August 23 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவைகாவூர்

  1. அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     வில்வவனேசுவரர்

அம்மன்         :     வளைக்கைநாயகி, சர்வஜனரக்ஷகி

தல விருட்சம்   :     வில்வமரம்

தீர்த்தம்         :     எமதீர்த்தம்

புராண பெயர்    :     திருவைகாவூர், வில்வவனம்

ஊர்             :     திருவைகாவூர்

மாவட்டம்       :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றை துரத்திக் கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட வேடன் முனிவரை தாக்க ஆரம்பித்தான். உடனே சிவபெருமான் புலி வடிவமெடுத்து வேடனைத் துரத்தினார். வேடன் பயந்தோடி அருகிலிருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நின்றது. வேடன் வேறு வழியின்றி மரத்திலேயே இரவு முழுதும் தங்கியிருந்தான். இரவில் தூக்கம் வந்து கீழே விழுந்து விடுவமோ என்று நினைத்த வேடன் ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருக்க அவை புலி வடிவிலிருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தன. அன்று மகா சிவராத்திரி நாள் ஊன் உறக்கம் இன்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனை அறியாமல் கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் தந்தார். அன்று அதிகாலையில் அவனது ஆயுள் முடிவதாக இருந்ததால் யமன் அங்கு வந்தான். நந்தி தேவர் யமன் வருவதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோல் ஏந்தி யமனை விரட்டினார். யமனை உள்ளே விட்ட குற்றத்திற்காக நந்தி மீது கோபம் கொண்டார். இறைவனுக்கு பயந்த நந்தி யமனை தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டார். பின் யமன் சிவனை வணங்க அவர் விடுவிக்கப்பட்டார். பின்பு ஆலய எதிரில் குளம் அமைத்து சிவனை வழிபட்டுச் சென்றதாக தல வரலாறு கூறுகிறது. கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நந்திகேசுவரர் கோவிலுக்குள் யார் வருகிறார்கள் என்று பார்ப்பதற்காக எதிர்புறமாக திரும்பி இருக்கிறார்.

இக்கோவிலில் ராஜகோபுரம் இல்லை. முகப்பில் விநாயகர் காட்சி தருகின்றார். முகப்பு வாயில் மட்டுமே ஐந்து கலசங்களுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறது. உள் நுழைந்தால் நந்தி நம்மை நோக்கி திரும்பி (கிழக்கு நோக்கி) இருப்பதைக் காணலாம். உள் கோபுரவாயில் நுழைந்தால் வாயிலில் இடது பக்கம் வேடன் நிகழ்ச்சி கதையால் சித்தரிக்கப்பட்டுள்ளது. வெளிப் பிராகாரத்தில் சப்தகன்னியர் சன்னதியும் சுந்தரமூர்த்தி விநாயகர் சன்னதியும் வள்ளி தெய்வானையுடன் கூடிய ஆறுமுகப்பெருமான் சன்னதியும் உள்ளன. இங்குள்ள சுப்பிரமணியர் சிலை கலையம்சத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. சிக்கல் எண்கண் எட்டுக்குடி பட்டுகுடி ஆகிய தலங்களிலுள்ள முருகன் சிலை வடித்த சிற்பியால் செய்யப்பட்ட சிலை இது. முருகன் கையிலுள்ள ரேகைககள் மயிலின் தோகைகள் மயிலின் அலகில் உள்ள நாகத்தின் நளினமான உடல் அனைத்தும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன.

 

கோயில் சிறப்புகள்:

  • சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 48 வது தேவாரத்தலம் திருவைகாவூர்.

 

  • இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

  • அம்பாள் சர்வஜனரக்ஷகி வளைக்கைநாயகி. அம்பாளுக்கு எதிரில் ஸ்ரீ சக்கரம் உள்ளது.

 

  • மகா சிவராத்திரி என்ற சிறப்பு வாய்ந்த சிவ விழாவுக்கு காரணமான தலம்.

 

  • இத்தலத்தில்தான் வேறு எங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

 

  • நந்திகேசுவரர் எதிர்புறமாக திரும்பி இருக்கிறார்.

 

  • நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை.

 

  • அர்த்தமண்டபத்தில் வாயிற்படியின் இருபுறங்களிலும் விஷ்ணுவும் பிரம்மனும் எங்குமே காணப்படாத நிலையில் துவாரபாலகர்களாக நிற்கிறார்கள். அருகில் கையில் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தி இருக்கிறார்.

 

  • பிரம்மாவும் விஷ்ணுவும் இத்தலத்தில் இருப்பதால் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படுகிறது.

 

  • வேதங்கள் வில்வ வடிவில் நின்று இத்தலத்தில் தவம் புரிவதாக புராணம் கூறுகிறது.

 

  • ஊழிக் காலத்தில் அனைத்து அழியக்கூடும் என்பதை உணர்ந்த வேதங்கள் சிவபெருமானை வணங்கி தாம் அழியாமலிருக்க உபாயம் கேட்டதாகவும் அப்பெருமானின் ஆலோசனையின்படி இத்தலத்தில் வில்வ மரமாக நின்று தவம் புரிந்து வழிபடுவதாகவும் இதனால் இத்தலத்துக்கு வில்வ ஆரண்யம் என்றும் சுவாமிக்கு வில்வவனேசுவரர் என்றும் பெயர் வந்தது.

 

  • ஒரே கல்லில் மயில் திருவாட்சி ஆகியன ஒன்றாக அமைந்த ஆறுமுகம் கொண்ட சண்முகர் இங்கு உள்ளார். கை ரேகை நகம் எல்லாமே அந்த சிற்பத்தில் தெளிவாக தெரியும். இதில் மயில் இடப்புறமாக திரும்பியிருக்கிறது. அருணகிரிநாதர் இவரைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார்.

 

  • மணக்கோலத்தில் மணமக்கள் எவ்வாறு ஒரே நேர்கோட்டில் உட்கார்ந்திருப்பரோ அது போல் சுவாமி அம்பாள் சந்நிதிகள் நேர்கோட்டில் உள்ளன.

 

  • உத்தால முனிவரிடம் சாபம் பெற்ற சப்தகன்னிகளும் இங்கு சிவனை வேண்டி சாபநிவர்த்தி பெற்றார்கள். மற்ற கோவில்களில் சப்த மாதாக்கள்தான் வழிப்பட்டதாக வரலாறு இருக்கும். இத்தலத்தில் சப்த கன்னிகள் வழிபட்டுள்ளனர்.

 

  • எம பயம் தீர்த்த தலமாக திருவைகாவூர் விளங்குகிறது.

 

  • தனது மூச்சுக் காற்றால் யமதர்மனை நந்தி தேவர் விரட்டியதால் இங்கு திரும்பிய நிலையில் காட்சி தருகிறார். எல்லா நந்திகளும் திரும்பிய நிலையிலேயே இருக்கின்றன. இங்கு தட்சிணாமூர்த்தி கல்லால மரம் இன்றி காட்சி தருகின்றார்.

 

  • இந்த ஊரில்தான் சிவராத்திரி பிறந்தது. சிவனுக்கு விசேஷ பூஜைகளுடன் சிவராத்திரி விழா இங்கு விமரிசையாக நடக்கும். நான்காம் யாமத்தில் வேடன் வேடுவச்சி இறைவன் காட்சி புறப்பாடு நடைபெறுகிறது. மறுநாள் அமாவாசையன்று கோபுரத்தின் கீழே வேடனை நிறுத்தி மூலஸ்தானத்தில் சிவனுக்கும் அதன்பின் வேடனுக்கும் தீபாராதனை காட்டுவார்கள். வேடன் மோட்சம் பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர். பின் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன் வேடன் வேடுவச்சியும் புறப்பாடாவார்கள். மதியம் எம தீர்த்தத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார்கள். இரவில் சுவாமி அம்பாள் இருவரும் ஒரு ஓலைச் சப்பரத்தில் எழுந்தருளுவார்கள். இந்த சப்பரம் விசேஷமாக மூங்கில் கீற்றில் தென்னை ஓலைகளைக் கட்டி பிரத்யேகமாக தயாரிக்கப்படும்.

 

  • திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

 

திருவிழா: 

மாசி மாதம் மகா சிவராத்திரி 2 நாட்கள் திருவிழா அம்மாவாசை அன்று தீர்த்தவாரி பஞ்சமுக மூர்த்திகள் வீதியுலா இரவு ஓலை சப்பரத்தில் வீதியுலா(ஓலையாலேயே ரிஷபம், சுவாமி, அம்பாள், அனைத்துமே ஓலையால் கட்டி வீதியுலா நடைபெறுவது மிகவும் சிறப்பான ஒன்றாகும். ஆருத்ரா புறப்பாடு திருவாதிரை, விஜயதசமி, திருக்கார்த்திகை ஆகியவை இத்தலத்தில் மிகவும் விசேசம்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில்

திருவைகாவூர்- 613 304.

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:    

+91-94435 86453, 96552 61510

 

அமைவிடம்:

கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் 18 கி.மீ., தூரத்தில் திருவைகாவூர் உள்ளது. இங்கிருந்து குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு. தஞ்சாவூர் கும்பகோணம் வழியில் (25 கி.மீ.,) உள்ள பாபநாசத்தில் இருந்து இவ்வூருக்கு பஸ் வசதி உள்ளது. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : கும்பகோணம் 17 கி.மீ. தஞ்சை 45 கி.மீ. சுவாமிமலை 7 கி.மீ.

 

 

Share this:

Write a Reply or Comment

seventeen + eight =