August 23 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தேரழுந்தூர்

  1. அருள்மிகு தேவாதிராஜன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     தேவாதிராஜன், ஆமருவியப்பன் கோயில்

உற்சவர்        :     ஆமருவியப்பன்

தாயார்          :     செங்கமலவல்லி

தீர்த்தம்         :     தர்சன புஷ்கரிணி, காவிரி

புராண பெயர்    :     திருவழுந்தூர்

ஊர்             :     தேரழுந்தூர்

மாவட்டம்       :     நாகப்பட்டினம்

 

ஸ்தல வரலாறு:

ஒரு முறை பெருமாளும் சிவபெருமானும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பார்வதி ஆட்டத்தின் நடுவராக இருந்தார். காய் உருட்டும் போது குழப்பம் வந்தது. நடுவராக இருந்த பார்வதி, பெருமாளுக்கு சாதகமாக கூற, சிவபெருமானுக்கு கோபம் வந்து பார்வதியை பசுவாக மாறும்படி சாபமிட்டார். பசுவாக மாறிய பார்வதிக்கு துணையாக கலைமகளும், மலைமகளும் பசுவாக மாறி பூலோகத்துக்கு வந்தனர். பசு ரூபத்தில் இருக்கும் இவர்களை மேய்ப்பதற்காக பெருமாள் ‘ஆ’மருவியப்பன் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் வீற்றிருக்கிறார்.

 

அரசனான உபரிசரவசு ஒரு சமயம் இந்திரனை நோக்கி தவம் செய்து வானவீதியிலும் உருண்டு ஓடும் தேரைப் பெற்று வானில் சஞ்சரித்தான். அப்போது வேதங்கள் அனைத்தும் மகரிஷிகள் புலால் உண்ணக் கூடாது என்று கூறும்போது, உபரிசரவசு மட்டும் மகரிஷிகள் புலால் உண்ணலாம் என்று கூறினான்.

மற்றொரு சமயம் பிரகஸ்பதியைக் கொண்டு, உபரிசரவசு மன்னன் யாகம் ஒன்றை நடத்தினான். அப்போது பிரகஸ்பதியின் கண்ணுக்குத் தெரியாமல், உபரிசரவசுவுக்கு மட்டும் தெரியும்படி பெருமாள் தோன்றி அவிர்பாகத்தை ஏற்றார். எம்பெருமான் உபரிசரவசுவுக்கு மட்டும் பிரத்யக்‌ஷம் ஆனதைக் கண்டு ரிஷிகள் கோபம் அடைந்தனர். மேலும் இந்திர யாகத்தில் யாகப் பசுவைக் குறித்து எழுந்த வாதத்தில், தேவர்கள் பக்கம் தீர்ப்பளித்ததால், உபரிசரவசு மன்னன் மீது ரிஷிகள் கோபம் அடைந்தனர். இதன் காரணமாக உபரிசரவசுவின் தேரானது வான் வெளியில் இயங்காமல் பூமியில் விழும்படி சபித்தனர். அப்போது அவனது தேர் பூமியில் அழுந்தி எம்பெருமான் முன்னர் விழுந்தான். அப்போது எம்பெருமானை நோக்கி கடும் தவம்புரிந்தான். எம்பெருமானும் கருடனை ஏவி மீண்டும் அவன் வானத்தில் சஞ்சரிக்குமாறு அருள்புரிந்தார்.

உபரிசரவசு மன்னன், தான் வானில் தேரில் வரும்போது, தேரின் நிழல் எதன் மீது பட்டாலும் அவை அருகிவிடும்படி வரம் பெற்றிருந்தான். ஒருசமயம் இவன் மேலே சென்று கொண்டிருக்கும்போது, தேரின் நிழல் பசுக்கள் மீதும், அவற்றை மேய்க்கும் கண்ணன் மீதும் பட்டது. பசுக்களுக்கு துன்பம் தந்த மன்னனுக்கு சரியான பாடம் புகட்ட நினைத்தான் கண்ணன். உடனே அவனது தேர் நிழல் மீது தனது திருவடியை வைத்து அழுத்தினார். மன்னனின் தேர் கீழே அழுந்தியது. அத்துடன் அவனது ஆணவமும் அழுந்தியது. இதனால்தான் இத்தலம் தேரெழுந்தூர் ஆனது.

 

கோயில் சிறப்புகள்:

  • திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் தேரெழுந்தூர் தேவாதிராஜன் கோயில் 23-வது திவ்ய தேசம் ஆகும்.

 

  • மூலவர் தேவாதிராஜன் 13 அடி உயரத்தில் சாளக்கிராமத்தால் ஆனவர். இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும்.

 

  • இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

 

  • கண்ணனால் மேய்க்கப்பட்டிருந்த பசுக்களை ஒருசமயம் நான்முகன் கவர்ந்து சென்றார். இதை அறிந்த கண்ணன், மாயையால் வேறு பசுக்களைப் படைத்தார். நான்முகன் தன் தவற்றை உணர்ந்து, வேண்ட, பெருமாள் ஆமருவியப்பன் என்ற பெயரால் இத்தலத்தில் எழுந்தருளினார்.

 

  • ஒரு முறை இப்பகுதி மன்னன், 999 குடத்தில் வெண்ணெய் வைத்து ஒரு குடத்தை காலியாக வைத்து கண்ணனை ஏமாற்றினான். அவனுக்கு பாடம் புகட்ட நினைத்த கண்ணன், ஒரு குடத்தில் வெண்ணெய்யும் 999 குடங்களை காலியாகவும் இருக்கச் செய்தான். தன் தவற்றை உணர்ந்த மன்னன், தன் ஆணவம் நீங்கப்பெற்றான்.

 

  • ஒரு முறை தேவேந்திரன் கருடாழ்வாரிடம் ஒரு விமானத்தையும் வைரமுடியையும் கொடுத்து, 108 திருப்பதிகளுள் எந்த பெருமாளுக்கு எது உகந்ததோ, அதைக் கொடுத்து விடு என்றான். அதன்படி மைசூர் அருகே திருநாராயணபுரத்தில் உள்ள பெருமாளுக்கு வைர முடியை கொடுத்துவிட்டு, தேரெழுந்தூர் ஆமருவியப்பனுக்கு விமானத்தைக் கொடுத்தார் கருடன். இதனால் இங்குள்ள விமானம் கருட விமானம் ஆனது. அத்துடன் கருடன் பெருமாளின் அருகில் இருக்கும் பாக்கியமும் கிடைத்தது. பெரும்பாலான கோயில்களில் கருடன் சந்நிதி பெருமாளுக்கு எதிரில் இருக்கும்.

 

  • மார்க்கண்டேய முனிவர் பிறவா வரம் பெற, ஆமருவியப்பனை வணங்கினார். இதனால் இவரை ஆமருவியப்பன் தன் அருகிலேயே வைத்துக்கொண்டார். பக்த பிரகலாதனும் மூலஸ்தானத்தில் உள்ளார்.

 

  • மூலஸ்தானத்தில் உற்சவர், தாயார் ஆகியோர் கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். கிழக்கு பார்த்து அமைந்த இந்த கோயிலுக்கு நேர் எதிரில் மேற்கு பார்த்த சிவன் கோயில் உள்ளது. அங்கு தான் இவர்கள் சொக்கட்டான் ஆடிய மண்டபம் உள்ளது.

 

  • கம்பரின் அவதாரத் தலமாகும். கம்பர், நரசிம்ம அவதாரம் பற்றி இங்குதான் பாடினார். கம்பருக்கும் அவர் மனையாளுக்கும் கோயிலுக்குள் சிலை எழுப்பியுள்ளனர்.

 

  • தர்மதேவதை, உபரிசரவசு, காவிரி, கருடன், அகத்தியர் ஆகியோர் இத்தலப் பெருமாளை தரிசனம் செய்துள்ளனர். இங்கு பெருமாள் ருக்மிணி, சத்தியபாமாவுடனும் பசுங்கன்றுகளுடனும், நான்கு திருக்கரங்களுடனும் ஸ்ரீ கிருஷ்ணனாக அருள்பாலிக்கிறார்.

 

  • பெருமாள் சந்நிதி, தாயார் சந்நிதிகள் தவிர வாசுதேவர், நரசிம்மர், ராமர், விஸ்வக்சேனர், தேசிகர், ஆழ்வார்கள், ஆண்டாளுக்கும் சந்நிதிகள் உண்டு.

 

திருவிழா: 

வைகாசி திருவோணத்தில் பிரம்மோற்சவம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, கோகுலாஷ்டமி ஆகியன முக்கிய திருவிழாக்கள்.

 

திறக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு தேவாதிராஜன் கோயில்,

தேரழுந்தூர்-609 808,

மயிலாடுதுறை மாவட்டம்

 

போன்:    

+91- 4364-237 952.

 

அமைவிடம்:

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 10 கிமீ தொலைவில் உள்ளது.

Share this:

Write a Reply or Comment

3 × 4 =