தன்னம்பிக்கை…

Vastu - Self-Confidenceபயங்களின் கூடாரம், தன்னம்பிக்கையின் சேதாரம் தோற்று விடுவோமோ எனும் பயத்திலேயே பலர் முயற்சிக்கான முதல் சுவடை எடுத்து வைப்பதில்லை. முதல் சுவடை எடுத்து வைக்காதவன் எப்போதுமே பயணம் செல்ல முடியாது என்பது சர்வதேச விதி.

‘வெற்றி பெற விடாமல் நம்மைத் தடுப்பவை, தோல்வியடைந்து விடுவோமோ எனும் பயம் தான்’ என்கிறார் ஷேக்ஸ்பியர்.

தோல்வியும் வெற்றியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல. தோல்விகளைச் சந்திக்காத வெற்றியாளர்கள் இருக்கவே முடியாது! தோல்வி என்பது இயல்பானது என்பதைப் புரிந்து கொண்டாலே வெற்றிக்கான முதல் கதவைத் திறந்து விட்டோம் என்று தான் பொருள்.

அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்த ஆபிரகாம் லிங்கன் ஆறுமுறை தோல்வியைச் சந்தித்தபின் அரசியல் வெற்றியை ஆதாயமாக்கிக் கொண்டவர். தோல்வி என்பது வெற்றியை நோக்கிய பாதை என்பதில் அவருக்கு உறுதி இருந்தது. எனவே அவர் வெற்றியாளரானார்.

வெற்றிகளில் சிலவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். தோல்விகளில் பலவற்றைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால், தோல்வி குறித்த பயத்தில் முயற்சி செய்யாமல் இருப்பதோ… எதையுமே, எப்போதுமே நமக்குத் தருவதில்லை என்பது தான் நிஜம்.

ஜுராசிக் பார்க் என்றால் நமது நினைவுக்கு சட்டென வரும் விஷயங்கள் இரண்டு. ஒன்று டைனோசர். இரண்டாவது இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல் பெர்க். அவர் தெற்கு கலிபோர்னிய திரைப்படக் கல்லூரியான யு.எஸ்.சி. யில் சேர இரண்டு முறை விண்ணப்பித்தார். இரண்டு முறையும் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

தோல்வியால் தளர்ந்து விடாமல் ஸ்பீல் பெர்க் வளர்ந்தார், உலகெங்கும் அவர் புகழ் பரவியது. எந்தக் கல்லூரி அவரை நிராகரித்ததோ, அதே கல்லூரி 1994-ம் ஆண்டு அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கவுரவித்தது! தோல்விகளால் ஒரு வெற்றியாளனைப் புதைக்க முடியாது என்பதை உலகம் மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திக் கொண்டது.

விழிப்புணர்வு என்பது வேறு, பயம் என்பது வேறு. தோல்விகளைக் குறித்த விழிப்புணர்வு இருக்கலாம். ஆனால், அதுவே ஆளை விழுங்கும் பயமாக மாறி விடக் கூடாது என்பதை நாம் கவனிக்க வேண்டும். தோல்வி குறிந்த சிந்தனைகள் எச்சரிக்கை உணர்வைத் தருபவையாக இருக்கும் வரை அவை நமக்கு நன்மை தரும்.

வாகனத்தில் பயணம் செய்யும் போது விபத்து குறித்த பயத்தில் `சீட் பெல்ட்’ போட்டுக் கொள்வது எச்சரிக்கை உணர்வு. விபத்து குறித்த பயத்தில் வாகனத்தையே புறக்கணிப்பது கோழைத்தனமானது. இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கை, பயந்தாங்கொள்ளிகளின் கைகளில் பதக்கங்களைத் திணிப்பதில்லை. தண்ணீர் குறித்த பயம் உங்களுக்கு நீச்சல் கற்றுக் கொள்ள தூண்டுதலாய் இருக்க வேண்டுமே தவிர, தண்ணீரைக் கண்டால் ஓடுகிற மனதைத் தந்து விடக் கூடாது. அதாவது பயம் நமக்கு அதைத் தாண்டிச் செல்கின்ற தகுதியை உருவாக்க தூண்டுதலாய் இருக்க வேண்டும். அதைக் கண்டு விலகி ஓடுகின்ற நிலையைத் தந்து விடக் கூடாது.

தோல்வி குறித்த பயத்திலிருந்து வெளியே வர தன்னம்பிக்கை மிக அவசியம். தன்னம்பிக்கை, கடைகளில் விற்பனையாவதில்லை. உங்களுக்கு வேறு யாரும் வந்து தன்னம்பிக்கை எனும் ஆடையைப் போர்த்தி விடவும் முடியாது. தன்னம்பிக்கை என்பதை நமக்கு நாமே தான் உருவாக்கிக் கொள்ளவேண்டும். தனக்கான கூட்டைத் தானே உருவாக்கும் ஒரு சிட்டுக் குருவியைப் போல!

Share this:

1 comment

  1. sir vazhga vazhamudan

    very good booster to induce selfconfidence

    Reply

Write a Reply or Comment

sixteen + twenty =