October 20 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவேளுக்கை

  1. அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     முகுந்த நாயகன், அழகிய சிங்கர்

தாயார்          :     வேளுக்கை வல்லி

தீர்த்தம்         :     கனக சரஸ், ஹேமசரஸ்

புராண பெயர்    :     திருவேளுக்கை, வேளுக்கை

ஊர்             :     காஞ்சிபுரம்

மாவட்டம்       :     காஞ்சிபுரம்

 

ஸ்தல வரலாறு:

ஒரு சமயம் பிரம்மதேவர் யாகம் செய்து கொண்டிருந்தார். அப்போது அரக்கர்கள் அவரது யாகத்துக்கு இடையூறு விளைவித்தனர். இது குறித்து பிரம்மதேவர், திருமாலிடம் முறையிட்டு, யாகத்தை சிறப்பாக நடத்த, தயை புரியுமாறு வேண்டினார். திருமாலும் பிரம்மதேவரின் யாகத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்தார்.

முன்பு பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்த அதே கோலத்துடன் ஹஸ்திசைலம் என்ற குகையில் இருந்து புறப்பட்டு, பிரம்மதேவனின் யாகத்துக்கு இடையூறு அளித்த அசுரர்களை அவ்விடத்தில் இருந்து விரட்டிச் சென்றார். அவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள இந்த இடம் வரை ஓடிவந்தனர். அவர்களைத் துரத்திக் கொண்டு வந்த நரசிம்மப் பெருமாள் குளிர்ச்சியான இயற்கை எழில் மிகுந்த இந்த இடத்திலேயே அமர்ந்து விட்டார். பயந்து ஓடிய அசுரர்கள் மீண்டும் வந்தால் அவர்களை எதிர்க்க இந்த இடமே சிறந்தது என்று நினைத்து, தனது கோப உணர்வுகளை நீக்கி, யோக நரசிம்ம மூர்த்தியாக அருள்பாலித்து தரிசனம் தருகிறார். இதனாலேயே இவரது சந்நிதி ‘காமாஷிகா நரசிம்மர் சந்நிதி’என்று பெயர் பெற்றது.

வேள் என்றால் விருப்பம். தானாக விருப்பப்பட்டு அமைதியைத் தேடி இத்தலத்தில் யோக மூர்த்தியாக இருப்பதால் வேளிருக்கை என்று ஆகி, காலப்போக்கில் வேளுக்கை என்றாகி விட்டது. திருமாலின் அவதாரங்களில் மிகவும் போற்றப்படக் கூடிய அவதாரம் நரசிம்ம அவதாரம். திருமாலின் காக்கும் குணம் உடனே வெளிப்பட்ட அவதாரம். பக்தனின் வார்த்தையை பகவான் உடனே காப்பாற்றிய அவதாரம்.

 

கோயில் சிறப்புகள்:

  • மூலவர் முகுந்த நாயகன், நின்ற கோலமாக கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். இவருக்கு அழகிய சிங்கர் நரசிம்மர், ஆள் அரி என்ற பெயர்கள் உண்டு.

 

  • திருவேளுக்கை அழகிய சிங்கர் பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 46-வது திவ்ய தேசம் ஆகும்.

 

  • நரசிம்மருக்கு எதிரில் உள்ள கருடாழ்வார், நரசிம்மரின் உக்கிரம் தாங்காமல் சற்றே தலை சாய்த்து பயத்துடன் இருப்பது மிகவும் அதிசய அமைப்பாகும்.

 

  • மூன்று நிலை கோபுரம், ஒரு பிரகாரம் என்று சிறிய கோயிலாக காணப்பட்டாலும் மூர்த்தி பெரியது. கோயில் சுற்றுப்பிரகாரத்தில் சுதர்சன சக்கரத்தாழ்வார் தனிசந்நிதியில் வீற்றிருக்கிறார்.

 

  • பேயாழ்வார் இத்தலத்தை உப்பிலியப்பன் கோயில், கும்பகோணம், திருப்பதி போன்ற தலங்களுக்கு இணையாகப் பாடியுள்ளார். ஆழ்வார்களைத் தவிர ஸ்வாமி தேசிகனும் இப்பெருமாளை “காமாஸீகாஷ்டகம்’என்ற ஸ்லோகத்தால் போற்றியுள்ளார். இதை தினமும் பாராயணம் செய்தால் நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்கும்.

 

  • பிருகு முனிவர் வழிபட்டு பேறு பெற்ற திருத்தலம். பிருகு முனிவருக்கு கனக விமானத்தின்கீழ் இருந்து அருள்பாலித்தார் நரசிம்மப் பெருமாள்.

 

  • பேயாழ்வார் 3 பாசுரங்களிலும் திருமங்கையாழ்வாரும் இத்தலத்தைப் பாடியுள்ளனர்.

 

  • ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிடித்தமான இடம் இருப்பது போல, எம்பெருமானுக்கே பிடித்தமான இடம் ஒன்று இருக்கிறது. அப்படி எம்பெருமான் தானே விரும்பி அமர்ந்த இடம் தான் திருவேளுக்கை என்னும் புனித ஸ்தலம். இது காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோவிலுக்கு நேர் எதிரில் உள்ளது.

 

திருவிழா: 

வைகுண்ட ஏகாதசி உற்சவத்தில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும்.

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 11 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்

 

முகவரி:  

அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் கோயில்,

காஞ்சிபுரம்-631501

காஞ்சிபுரம் மாவட்டம்.

 

போன்:    

+91- 44 6727 1692, 98944 15456

 

அமைவிடம்:

காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து கிழக்கே ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது.

 

விண்ணகரம் வெஃகா விரிதிரை நீர் வேங்கடம்

மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த

தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி

தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு.

 

பேயாழ்வார் மங்களாசாசனம்

 

Share this:

Write a Reply or Comment

fifteen + 1 =