அருள்மிகு சாரதா மாரியம்மன் திருக்கோயில் வரலாறு
மூலவர் : சாரதா மாரியம்மன்
ஊர் : கோபிசெட்டிப்பாளையம்
மாவட்டம் : ஈரோடு
ஸ்தல வரலாறு:
வீரபாண்டி கிராமம் நிலவளமும், நீர்வளமும் அமைந்த பகுதி. இங்குள்ள விவசாயிகள், கால்நடைகளை மேய்க்க இங்கு வருவார்கள். அப்படி ஒருமுறை கால்நடைகளை மேய்க்க வந்த சிறுவர்கள் இங்கு விளையாடிக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த வேப்ப மரங்களின் இடையே ஒரு பிரகாசமான ஒளி எழும்பியது. சிறுவர்கள் பயந்து ஓட முயன்றபோது “குழந்தைகளே! பயப்படாதீர்கள். நானும் உங்களுடன் விளையாட வந்துள்ளேன்!’ என்று ஓர் அசரீரி ஒலித்தது. உடனே பெரும் காற்று வீசி அங்கிருந்த தூசி, குப்பைகள் எல்லாம் பறந்து அந்த இடமே அழகிய மைதானம் போன்று சுத்தமானது. வேப்ப மர இலைகள் அங்குள்ள ஒரு சின்னக் கல்லைச் சுற்றியே விழுந்தன.
அந்தக் கல்லை சிறுவர்கள் எடுக்க முயன்றபோது அதை நகர்த்த முடியவில்லை. அப்போது அசரீரி, “குழந்தைகளே! நான் இங்கு குழந்தையாக இருக்கப் போகிறேன். எனக்கு இங்கு கோயில் கட்டுங்கள். இந்த ஊரை மட்டுமல்ல, இங்கு வந்து என்னை வழிபடும் அனைவரையும் காப்பாற்றுவேன்..!’ என்று மீண்டும் ஒலித்தது. அதே நாளில் ஊர்ப் பெரியவர்கள் கனவிலும் வந்த அம்பிகை “தனக்கு கோயில் கட்ட வேண்டும்’ என்று கூற, 1917 -இல் இக்கோயில் கட்டப்பட்டது. அம்பிகையின் வீரியம் அதிகமாக இருப்பது மாரியம்மன் ரூபத்தில்தான். அதிலும் தன் பக்தர்களுடன் கலந்து அருள் புரிய, குழந்தை உருவில் வரும் அம்பிகை அதிக சக்தி உடையவளாக இருக்கிறாள்.
அத்தகைய குழந்தை வடிவில் சுயம்புவாகத் தோன்றியவள் கோபி சாரதா மாரியம்மன். “வேப்பிலைக்காரி’ என்றும் அழைக்கப்படுகிறாள்.
சுயம்புவாகத் தோன்றிய கல் வடிவ அம்மன் மூல ஸ்தானத்தில் உள்ளது. முதன் முதலில் குழந்தைகளுடன் பேசிய அம்மன் என்பதால், குழந்தை வடிவத்தில் அம்பாளின் சிலையை வடித்து, கல்லின் அருகே பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
கோயில் சிறப்புகள்:
- இங்குள்ள அம்மன் சுயம்புவாக தோன்றி குழந்தை வடிவில் காட்சி தருவது கோயிலின் சிறப்பு.
- முன்னாளில் சிற்றூராக இருந்த “வீரபாண்டி கிராமம்’ நகரமாக மாறி, இப்போது “கோபிசெட்டிபாளையம்’ என்று அழைக்கப்படுகிறது. நகரின் மையத்தில் மாரியம்மன் கோயில் அமைந்திருப்பதால் “டவுன் மாரியம்மன்’ என்றும் அம்பிகை அழைக்கப்படுகிறாள்.
- 90 ஆண்டுகளுக்கு முன், சிருங்கேரி சாரதா பீடாதிபதி அபிநய வித்யா தீர்த்த சுவாமிகள் கனவில் வந்த அம்பிகை, தன்னை வழிபட வரச் சொல்லி உத்தரவிட, சுவாமிகளும் இங்கு வந்து அம்மனை வழிபட்டார். அன்றிலிருந்து “அன்னை ஸ்ரீசாரதா மாரியம்மன்’ என்று அழைக்கப்படுகிறாள்.
- அன்னையின் மூல ஸ்தானத்தில் அமர்ந்து சுவாமிகள் பூஜை செய்யும்போது “நீ பூஜித்த இரண்டு தேங்காய்களை இங்கேயே வைத்துவிட்டுச் செல்லவும்!’ என்று அசரீரி ஒலிக்க, சுவாமிகள் தான் பூஜைக்குப் பயன்படுத்திய இரண்டு தேங்காய்களை அங்கேயே அன்னையின் பாதத்தில் வைத்து விட்டுச் சென்றார். ஆண்டுகள் பல கடந்த பின்னரும் அந்த இரு தேங்காய்களும் நிறம் மாறாமல் அப்படியே உள்ளது.
- ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி மற்றும் அமாவாசை தினத்தன்று சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, வடை, பாயசம் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
- இங்கு மணமக்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்யும் நிகழ்ச்சி மிகச் சிறப்பு. திருமாங்கல்யம் செய்வதற்கு உரிய தங்கத்தை அன்னையின் பாதத்தில் வைத்து வழிபட்ட பின்னரே வழங்கப்படுகிறது. நிச்சயம் செய்வதற்கு இரு வீட்டாரும், இரு கூடைகளில் உப்பு, வெற்றிலை பாக்கு வைத்து பூஜித்து, அவற்றை மூன்று முறை மாற்றிக் கொண்டு உறுதி செய்கின்றனர்.
- திருவிழா காலங்களில், பசுமாட்டையும், கன்றையும், வாய்க்காலில் குளிப்பாட்டி, அதற்கு புது வஸ்திரம் அணிவித்து, கோமாதா பூஜை செய்து, பின்னர் பால் கறக்கின்றனர். அந்தப் பாலை குடங்களில் ஊர்வலமாக எடுத்து வந்து, அன்னைக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
- இங்கு “பூச்சாட்டு திருவிழா’ மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் ஏழாம் நாள் ஆலமரத்தின் இருகிளைகள் கொண்ட ஒரு பாகத்தை வெட்டி எடுத்து வருகின்றனர். அது “பால்மரம்’ என்று அழைக்கப்படுகிறது. அதில் அம்மன் திருவுருவம் செதுக்கப்படுகிறது. இம்மரம்தான் அன்னையின் கணவர் என்பதாக ஐதீகம்.
- இம்மரக் கிளையை அருகிலுள்ள தெப்பக் குளத்திற்குச் எடுத்துச் சென்று புனித நீராட்டி, பூஜை செய்து மீண்டும் கொண்டு வந்து கோயிலில் நடுகிறார்கள். அதைத்தொடர்ந்து, மேள, தாளம் முழங்க, வேட்டுச் சப்தத்துடன் கோலாகலமாக நீர் எடுத்து வரப்பட்டு, அபிஷேகம் நடக்கிறது. நட்ட கம்பத்தை அகற்றும் நாள் வரை, பெண்கள் அம்மரத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்து, நீர் ஊற்றி வழிபடுகிறார்கள். இந்தப் பிரார்த்தனை மூலம் அவர்கள் கேட்டது கிடைக்கும்; எண்ணியவை நடக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
- சாரதா என்று சரஸ்வதியின் பெயர் இருப்பதால், குழந்தைகளின் சிறப்பான கல்விக்கும் அம்மனை வேண்டி வழிபடுகிறார்கள்.
- அழகுக்கெல்லாம் அழகியாய், அன்னை சாரதா மாரியம்மன் வீற்றிருக்கிறாள்.தன்னை நம்பி வந்தவர்கள் நாடியதை எல்லாம் அருளும் அன்னையாக வீற்றிருக்கிறாள் அகிலலோக நாயகி..
திருவிழா:
சித்திரை கடைசி வியாழக்கிழமை ஆண்டு திருவிழா, அக்னி நட்சத்திர காலத்தில் பூச்சாட்டு விழா 17 நாட்கள், நவராத்திரி, கும்பாபிஷேக ஆண்டு விழாவின் போது 1,008 சங்காபிஷேகம்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 1 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சாரதா மாரியம்மன் திருக்கோயில்
கோபிசெட்டிப்பாளையம்,
ஈரோடு.
போன்:
+91 98654-09593
அமைவிடம்:
ஈரோட்டிலிருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோபிசெட்டிபாளையம் ஸ்ரீசாரதா மாரியம்மன் திருத்தலம். கோபிசெட்டிப்பாளையத்தின் பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் உள்ளது.