சிறகுகள் 19
பயணம் என்ன செய்யும்
ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு குஜராத் மண்ணில் மீண்டும் கால் பதிக்கின்றேன்..
தமிழ்நாடு ஆந்திராவுக்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த மாநிலம் குஜராத்.
என்னை ஆளாக்கிய திரு மெகுல் பட்டேல் குஜராத் என்ற உடனே நினைவுக்கு வந்து செல்வார்.
விருந்தோம்பலுக்கும் சொன்ன சொல்லுக்கும் பெயர் போன ஊர் குஜராத்
நேற்று மதியம் சரியாக சாப்பிடாததால் அதிகம் பசியுடன் தான் இருந்தோம் வாகனத்தில் இருந்த எல்லோரும். ஒரு டீ சாப்பிடுவோம் என்றார் என்னுடன் வந்திருந்த வழக்கறிஞர் திரு.சீனிவாசன் அவர்கள்(கோயம்புத்தூர் எம்எல்ஏவான திருமதி வானதி அவர்களுடைய கணவர்)
எனக்கு பிடிக்காத ஒரு உணவு டீ என்றாலும் இறங்கினால் நானும் ஏதாவது வாயில் போடலாமே என்ற எண்ணத்துடன் வண்டியை விட்டு இறங்கி முதலில் மிச்சர் போன்ற விஷயங்கள் உள்ள இடத்திற்கு சென்றேன்
இறங்கிய உடனே எனக்கு பாஷை தெரியாவிட்டாலும் என் பசியை பார்த்த உடனே உணர்ந்து தட்டிலே நம்மூர் காரசேவு போன்ற ஒரு விஷயத்தையும் அதன் மேல் 2 பச்சை மிளகாய் போன்ற இரண்டையும் வைத்து சைகையாலயே சாப்பிட சொன்னார் அந்த கடையில் வேலை பார்த்த அந்த தம்பி.
பசி ருசி அறியாது உண்மை என மீண்டும் நிரூபணம் ஆனது நேற்று. காரம் எண்ணெய் உப்பு எதைப்பற்றியும் கவலைப்படாமல் சாப்பிட்டேன். சாப்பிட்ட பிறகு ஒரு பெரியவர் தகதகவென கொதிக்கின்ற எண்ணெயிலே அழகாக பக்கோடா போன்று எதையோ சுட்டுக் கொண்டிருந்தார்
அதை சற்று ஆசையாக உற்று நோக்க துவங்கிய உடனே
அந்தக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அந்த செல்ல குட்டி தம்பி ஒரு சட்னியை நகர்த்தி 2 பக்கோடா போன்றவை இலவசமாக சாப்பிடுங்கள் என்று இரு முறை சொல்லி சைகையால் சாப்பிட சொன்னார்.
அவர் இந்தியில் வாஞ்சையுடன் சொல்ல வந்ததாக நான் புரிந்து கொண்டது
சாப்பிட்டுப் பாருங்கள் நன்றாக இருக்கும் நான் கொடுக்கின்றேன்
அந்தத் தம்பி சொன்னதற்காகவே இரண்டை எடுத்து சாப்பிட்டேன்
அவன் பாசத்தாலேயே அது நான் சுவைத்த பண்டங்களை விட மிகச்சிறந்த சுவையுள்ள பண்டமாக மாறியதாக கருதுகின்றேன்.
சாப்பிடும்போது அந்த மக்களை பார்க்கின்றேன் எந்தவித சூதுவாது இல்லாமல் எல்லோரிடமும் மிகவும் இலகுவாக சுவாசித்து நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
அப்படியே சிந்தனையை விழுப்புரம் நோக்கி நகர்த்தினேன்
அரசு பேருந்துகள் மட்டுமே நிற்கக்கூடிய விழுப்புரம் உணவகங்களை நினைத்துப் பார்க்கின்றேன்
அப்பாவி மக்களிடம் கொள்ளையடிப்பதற்கும் மொட்டை அடிப்பதற்கும் சாவடிப்பதற்கும்
உள்ள இந்த உணவகங்களின் உரிமையாளர்கள் திருந்த வேண்டும் என எந்தக் கடவுளிடம் முறையிடுவது என்று யோசித்தவாறே அவ்விடத்தில் இருந்து வாகனத்தை இயக்க ஆரம்பித்தேன்.
பயணம் என்ன செய்யும் என்று கேள்வி எப்போதும் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது.
பயணங்கள் என்னை விசாலமாக்கி கொண்டு போகின்றது என்கின்ற உண்மை தற்போதைய பயணங்களில் மிகத் தெளிவாக எனக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது
மாறும் எல்லாம் ஒரு நாள் மாறும்
ஆனால் ஒரே நாளில் மாறி விடாது என்பது தெரிந்ததால் இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் சோமநாதரை நோக்கி பயணம் தொடர்கின்றது
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this: