற்கு என்றும் பஞ்சமில்லா உலகம்

ஏறிய பின் ஏற்றிய ஏணியை எட்டி உதைக்கும் உலகம்

நின்ற ஏணிக்கு நிற்பதும் ஒன்று தான்… படுத்திருப்பதும் ஒன்று தான் என்ற எண்ணம் இருப்பதை அறியா உலகம்.

– இப்படி வகைப்படுத்தலாம் என்னை இதுவரை சந்தித்தவர்களை.

மொத்தத்தில் அது ஏனோ தெரியவில்லை ஏற்றிய ஏணியை எட்டி உதைக்காதவர்களை நான் இன்னும் என்னுள்ளும் பார்க்கவில்லை… எனக்கு வெளியேயும் பார்க்கவில்லை. யோசிக்க வேண்டாம் உங்களுக்கு அப்படியே தான் இருக்கும்… காரணம் உலகம் உருண்டை தானே….

உலகம் உருண்டை என படித்த எனக்கு ஆம் வாழ்க்கையும் உருண்டைதான் என புரியவைத்தவளை பற்றி சற்று பேசுவோமா?!!!…..

என்னைத்தவிர வேறு சிந்தனை இல்லாத அவள்

என் சிந்தனையில் அவளும் உண்டு என்கின்ற அளவில் நான்

அவளிடம் ஒரு நாள் கேட்கின்றேன். ஏன் நெற்றியில் நாமம் போடுகிறீர்கள்;என்றாவது ஒருநாள் உங்களுக்கும் நாங்கள் கட்டாயமாக போட்டு விடுவோம் என்று அர்த்தத்தின் வெளிப்பாடா இது? என்று….

அவள் சிரித்து கொண்டே சொன்னாள் டேய்! லூசு… ஒரு நாள் உன் வாழ்க்கையை நீ வாழ்ந்து முடிப்பதற்குள் உனக்கு தேவையான அர்த்தத்தை எப்படி, எந்த அளவில் அது உனக்கு தேவைப்படுமோ உன் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு அதுவே கிடைக்கும். கண்டிப்பாக கிடைக்கும் எனக் கூறினாள்.ரொம்ப சந்தோஷம் என நக்கலாக பேச்சை முடித்தேன்.

கேட்ட நானும் இருக்கின்றேன் சொன்ன அவளும் இருக்கின்றாள் அன்று அவள் சொன்ன உண்மையை உணர்ந்தேன் என்று சொல்ல அவள் என்னிடத்திலும் இல்லை. நானும் தான் அவளிடத்தில் இல்லை. கழித்தலுக்கும், கூட்டலுக்கும் காரணம் அவனைத்தவிர வேறு யாருக்கு தெரியும்.

பெருமாள் மீது நம்பிக்கையில்லாத நான், ஆண்டாளாகத் தவிர வேறு அறிவை பெறாத நான், ஏறத்தாழ பெரிய இடைவெளிக்கு பிறகு திருப்பதி செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. என்னை கூட்டிச் சென்றவர் சாதாரணவரா?!!!…

சென்றேன்

20 நிமிடம் பெருமாள் முன் நின்றபடி தரிசனம்.

ஆர்த்தி, தீர்த்தம், சடாரி என ஒன்பது முறை கிடைக்க பெற்றேன்.தனக்கென்று ஒன்றும் வைத்துக் கொள்ளாதவளின் கணவரை மனம் குளிர பார்த்து மகிழ்ந்தேன். பெருமாள் பாதத்தில் வைத்த வாழைப்பழமும், ஆரஞ்சும் என் கையில் திணிக்கப்பட்டது.

படியாய் இருந்து உன் பவளவாய் காண்பனே என்றார் சேர நாட்டு ராஜாவாக இருந்து பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவராய் மாறிய குலசேகர ஆழ்வார். அன்று நான் நின்று சேவித்த இடம் குலசேகரப்படியில்.

குறுகாய் பிறப்பேனே

மீனாய் பிறப்பேனே

கோனேரி விலங்காய் பிறப்பேனே என்றார் பெருமாளை தரிசிக்க பெருமகனார்.

குழந்தையாக பிறந்து, பாதி மிருகமாய் வளர்ந்து, மனிதனாக வாழும் எனக்கு இந்த வாய்ப்பு பைசா செலவில்லாமல் கிடைத்ததை என்னவென்று சொல்வது….

திருப்பதி மலையில் பெருமாளுக்கு அருகில் நின்று பணி செய்யும் நான்கு ஏகாங்கிகளில் ஒருவர் ஸ்ரீவில்லிபுத்துரை சேர்ந்தவர்.அவர் என்னை தான் தங்கி இருந்த மடத்துக்கு வரவழைத்து என்னை  பார்த்து சொன்னது.

“நீங்கள் திருப்பதிக்கு வந்தது எனக்கு மிக சந்தோஷம். காரணம் ஒருமுறை உங்களை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சன்னதியில் வைத்து, பார்த்து உங்களை திருப்பதிக்கு வாங்கோ என்று சொன்னபோது நீங்கள் சொன்னீர்கள் “எனக்கு ஆண்டாள் போதும்” என்று. நானும், ஆண்டாளுக்கு கைங்கரியம் செய்யும் என் அண்ணனும் மிரண்டு போனோம் – உங்கள் பதிலை கேட்டு.

அன்று நினைத்து கொண்டோம் வைணவனுக்கே தெரியாத  வைணவத்தை, பெரிய வைணவ தத்துவத்தை வைணவம் பற்றி ஒரு எழுத்து கூட தெரியாத, அறியாத  நீங்கள் சொன்னது  மொத்த நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தை வெறும் ஒரு வார்த்தைகொண்டு  சொல்ல கேட்டது போல் இருந்தது என்று…

அன்று நினைத்து கொண்டேன். இருந்தால் உங்களை போல் இருக்க வேண்டும் என – நீங்கள் திருப்பதி வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு தரிசனம் பண்ண வைத்ததன் மூலம் நான் மிகப் பெரிய சந்தோஷத்தை பெற்றேன் என்று சொல்லி பெருமாளின் மேல் கிடந்த கிடைபதற்கரிய ஒருபொருளை வைத்து ஆசிர்வதித்து என்னை வழி அனுப்பி வைத்தார் – ஒரு நாமத்தையும்  போட்டு.

நாமம் எனக்கு இடப்பட்டபோது

  • நான் வாழ்க்கையை வாழ்ந்து முடித்தது போல் ஒரு   உணர்வு 1/1000 நொடிப் பொழுதில் ஏற்பட்டு மறைந்து போனது.
  • அந்த நொடி உயிர் உடலை விட்டு பிரிந்து சென்று திரும்ப வந்தது போல் ஒரு உணர்வு….
  • அந்த நொடி அசைவற்று போன உடல் அசைய துவங்கியது போல் ஒரு எண்ணம்….
  • காந்தம் இரும்புத்துண்டை ஈர்ப்பது போன்று உணர்வு
  • அந்த நொடி அனைத்தும் நான் தான் என்று ஆண்டாள் ஆனந்தமாக சொல்லியது போல் ஒரு உணர்வு.
  • ஆண்டாளை முதன் முதலாக பார்த்த போது ஏற்பட்ட அதே உணர்வு…
  • அவளும் ஆண்டாள் தான்
  • ஆண்டாளும் அவன் தான்
  • அவனும் ஆண்டாள் தான்
  • ஆண்டாளும் அவள் தான்

புரிய கடினமாக இருக்கும்…

சிலருக்கு புரியவே புரிந்திருக்காது…

ஆனால் உங்கள் வாழ்நாள் முடிவதற்குள் உங்களுக்கும் உண்மை புரிப்படும்…..

ஓம் நமோ நாராயணாய!!!

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

1 comment

  1. LIVELY AND BLESS FULL EXPERIENCE. THANKS FOR SHARING .

    Reply

Write a Reply or Comment

5 + 1 =