திருப்பாவை
பாடல் 27:
(மகிழ்ச்சி கொளல்) கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப் பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம் :
பகைவரை வெல்லும் சிறப்பு உடைய கோவிந்தா! உன்னை வாயாரப் பாடி, மனதார நினைத்து வேண்டும் பறை கொள்வோம். அதற்கு மேலும் யாம் பெறும் பரிசுப் பொருட்கள், மாந்தர்கள் புகழும் படியான சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ பாடகம் போன்ற பலவிதமான ஆபரணங்களையும், ஆடைகளையும் அணிந்து மகிழ்வோம். அதன் பிறகு பால் சோறு மறையும் அளவுக்கு அதில் நெய் ஊற்றி சேர்த்து உண்போம். அனைவரும் கூடி அதை சாப்பிடும்போது எங்கள் முழங்கை வரை நெய் ஒழுகும், அதை நீ கண்டு மனம் குளிர வேண்டும்.
Source:web