கடிதம் – 9 – காதல்
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
அனைவருக்கும் வணக்கம்…
என்னுடைய வாழ்க்கையை ஆண்டாளுக்கு முன், ஆண்டாளுக்கு பின் என இரண்டு வகையாக பிரிக்கலாம்… ஆண்டாளுக்கு முன் என்றால் என் வாழ்க்கையில் ஆண்டாள் வருவதற்கு முன் என அர்த்தம் கொள்ளவும்….
பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும் சொக்கலிங்கத்தை பிடித்தவர்கள் 10 பேர் என்றால் பிடிக்காதவர்கள் 100 பேர் இருப்பார்கள் காரணம் சொக்கலிங்கத்திற்கு,
- கடவுள் நம்பிக்கை அறவே இல்லை
- படிப்பு சுமார்
- ஆசிரியரிடம் நல்ல பெயர் இல்லை
- சிகரெட் இல்லாமல் சொக்கலிங்கத்தை கல்லூரியில் பார்த்து இருக்கவே முடியாது
- சொக்கலிங்கம் நண்பர்களுடன் குடித்தால் அன்று இரவு நூற்றுக்கணக்கான பேர்களின் வெறுப்பை சம்பாதிக்காமல் சொக்கலிங்கம் தூங்கியதாக வரலாறு கிடையாது…..
- வீட்டின் கஷ்டம் தெரியாது. நான் ஊர் சுற்ற, பணக்காரன் போல செலவு செய்ய எனக்கு பணம் அனுப்பிய என் அப்பா, கடைசியில் தன் 25 வருட உழைப்பில் சென்னை அடையாரில் வாங்கி குடியிருந்த MIG வீட்டையும் விற்று என்னை சந்தோஷமாக வைத்து கொண்டார்…
- Tution fees, Exam fees, Lab fees, Mess fess, Hostel fees என எப்போது பணம் கேட்டாலும் பணம் அனுப்பிய என் அப்பா, என்னுடைய தவறுகளை யாராவது அவரிடம் எடுத்து சொன்னால் சொல்லக் கூடிய ஒரே விஷயம் என் மகனுக்கு தவறு என்று தெரியவரும் போது அவன் அதை விட்டு வெளியே வந்து விடுவான் என்பதை தான்.
- அந்த ஒரே நம்பிக்கை தான் என்னை மனிதம் பற்றி புரிந்து கொள்ள வைத்து, என்னையும் மனிதனாக்கியது…
- ஒரு சூழ்நிலையில் என் அப்பாவிற்கு ரொம்ப, ரொம்ப பிடித்த தன் மனைவி வெறும் மஞ்சள் கயிறோடு நின்ற போது கூட என்னிடம் ஏன் இப்படி செலவு செய்கிறாய் என்று கேட்டது கூட இல்லை…
- என் அம்மாவோ என் அப்பாவை விட ஒரு படி மேல் நான், என் நண்பர்கள் எல்லோரும் சிகரெட் பிடிக்க கற்று கொண்டோம் என்று தெரிந்த உடன் ஒரு நாள் என் வீட்டில் சாப்பிட வந்த என் நண்பனிடம் நல்ல Cigarette ஆக வாங்கி பிடியுங்கள். மட்டமான சிகரெட் – லாம் பிடிக்காதீர்கள் என்று அறிவுரை சொன்னார் என்றால் என் அம்மாவின் வெகுளித்தனத்தை புரிந்து கொள்ளுங்களேன்….
இது போன்ற அம்மா, அப்பாவின் ஒரே பிள்ளையான எனக்கு 11 – ம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்து எங்கள் எதிர்வீட்டு பிராமண பெண்ணுடன் காதல்…
நாளாக, நாளாக மிகுந்த நெருக்கத்தை கூட்டி கொண்டே போனது அந்த காதல்… நான் கல்லூரிக்கு சென்றவுடன் மேலும் வலுவடைந்தது அந்த காதல்… 1991 – ல் நாங்கள் குடியிருந்த வீட்டை விற்பதற்கு ஒரு மாதத்திற்கு முன் என் தந்தை என்னிடம் சாதாரணமாக பேசிக் கொண்டியிருந்த போது, அரசியலும், காதலும் நம் குடும்பத்தில் யாருக்கும் கூடாது என பொதுவாக கூறினார்… நானோ, என் பெரியப்பா பெண்ணோ, பெரியப்பா பையனோ யாரும் எதுவும் அப்போது எந்த கருத்தும் சொல்லவில்லை…. அது என்னவோ அந்த வார்த்தை எனக்கே சொல்லப்பட்ட விஷயம் போல் இருந்ததால் என் தந்தை சொல்லிய வார்த்தைகள் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்…. அதே சூழ்நிலையில் நாங்களும் கடனால் குடியிருந்த வீட்டை விற்று விட்டு திருநெல்வேலிக்கே சென்று விட்டோம். நானும் 1992 – ம் வருடம் படிப்பை முடித்து உடனே வேலையும் கிடைக்க பெற்று ஆந்திராவில் உள்ள Metpally சர்க்கரை ஆலைக்கு பணி செய்ய சென்று விட்டேன்… இப்போது போல அப்போது செல்போன் எல்லாம் கிடையாத காலம் என்பதால் நான் காதலித்த பெண்ணுடன் அதன்பிறகு எந்தவித தொடர்பும் இல்லாமல் போய்விட்டது…
1994 – 1997 ஏறத்தாழ சுனாமியும், 200km வேகத்தில் புயலும், 10 R.Scale க்கு நில நடுக்கமும் ஏற்பட்டது போல் ஏகப்பட்ட பிரச்சினைகள் என் வாழ்க்கையில்….
- உடல் நலம் பாதிப்பு எனக்கும், என் அப்பாவிற்கும் பெரிய அளவிலே
- செத்த நாய் மேல் எத்தனை வண்டி ஏறினா என்ன? என்பது போல் நொறுங்கி கிடந்த எங்களுக்கு எத்தனை, எத்தனை அடி; அவமானங்கள்; ஏமாற்றங்கள்; கஷ்டங்கள்; வருத்தங்கள்….
1999 – Feb – 5 வெகு ஏதேச்சையாக என் நண்பர்களை சந்தித்து பேசிக்கொண்டு இருந்த போது, என்னுடைய ஒரு நண்பன், சொக்கு, உன் உயிரானவள் அவள் அக்காவின் வீட்டில் தான் இருக்கிறாள். போய் பார்க்கலாமா என்று கேட்டான். வானத்தில் இருக்கின்ற நட்சத்திரங்கள் எல்லாம் நிலவாகியது போல் ஒரு சந்தோஷம் எனக்கு…
அடுத்து நடந்தது என்ன?
அடுத்த கடிதத்தில்…..
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்