கடிதம் – 19 – வாழ்க்கை – கதையல்ல நிஜம் – IV

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

பிறந்து ஒரு நிமிடமே ஆன குழந்தை கூட அது பிறந்த உடன் அழுகை என்னும் புரட்சி செய்து தான் தன் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றது என்று நேதாஜி சொன்னதாக நான் மார்க்ஸிய கொள்கைகள் சம்பந்தமான புத்தகங்கள் படித்த போது படித்ததுண்டு. அதை வேடிக்கையான வாசகமாக நான் எடுத்துக் கொண்டேன் முதலில் படித்த போது. அழுகையின் வலிமையை நான் என் சொந்த வாழ்வில் எனக்கு நினைவு தெரிந்த பிறகு என்னை அறியாமல் உபயோகப்படுத்தி பார்த்த போது தான் அதன் உண்மை புரிந்தது.

எல்லோர் வாயிலும் எப்போதும் நின்று, மென்று துப்பப்பட்டவன். எல்லோரையும் எப்போதும் அழவைத்தவன்…

அப்படிப்பட்ட நான் கண்ணீர் சிந்துவேன் என்பதை என்றுமே நினைத்து பார்த்ததில்லை. நான் சொல்லப் போவது சிலருக்கு கதையாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் இதை கதையாகவே வைத்துக் கொள்ளுங்கள். கதையாக படிப்பவர்களுக்கும், இது கதையல்ல நிஜம் என்று உணர்ந்து படிப்வர்களுக்கும் ஒரு வேண்டுகோள். கதையை விடுத்து கதையின் நிஜத்தை மட்டும் உணர்ந்து உங்களுக்குள் எடுத்துக் கொள்ளுங்கள் தயவு செய்து”.

அழுகைக்கு பின் ஆனந்தம் என்பதை மெய்ப்பித்ததை போல் என் வாழ்க்கையில் அழுகையுடன் ஆண்டாளை பார்த்த பிறகு ஆனந்த படும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

நான் குடியிருந்த வீட்டின் வாடகையை எப்போதும் நானோ, மேல் வீட்டில் இருந்தவரோ வீட்டு உரிமையாளரின் வீடு சென்று கொடுத்து விடுவோம். வீட்டு உரிமையாளர் எங்களுக்கு வாடகை கொடுத்த பிறகு நாங்கள் குடியிருந்த வீட்டை பார்க்க வந்ததே இல்லை. அப்படிப்பட்டவர் அடுத்த நாள் திடு திடுப்பென்று வந்து, நான் இந்தப் பக்கம் காலி மனை பார்க்க வந்தேன். அப்படியே வீட்டை பார்க்க வந்தேன் என்று கூறிவிட்டு வீட்டை சுற்றி பார்த்தவர், நான் சுவரில் செய்த துவாரம் மற்றும் மரத்துண்டுகளை சுவற்றில் Fevicol வைத்து ஒட்டி இருந்ததை பார்த்து விட்டு எதற்கு இதை செய்தீர்கள் என்று என்னிடம் கேட்டார். நான் சொன்ன பதிலில் திருப்தி அடையாத அவர் என்னிடம் கடினமான வார்த்தைகளை உபயோகப்படுத்த ஆரம்பிக்க, எனக்கும் கோபம் வந்து நானும் கோபத்தில் வார்த்தைகளை விட அது பெரிய வாக்குவாதமாக மாறி எங்களை வீட்டை விட்டு காலி பண்ண சொல்லிவிட்டார் உடனடியாக. எனக்கோ புது வாடகை வீட்டிற்கு முன்பணம்(Advance) கொடுக்க கூட பணம் இல்லை. இருக்கின்ற வீட்டை காலி செய்தால் உண்மையிலேயே தெருவில் தான் நிற்க வேண்டும் என்கின்ற நிலைமை. நான் வீட்டு உரிமையாளரிடம் என் பிரச்சினையை சொன்ன போது அவர் இந்த மாத வாடகை கூட எனக்கு தேவையில்லை. நீங்கள் கொடுத்த முன்பணம்(Advance) ரூ.17000 – த்தை (ரூ.1700 – மாத வாடகை x 10 மாதம்) உடனடியாக கொடுத்து அனுப்புகிறேன். Pl get out & get lost என்று கூறிவிட்டு சென்று விட்டார். மொத்த பிரச்சினைக்கு நடுவே, ரூ.17000 ரொக்கப் பணம் எனக்கு கையில் வந்தது சேர்ந்தது பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. சிரமமே இல்லாமல் ஓரளவு நல்ல வீடு வாடகைக்கும் உடனே கிடைத்தது.

வீடு மாறும் போதே ஒருவித சந்தோஷத்துடன் வீடு மாறினோம் காரணம் நாங்கள் சென்ற புது வீட்டின் மாத வாடகை ரூ.1300/- மட்டுமே. அந்த வீட்டின் 10 மாத முன்பணம் (Advance) ரூ.13,000 என்பதால் வீடு மாற்றத்துக்கு முன்னே எங்கள் கையில் ரூ.4000 இருந்தது. புது வீட்டுக்கு சென்ற பின் முதல் வேலையாக என்னுடைய மிக நெருங்கிய நண்பன் ஒருவனிடம் வேலை கேட்டு போனேன். அங்கு பார்க்க சென்ற நண்பனின் நெருங்கிய நண்பரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் என்னை சிங்கப்பூர் வா. நான் இடம், சாப்பாடு இலவசமாக கொடுத்து உதவுகின்றேன். அங்கு நீ வேலை தேடிக் கொள் என்று என்னை சிங்கப்பூர் அழைத்தார். என் மிக நெருங்கிய நண்பன் இராம்குமார் அப்பா திரு.முத்துகிருஷ்ணன் Customs –ல் உயர் அதிகாரியாக பணி புரிந்து வந்ததால் அவரின் ஏற்பாட்டின் படி வங்கி கியாரண்டி இல்லாமல் சிங்கப்பூர் செல்ல சுற்றுலா விசா 15 நாளுக்கு கிடைத்தது. ரூ.35,000 வட்டிக்கு கடன் வாங்கி (3 மாதத்திற்குள் திருப்பி கொடுத்து விடுவதாக கூறி ரூ.35000 கடனாக வட்டிக்கு வாங்கும் போதே வட்டியை எடுத்து கொண்டு அதாவது ரூ.50000 –ல் இருந்து ரூ.15000 வட்டியை எடுத்து கொண்டு மீதம் கிடைத்த பணம்) Singapore –க்கு கிளம்பி போனேன்.

சிங்கப்பூர் போன முதல் 15 நாளுக்குள் வேலை கிடைக்கவில்லை. அதனால் 15 நாள் சுற்றுலா விசாவை 30 நாளாக நீட்டித்து வேலை தேடினேன். எனக்கு 1700 சிங்கப்பூர் டாலர் – “Employment Pass Holder” Permit –ல் Cuestar என்கின்ற நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இருந்தாலும், இருந்த கடனை இந்தப்பணம் வைத்துக் கொண்டு அடைக்க நெடுங்காலம் ஆகும் என்பதால் அந்த வேலைக்கு போக சற்று தயங்கி யோசித்து கொண்டு இருந்தேன். அந்த நேரத்திலே அடுத்த அதிசயம் நடந்தது. நான் Bedok என்ற இடத்தில் என்னை அழைத்து சென்ற நண்பரின் நண்பர்கள் வீட்டில் தான் தங்கியிருந்தேன். அவர்கள் எல்லோரும் 1 லட்சம் (தனி, தனியாக) பணத்தை ஊருக்கு அனுப்ப பேசிக்கொண்டிருந்த வேலையில், நான் அவர்களிடம் வேண்டுகோள் வைத்தேன். உங்கள் பணத்தை என்னிடம் கொடுங்கள். நான் ஊரில் சேர்த்து விடுகின்றேன் என்பதற்கு அவர்களும் சம்மதித்ததால் அந்தப் பணத்திற்கு ஈடாக பொருட்கள் வாங்கி அதை சென்னை எடுத்து வந்து 1½ லட்சம் ரூபாய் வரை லாபம் வைத்து வாங்கி வந்த பொருட்களை விற்று விட்டேன்.

அதன் பிறகு வந்த லாப பணம் தீரும் வரையில் வேலை தேடினேன். இன்னும் ஒரு  மாதத்திற்கு பிறகு தாக்கு பிடிக்கவே முடியாது என்கின்ற சூழ்நிலை வந்தபோது, நான் ஆறு மாதத்திற்கு முன் குஜராத் நிறுவனம் ஒன்றுக்கு இண்டர்வியூ சென்று அதன் M.D சந்தோஷப்படும் வகையில் இண்டர்வியூ –வில் நடந்து கொண்டது ஞாபகம் வந்தது. நான் அந்த வேலைக்கு எனக்கு உதவி செய்த Live Connections என்கின்ற வேலை வாங்கித் தரும் நிறுவனத்திடம் சென்று அந்த வேலை குறித்து கேட்டு வரலாம் என்று சென்ற போது அடுத்த அதிசயம் நடந்தது. உமா என்று அந்த நிறுவனத்தில் பணி புரிந்த பெண்மணி சந்தோஷத்தில் என்னை பார்த்து, Chockalingam You Mad Fellow. எங்கப்பா போயிட்டே. அந்த குஜராத் நிறுவன M.D உன்னை தான் தங்கள் நிறுவனத்தின் சென்னை மேலாளாராக போடனும் என்று இவ்வளவு மாதமாக காத்திருக்கிறார். நாங்கள் உன்னுடைய PP No –க்கு போன் செய்தால் யாரும் எடுக்கவில்லை. அனுப்பிய கடிதங்கள் திருப்பி வந்து விட்டது. தந்தி கொடுத்தாலும் உன்னிடம் இருந்து பதில் வரவில்லை; இன்று காலை தான் அந்த நிறுவன M.D சரி சொக்கலிங்கம் வராவிட்டால் வேறு ஆளை போடுங்கள் என்று சொன்னார் என்று கூறிவிட்டு என்னை உடனடியாக பெங்களூர் போய் அந்த நிறுவனத்தின் Regional Manager –ஐ பார்த்து விட்டு வர சொன்னார்கள். உடனே பெங்களூர் பயணம் மேற்கொண்டேன். Regional Manager –ம் என்னை உடனே குஜராத்தில் உள்ள Anand என்ற இடத்தில் இருந்த அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பயிற்சி எடுத்துவிட்டு சென்னை வேலையில் சேர சொல்லிவிட்டார்.

ஆனந்த் என்ற இடத்திற்கு நேரடியாக செல்ல Train ticket கிடைக்காததால் நான் மும்பை சென்று ஆனந்த் செல்ல முடிவெடுத்தேன். முடிவெடுத்த படி மும்பை கிளம்பி சென்றேன் Reserved Ticket –ல். மும்பையில் இருந்து ஆனந்த் என்கின்ற இடத்திற்கு 8½ மணி நேர ரயில் பயணம் Un Reserved பெட்டியில். என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத பயணமாக அது இன்று வரை உள்ளது. காரணம் Un Reserved – பெட்டியில் மிக பயங்கர இட நெருக்கடி. வேறு வழி இல்லாமல் கழிவறையில் உள்ள கண்ணாடியை கழற்றி கழிவறை மேடை மேல் போட்டு முகம் தெரியாத 3 பேர் அமர்ந்து பயணிக்க எத்தனித்த போது நானும் அவர்களுடன் என் உடலை சுருக்கி உட்கார்ந்து 8½ மணி நேரம் பிரயாணப்பட்டேன். உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்காமல், உணவு கூட அருந்தாமல் 8½ மணி நேரம் மிகவும் கஷ்டப்பட்டு பிரயாணப்பட்டு ஆனந்த் என்ற இடத்தை அடைந்தேன். கழிவறையில் உட்கார்ந்து பயணம் செய்தபோது கஷ்டம் உடலுக்கு இருந்தாலும் மிகவும் வைராக்கியத்துடன் இராமநாமம் போல நான் எனக்குள் சொல்லி கொண்டே போனது; நான் ஜெயிக்க பிறந்தவன். உண்மையாக வேலை பார்த்து என் குடும்பத்தை காப்பாற்றி எல்லோரையும் ஒரு நாள் என்னை நோக்கி திரும்பி பார்க்க வைப்பேன் என்கின்ற வார்த்தைகளை தான். எல்லாவற்றிற்கும் மேலாக திருச்செந்தூரில் பிச்சை எடுத்ததை விட – வாழ்க்கையில் மோசமான அனுபவம் வேறு எதுவும் இல்லை என்பதையும் என் வாழ்க்கையில் வெற்றி பெறவே இந்தப் பிராயணம் என்பதால் எனக்கு நானே சந்தோஷத்தை ஏற்படுத்தி கொண்டு இந்த பிரயாணத்தை செய்தேன். அதிலிருந்து இன்று வரை எல்லாமே வெற்றி தான்.

நல்ல மாலுமிக்கு காற்று கூட அவர் சொல்லுகின்ற திசையில் வீசும் என்பதை அடுத்த கடிதம் படித்த உடன் புரிந்து கொள்ளுவீர்கள். எப்படி எனக்கு இது சாத்தியமாயிற்று – அடுத்த கடிதத்தில் உங்களுக்கு தேவையான வெற்றிக்கான இரகசியங்களுடன்

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

1 comment

  1. SIR THE MOMENT YOU WIPED YOUR ‘AKHAMBHAKKAM’ U WERE BLESSED BY LORD MURUGAN WHICH ALLOWED U TO ACCEPT YACHAGAM. GREAT.

    Reply

Write a Reply or Comment

three × 5 =