மாட்டு பொங்கல் திருநாள்…
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கிய இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறும் நாளே மாட்டு பொங்கலாகும். இந்நாள் தைப்பொங்கலுக்கு மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இது பட்டிப்பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர். எனவே பசுவை வணங்குவதன் மூலம், அனைத்து தேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன.
மாட்டு பொங்கலன்று, நல்லெண்ணெய் தேய்த்து குளித்து, தொழுவத்தை தூய்மைப்படுத்தி கோலம் போட்டு, நல்ல நேரத்தில் ஒரு பெரிய பானையில் பொங்கலிடும்போதே, அதிலிருந்து பொங்கல் தண்ணீர் என்று கொஞ்சம் தண்ணீரை ஒரு பெரிய சொம்பில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
வீட்டிலுள்ள கத்தி, கடப்பாறை, படி, அரிவாள்மனை போன்ற உழவுக்கும், சமையலுக்கும் உதவும் எல்லா பொருட்களையும் கழுவிக் காயவைத்து பொட்டிட்டு பொங்கல் மேடையில் வைத்துவிடுங்கள்.
இதுதவிர வீட்டிலுள்ள வாகனங்களை கழுவி துடைத்து பொட்டிட்டு, சந்தனம் தெளித்துவிட்டு, வாழைக்கன்றுகள், தோரணம், மாவிலையால் மாலைகள் போட்டு, பலூன்கள் கட்டுங்கள்.
விவசாயத்தில் பயன்படுத்தப்படும் மோட்டார் பம்பு செட் உட்பட அனைத்து கருவிகளையும் பொட்டிட்டு அழகுப்படுத்துங்கள்.
வண்டியிழுக்க உதவும் காளைமாட்டிற்கும், காலை-மாலை பால் தரும் பசுமாட்டிற்கும், எருமை மாடுகளுக்கும், ஆடுகளுக்கும் கொம்புகளை சீவிவிட்டு, குளிப்பாட்டி, வண்ணங்களை கொம்புகளில் அடித்திடுங்கள். கொம்புகளின் இடையில் பலவண்ண ரிப்பன்கள், குஞ்சம், சலங்கை, பலூன்களை கட்டி, நெற்றியில் மஞ்சள் குங்குமம், சந்தனம், கழுத்தில் தோரணம், மாவிலை மாலை போட்டு புதிய மூக்கணாங்கயிறு, தாம்புக்கயிறு அணிவித்திடுங்கள்.
தாம்பாளத் தட்டுகளில் தோட்டத்தில் விளைந்த பயிர்களை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச்சர்க்கரை என எல்லாவற்றையும் பூஜைக்காக எடுத்து வையுங்கள். பொங்கல் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்… மாட்டு பொங்கல்” என்று எல்லோரும் குரல் கொடுத்து சாமி கும்பிட்டு கற்பூர தீபாராதனை காட்டுங்கள். அதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் பிரசாதத்தை ஊட்டிவிடுங்கள். பிறகு மாடுகளுக்கு திருஷ்டி கழித்து விட்டு வழிபடுங்கள்.
உழுவதிலிருந்து உழுத நிலத்திற்கு தனது சாணத்தை இயற்கை உரமாகத் தந்தும், அடுப்பெரிக்க, ஏரிழுக்க, பரம்படிக்க, நீரிறைக்க, போரடிக்க என்று எத்தனையோ வேலைகளில் மனிதனுக்கு உதவி, எண்ணற்ற விதங்களில் மாடுகள் நமக்கு பயன்படுகிறது.
சில வீடுகளில் கால்நடைகளுக்கு காலையிலேயே பூஜை செய்துவிடுவார்கள். சிலர் மாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில் பூஜை செய்து அதன்பின் கால்நடைகளை சற்று வெளியே ஓட்டிப் போய் திரும்ப வீட்டிற்கு கூட்டி வருவார்கள். வீட்டிற்கு திரும்பக் கொண்டு வரும்போது வீட்டு நிலைப்படியில் உலக்கையை வைத்து அதைத் தாண்டிப் போகுமாறு அழைத்துச் செல்வது வழக்கம்.
கால்நடைகளை அழகுப்படுத்துதல் :
மாட்டு பொங்கல் அன்று தொழுவத்திலேயே பொங்கல் வைத்து கற்பூர தீபாராதனை காட்டுவார்கள். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். கால்நடைகளுக்கு பொங்கல் கொடுக்கும் போது பொங்கலோ பொங்கல்! மாட்டு பொங்கல்! பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக! என்று கூறுவார்கள். உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும்.
இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.
ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும்.
மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவது ஜல்லிக்கட்டு விளையாட்டின் முக்கிய அம்சமாகும்.
கால்நடைகளுக்கு நன்றி சொல்வோம்..!!