திருப்பாவை பாடல் 06:
(பல்வகை ஒலிகள்) புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோவிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மௌ;ள எழுந்து அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
பொருள் :
வானம் வெளுத்து ஆதவன் தோன்றி பறவைகள் எல்லாம் எழுந்து மாறி மாறி ஒலிக்கத் துவங்கிவிட்டன. கருடனுக்கு அரசனான பெருமாளின் திருக்கோவிலில் வெண்சங்கு முழங்கும் ஓசை உன் செவிகளில் விழவில்லையா? பெண் பிள்ளையே கேட்டிலையோ? வஞ்சக எண்ணத்தினால் தன்னை மாய்க்க வந்த பேய் உருவமான பூதகி என்ற அரக்கியின் நஞ்சு கலந்த முலைப்பாலை உண்டு அவளை சாய்த்தவனும், சூழ்ச்சி எண்ணங்களால் கம்சன் அனுப்பிய சகடாசுரனை தனது திருவடிகளால் எட்டி உதைத்து மாய்த்த மாதவனாகிய பரந்தாமன் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளார். இவ்வுலகில் அனைத்துக்கும் வித்தாக இருக்கக்கூடிய பரமனை மனதில் எண்ணிய வண்ணம் முனிவர்களும், யோகிகளும் மெல்ல எழுந்து ‘ஹரி ஹரி” என்று ஓதுகின்றாரே அந்த பேரொலி உனக்கு கேட்கவில்லையா? எங்கள் மனதை குளிரச் செய்யும் வழியை நீயும் கேட்டு குளிர்வாயாக… சிறுபிள்ளையாய் இருக்காதே எழுந்து வா…!!
Source:web