திருப்பாவை பாடல் 14:
(பரமனைப் பாடுவோம் எனல்)
உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.
விளக்கம் :
உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து இதழ்கள் விரிந்துவிட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. செங்கலை பொடி செய்தாற்போன்ற காவி உடையணிந்த அழுக்கு படியாத வெண்பற்களை உடைய தவசிகள் ஒளிவீச கோவில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர். நான் வந்து உங்களை எழுப்புவேன் என்று கூறிய நீ இன்னமும் உறங்குகிறாய். வெட்கமில்லா நாவினையுடையவளே! எழுந்திரு… இன்னுமா தூங்கிகொண்டு இருக்கின்றாய்? பெண்ணே! சங்கும், சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களை உடையவனுமான கண்ணனை பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே! எழுந்து வாராய்! என்று எழுப்புகிறார்கள்.
Source:web