February 13 2021 0Comment

தை அமாவாசை:

தை அமாவாசை:

மூன்று அமாவாசைகளில் மிக முக்கியமானது தை அமாவாசை..

தாராபுரம் அகத்தீஸ்வரர் கோவில் நதிக்கரை சிறப்பு வாய்ந்தது தர்ப்பணத்திற்கு என்பதால் இன்று காலை இனிதே தர்ப்பணம் எந்தவித இடையூறும் இன்றி கொடுக்க முடிந்தது சரியான முறையில். சென்னையில் தர்ப்பணம் கொடுக்க வேண்டுமே என்கின்ற கடமைக்காக கடமைக்கு கொடுக்கின்றனர் பலர்….

அப்படி வருபவர்களின் மனமறிந்து கடமைக்கு மந்திரம் சொல்பவர்கள் சிலர்……

எள் தரையில் விடக்கூடாது என்பது விதி. இவ்விதி தெரிந்திருந்தாலும், அறிந்திருந்தாலும் ஏனோ இவ்விதியை யாரும் பொருட்படுத்துவது இல்லை எள் நீரானால் நல் எண்ணைய் கிடைக்கும்.. எள்ளை நல்ல முறையில் நீரில் விட்டால் நல்ல எண்ணம் பிறக்கும்….

புரியும் பொழுது மக்கள் மாறுவார்கள். மக்களுடைய எண்ணம் மாறினால்தான் சிலருக்கு பிள்ளையே பிறக்கும். பலருடைய பிள்ளைகளும் சிறக்கும். வசதி வாய்ப்புள்ளவர்கள் அடுத்த முறை ஆற்றை நோக்கி நகருங்கள். சீராக ஓடும் ஆற்றை நோக்கி நகருங்கள். உங்கள் வாழ்க்கையும் சீராக ஓட ஆரம்பிக்கும் ஓடாத பட்சத்தில்…

இது ஒருபுறம் என்றாலும் மறுபுறம் பக்கத்தில் திதி கொடுப்பவர் யார் என்று சற்று உற்றுப் பார்த்தால் 4 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை,30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் துணையுடன்….

ஐயங்கார் கேட்கின்றார் கூட்டம் என்னவென்று அம்மாவின் துணையுடன் முழுக்காதன் கூட்டம் என்கின்றது முழு பல்லும் முளைக்காத அந்த அழகு குழந்தை.. குழந்தையின் அம்மாவைப் பார்த்தால் வெள்ளையம்மாளை தரிசித்த உணர்வு….

49 வயதில் இன்றும் என்னால் என் தந்தையின் பிரிவை தாங்க முடியவில்லை…

தனிமையில் அவரை நினைத்து பலமுறை கண்ணீர் சிந்தி இருக்கின்றேன்….

நானே இன்றும் நிர்கதியாக நிற்கின்றேன் என நினைத்து கொள்ளும் இந்த பூமியில் 4 வயது இந்த குழந்தைக்கு அழுகைக்கு அர்த்தம் தெரியுமா? 30 வயது இந்த பெண்மணி எவ்வளவு அழுதிருப்பார்…

கடவுள் இருக்காரா என்கின்ற கேள்வி அவ்வப்போது எழும் இதுபோன்ற சூழலை சந்திக்கும்போது….

இந்தப் பெண்ணின் குளத்தில் கல்லெறிய அந்த கடவுளுக்கு எப்படி மனம் வந்தது??? கடவுளிடம் கேள்வி தானே கேட்க முடியும் நம்மால்????? விடை தெரியாத கேள்விகள் இவ்வுலகில் பல உண்டு.

அதனுடன் இந்த கேள்வியும் சேர்த்துக் கொண்டு அவ்விடம் இருந்து நகர்ந்தேன் என்னை இனம் கண்டவரிடம் பேசியவாறு…. இதுவும் கடந்து போகும் எளிதாகச் சொல்லிவிடலாம்… இந்தப் பெண் எப்படி கடக்கப் போகின்றாள் இந்த சிறிய குழந்தையுடன் – இவ்வுலகை?????

பார்த்த பெண் பார்த்த சிறுவன் எப்படி கடக்கப் போகின்றார்களோ எனக்கு தெரியாது நான் இவர்களை கடப்பதும் மறப்பதும் இனி கடினம் தான்…..

செருப்பு இல்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன் கால் இல்லாதவரை பார்க்கும் வரை….

நான் செருப்பில்லாமல் இனி நடக்கப் பழகி கொள்கின்றேன்……

கால் இல்லாதவர்களுக்கு எல்லாம் காலை கொடு என் இறைவா….

இலகுவாக கடந்து போயிருக்க வேண்டிய நாள் ரணம் ஆக மாறிவிட்டது……

எதுவும் கடந்து போகட்டும்….

என்றும் அன்புடன் டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

four × one =