அருள்மிகு ஏரி காத்த ராமர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : ஏரி காத்த ராமர்
உற்சவர் : கருணாகரப்பெருமாள், பெரிய பெருமாள்
தாயார் : ஜனகவல்லி
ஊர் : மதுராந்தகம்
மாவட்டம் : காஞ்சிபுரம்
ஸ்தல வரலாறு:
இலங்கையில் ராவண சம்ஹாரத்துக்குப் பின்னர் ராமபிரான் சீதாதேவியுடன் அயோத்திக்கு செல்லும் வழியில் வகுளாரண்ய ஷேத்திரம் என அழைக்கப்படும் மதுராந்தகத்தில் இறங்கியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. விபண்டக மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று, சீதாதேவி சமேதராய் ராமபிரான் திருக்கல்யாண கோலத்தில் இத்தலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் (1795-98) அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கர்னல் பிளேஸ் இருந்தார். அப்போது மதுராந்தகம் ஏரி முற்காலத்தில் அதனைச் சுற்றி உள்ள சிறிய மற்றும் பெரிய கிராமங்களின் விவசாய நிலத்திற்கான பாசனத்திற்கு மட்டுமல்லாமல், குடி நீராகவும் பயன்பட்டு வந்தது. மழை நீரை தேக்கிவைக்கும் இந்த ஏரியில், பெருமழை பெய்யும் சமயங்களில் அதிகப்படியான நீர்வரத்து காரணமாக உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்கள் பாதிக்கப்படுவது வழக்கம். ஒரு முரை தொடர்ச்சியான மழை காரணமாக ஏரி விரைவாக நிரம்பியது. அதிகப்படியான நீர் நிரம்பிய காரணத்தால் இன்னும் சில தினங்களில் கரைகள் உடைய வாய்ப்புள்ளதாக செய்தி பரவியது. அவ்வாறு கரை உடைந்தால் வெள்ள நீர் ஊருக்குள் வருவதோடு, விளை நிலங்களும் பாதிக்கப்படலாம் என்ற பயம் மக்கள் மத்தியில் நிலவியது. அப்போதைய கலெக்டர் என்ற நிலையில் லியோனல் பிளேஸ் ஏரியின் கரையை பலப்படுத்த முயற்சி எடுக்க வேண்டி அந்த பகுதிக்கு வருகை புரிந்தார். அப்போது அங்குள்ள ஏரி காத்த ராமர் கோவிலுக்கும் வந்தார். அப்போது, அர்ச்சகர்கள் சிதிலமுற்றிருந்த தாயார் சன்னிதியை திருப்பணி செய்து தரும்படி அவரிடம் கேட்டுக்கொண்டனர். அதற்கு பதிலாக அவர், ‘உங்கள் தெய்வத்தின் அருளால் இந்த மழையின் காரணமாக ஏரி உடையாமல் இருக்கட்டும். அப்படி நடந்தால், நான் திருப்பணியை செய்து தருகிறேன்..’ என்று அவர்களிடம் தெரிவித்தார்.
அடுத்த ஓரிரு நாட்கள் பெய்த தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகமாகிவிட்டது. அந்த சமயத்தில் ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில் மழை அதி தீவிரமாக பெய்யும் நிலையில், நிச்சயம் ஏரியின் கரை உடைந்து விடும் என்று நினைத்த அவர், நிலைமையை நேரில் சென்று பார்த்து, மேலதிகாரிக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று, தனி ஆளாகவே கையில் ஒரு குடையுடன் ஏரியை நோக்கி துணிச்சலுடன் சென்றார். பெய்யும் இந்த கனமழைக்கு நிச்சயம் ஏரியின் கரைஉடைந்து இருக்கும் என்று நினைத்த அவர், மெல்ல சிரமப்பட்டு கரையின் மீது ஒரு புறமாக ஏறி நின்று பார்த்தார். வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து, சுற்றிலும் ஒரே இருட்டாக இருந்தது. கையில் உள்ள விளக்கு வெளிச்சத்தில் அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. சற்று நேரம் அப்படியே நின்று பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு மின்னல் தோன்றியது. அந்த மின்னல் வெளிச்சத்தில் அவரது கண்களில் அந்த காட்சி தெரிந்தது. அங்குள்ள ஏரியின் கரை மீது உயரமான இரண்டு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் முகம் அந்த மின்னல் ஒளியில் அழகாக தென்பட்டது. இருவர் கைகளிலும் வில், அம்பு வைத்திருந்தார்கள். ஏரியை உற்று நோக்கியவாறே, எதிரும் புதிருமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு சில கணங்கள் மட்டுமே அந்தக் காட்சியை கண்டார். அடுத்த சில நொடிகளில் அவர்கள் மறைந்து விட்டார்கள். அவரது மனதில் ஆச்சரியமும், குழப்பமும் ஏற்பட்ட நிலையில் தனது இல்லத்துக்கு திரும்பி விட்டார்.
மறுநாள் பொழுது புலர்ந்தது. வெள்ளம் வடிந்திருந்தது. பெருமழை பெய்த அறிகுறிகள் அவ்வளவாக தென்படாமல் வழக்கம் போல் ஏரி அமைதியாக இருந்தது, ஏரிக்கு சென்று அதைப் பார்த்துச் சிலிர்த்த அந்த ஆங்கிலேய அதிகாரி நடந்த சம்பவத்தை மக்களுக்கு ஆச்சரியத்துடன் சொன்னார். அவர் சொன்னபடி ஜனகவல்லி தாயாருக்கு சன்னிதியை புதிதாக அமைத்து கொடுத்ததுடன், பல திருப்பணிகளையும் அந்த ஆலயத்திற்கு செய்தார்.
நடந்த சம்பவம் அந்த ஆலய கல்வெட்டிலும் பதிவு செய்து வைக்கப்பட்டது. ‘இந்த தர்மம் கும்பினி ஜாகிர் கலெக்டர் லியோனல் பிளேஸ் துரை அவர்களது’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டை இன்றும் பார்க்க முடியும். மேற்கண்ட சம்பவத்தினால் மதுராந்தகம் ராமர் கோவில் ‘ஏரி காத்த ராமர் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது.
கோயில் சிறப்புகள்:
- ராமருக்குரிய சிறப்பான கோயில்களில் இதுவும் ஒன்று. சீதையின் கைகளைப் பற்றிய நிலையில் ராமன் நிற்கிறார்.
- மூலவரான ஸ்ரீராமர் 8 அடி உயரத்தில் காட்சி தருகிறார். ஸ்ரீராமருடன் வலது கையில் வில்லை ஏந்தியபடி லக்ஷ்மணரும், சீதா பிராட்டி கையில் தாமரை மலர் ஏந்திய கோலத்திலும் காட்சி தருகின்றனர். இந்த விக்ரகங்கள் அனைத்தும் அத்தி மரத்தால் செய்யப்பட்டவை. ஆனால் பார்ப்பதற்குக் கல்லில் வடித்த சிலை போன்ற பிரம்மாண்ட வடிவத்தில் மூவரும் வீற்றிருக்கின்றனர்.
- மகிழ மரங்கள் (வகுளம் என்றும் குறிப்பிடப்படும்) அதிகம் இருந்த காரணத்தால் ‘வகுளாரண்ய ஷேத்திரம்’ என்றும் அதற்கு பெயர் உண்டு. அந்தப் பகுதியை ஆட்சிபுரிந்த மதுராந்தக சோழன் நினைவாக அந்தப்பகுதி ‘மதுராந்தகம்’ என்றும், கல்வெட்டுக்களில் ‘மதுராந்தக சதுர்வேதி மங்களம்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.
- சோழர்கால வரலாற்றில் உத்தம சோழன் என்கிற மதுராந்தக சோழ மன்னரால் அப்பகுதி வேத விற்பன்னர்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட நகரம் மதுராந்தகம்.
- சுகர், விபண்டகர் போன்ற ஆச்சாரியர்கள் தவம் புரிந்த புனித இடம். பழைமை வாய்ந்த இந்நகரின் மத்தியில் வைணவ திருக்கோயிலாக அமைந்திருப்பது ஏரிகாத்த ராமர் கோயில் என அழைக்கப்படும் கோதண்டராமர் திருக்கோயில் ஆகும்.
- ராமர் தலமாக இருந்தாலும் இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தரும் கருணாகரப்பெருமாளே (உற்சவர்) பிரதான மூர்த்தியாக அருளுகிறார். விபண்டகரால் பூஜிக்கப்பட்ட இவரே விழாக் காலங்களில் பிரதானமாக புறப்பாடாகிறார். பங்குனி உத்திரத்தன்று ஜனகவல்லித் தாயாரையும், போகிப்பொங்கலன்று ஆண்டாளையும் மணந்து கொள்பவரும் இவரே ஆவார். இங்கு வந்த ராமர், சீதையை மீட்க அருள வேண்டி இவரை பூஜித்துச் சென்றார். இதனால் இவருக்கு பிரதான இடம் பெற்றிருக்கிறார். தவிர ராமருக்கும் உற்சவ வடிவம் உண்டு.
- கம்பராமாயணம் எழுதிய கம்பர், அதை அரங்கேற்றும் முன்பு ராமன் தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இங்கு வந்தபோது, ஓரிடத்தில் சிங்கம் உறுமும் சத்தம் கேட்டது. பயந்துபோன கம்பர், அவ்விடத்தைப் பார்த்தபோது நரசிம்மர் லட்சுமியுடன் காட்சி தந்தார். பிற்காலத்தில் சிங்க முகமில்லாமல், மனித முகத்துடன் சாந்த நரசிம்மர் சிலை வடிக்கப்பட்டது. உற்சவரான இவரை “பிரகலாத வரதன்’ என்கின்றனர். சுவாதி நட்சத்திர நாட்களில் இவருக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கும்
- ராமநவமி விழா இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படும். நவமியன்று காலையில் கோடலி முடிச்சுடன் பஞ்ச கச்ச அலங்காரம், ஒரு வஸ்திரம் மட்டும் அணிவிக்கும் ஏகாந்த அலங்காரம், மதியம் திருவாபரண அலங்காரம், மாலையில் புஷ்பங்களுடன் வைரமுடி தரித்த அலங்காரம், இரவில் முத்துக் கொண்டை, திருவாபரணத்துடன் புஷ்ப அலங்காரம் என ஒரே நாளில் சுவாமிக்கு ஐந்து வித அலங்காரத்துடன் விசேஷ பூஜை நடக்கும். அன்று சுவாமி, சீதை, லட்சுமணருடன் தேரில் எழுந்தருளுவார்.
- ராமானுஜர் தீட்சை பெற்ற தலம்.
- வைணவ ஆச்சாரியரான ராமாநுஜருக்கு இந்த தலத்தில் உள்ள மகிழ மரத்தடியில்தான் அவரது குரு பெரிய நம்பிகள் மூலமாக மந்திர உபதேசம் செய்யப்பட்டது. இந்த மந்திர உபதேசத்தில் திவ்யம் என்ற மந்திரம் உபதேசிக்கப்பட்டதால் திவ்யம் விளைந்த திருப்பதி என்றும் மதுராந்தகம் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஆவணி மாத, சுக்ல பஞ்சமி தினத்தன்று ராமாநுஜர் மந்திர உபதேசம் பெற்ற திருவிழா மதுராந்தகத்தில் கொண்டாடப்படுகிறது. அச்சமயம் உற்சவ மூர்த்திகளாக பெரிய நம்பியும், ராமாநுஜரும் ஏரியின் படித்துறைக்கு எழுந்தருள்வர். அங்கு அவர்களுக்கு சிறப்புத் திருமஞ்சனத்தை கோயில் அர்ச்சகர்கள் நடத்துவர். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
- பொதுவாக, காவி வஸ்திரம் அணிந்து காட்சி தரும் ராமானுஜரை, இத்தலத்தில் வெண்ணிற வஸ்திரத்துடன் கிரகஸ்தர் (குடும்பஸ்தர்) கோலத்தில் தரிசிக்கலாம். குடும்ப வாழ்க்கையில் இருந்த ராமானுஜர் துறவு வாழ்க்கை மேற்கொள்ளும் முன்பு இங்கு தீட்சை பெற்றுக் கொண்டார். இதன் காரணமாக இங்கு வெண்ணிற ஆடையுடன் காட்சியளிக்கிறார். மூலவர், உற்சவர் இருவருக்கும் வெள்ளை ஆடையுடனேயே அலங்காரம் செய்கின்றனர். ராமானுஜரின் இந்த தரிசனம் விசேஷமானது.
- ஆனியில் இங்கு பிரம்மோற்ஸவம் நடக்கிறது. விழாவின் ஏழாம் நாளில் பெரிய பெருமாள் உற்சவம் நடக்கும். அன்று ராமர், புஷ்பக விமானம் போல அமைக்கப்பட்ட தேரிலும், மறுநாள் கருணாகரப்பெருமாள் மற்றொரு தேரிலும் உலா செல்வர். இவ்வாறு இங்கு ஒரே விழாவில் இரண்டு தேர்கள் ஓடும்.
- பதினாறு கரங்களுடன் அக்னி கிரீடம் அணிந்த சக்கரத்தாழ்வார் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு கீழே யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. யந்திரத்துடன் சுவாமியை தரிசிப்பது நிறைந்த பலன் தரும். இவருக்குப் பின்புறமுள்ள யோக நரசிம்மர் நாகத்தின் மீது காட்சி தருகிறார்.
திருவிழா:
வைகுண்ட ஏகாதசி, சித்திரை நட்சத்திர நாட்களில் சுதர்சன ஹோமத்துடன் பூஜை நடக்கும்.
திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஏரி காத்த ராமர் திருக் கோயில் ,
மதுராந்தகம் – 603 306
காஞ்சிபுரம் மாவட்டம்.
போன்:
+91- 4115 253887, 98429 09880, 93814 82008.
அமைவிடம்:
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி,சென்னையில் இருந்து 90 கி.மீ. தொலைவிலும்,மேல்மருவத்தூரில் இருந்து 12 கி.மீ தொலைவிலும்,செங்கல்பட்டிலிருந்து 24 கி.மீ தொலைவிலும் மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில் உள்ளது. புறவழிச் சாலையின் வழியாக வெளியூர் விரைவுப் பேருந்துகள் மூலம் இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கியும் வரலாம்.