திருப்பாவை
பாடல் 21 :
(போற்றி வந்தோம் எனல்) ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய் ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய் மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய் #விளக்கம் : பால் கறப்பதற்காக வைத்துள்ள பாத்திரங்கள் நிரம்பி வழியும் படி மிகுதியான பாலை அளிக்கும் வல்லமை மிக்க வளமான பசுக்களை மிகுதியாக படைத்தவனின் திருகுமாரனே! விழித்து எழுக… அருள் மிக்கவனே! பெருமை உடையவனே! உலகில் தோன்றிய ஒளிப்பொருளே துயில் எழுக… போர்க்களத்தில் பகைவர்கள் உனது வலிமைக்கு முன்பு நிற்க முடியாமல் தோற்று, உன் வாசலில் செயலற்று வந்து, உன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி போற்றுவது போல் ஆயர் குலத்தைச் சேர்ந்த பெண்களாகிய நாங்களும், உனது குணநலன்களைப் போற்றிப் பாட வந்து, உன் மாளிகை முன்பு காத்திருக்கிறோம். துயில் எழுந்து வந்து எங்களைக் காத்து அருள்வாயாக…!
Source:web