June 29 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருபவளவண்ணம்

  1. அருள்மிகு பவளவண்ணபெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     பவளவண்ணர்

தாயார்          :     பவழவல்லி (பிரவாளவல்லி)

தீர்த்தம்         :     சக்கர தீர்த்தம்

புராண பெயர்    :     பிரவாளவண்ணர் ( திருப்பவளவண்ணம்)

ஊர்             :     திருபவளவண்ணம்

மாவட்டம்       :     காஞ்சிபுரம்

 

ஸ்தல வரலாறு:

ஒருசமயம் திருமாலுக்கும் பிரம்மதேவனுக்கும் தங்களுள் யார் உயர்ந்தவர் என்பது குறித்து விவாதம் நடைபெற்றது. இதுகுறித்த முடிவு எடுக்க அவர்கள் இருவரும் ஈசனை அழைத்தனர். யார் முதலில் தனது திருவடியையும் திருமுடியையும் கண்டு வருகிறார்களோ, அவரே உயர்ந்தவர் என்று அறிவிப்பதாகக் கூறினார் ஈசன்.

திருமாலும் பிரம்மதேவனும் ஈசனின் அடி, முடியைக் காணப் புறப்பட்டனர். திருமால் தன்னால் இயலவில்லை என்று ஒப்புக் கொண்டார். ஆனால் பிரம்மதேவனோ, தான் ஈசனின் திருமுடியைக் கண்டுவிட்டதாக, தாழம்பூ சாட்சியாக, உண்மைக்கு புறம்பாகக் கூறுகிறார். இதனால் சிவசாபத்துக்கு ஆளாகிறார் பிரம்மதேவன். சிவசாபத்தால் பூலோகத்தில் கோயிலோ வழிபாடுகளோ இல்லாமல் ஆனார். அதனால் ஈசனை மகிழ்ச்சிப்படுத்த யாகம் ஒன்றை நடத்த முயன்றார். அதற்கு சரஸ்வதி தேவியை அழைக்காது, தான் மட்டுமே யாகத்தை நிகழ்த்த எண்ணினார். (பொதுவாக கணவன், மனைவி இருவரும் சேர்ந்து நடத்தினால்தான் யாகம் பூர்த்தி ஆகும்)

இதனால் சரஸ்வதி தேவி கோபம் அடைந்தாள், பிரம்மதேவன் யாகம் நடத்தவிடாமல் அசுரர்களை ஏவினாள். கலவரமடைந்த பிரம்மதேவன், தனக்கு உதவுமாறு திருமாலை வேண்டினார். திருமாலும் பிரம்மதேவனுக்கு உதவுவதாக உறுதியளித்து அவ்வாறே அந்த அசுரர்களை அழித்தார். அப்போது அசுரர்களின் குருதி திருமால் மீது தெளித்ததால் பவள நிறமேனியராக திருமால் காட்சி அளித்தார். அதனாலேயே இத்தல பெருமாளுக்கு ‘பவளவண்ணர்’ என்ற பெயர் ஏற்பட்டது. இவருக்கு ‘பிரவாள வண்ணர்’என்ற மற்றொரு பெயரும் உண்டு.

 

ஒருசமயம் வைகுண்டத்தில் திருமாலும் திருமகளும் உரையாடிக் கொண்டிருக்கும்போது, ஈசனின் அருளால் திருமால் தனது மேனியை பொன்னிறமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று விண்ணப்பிக்கிறாள். அதற்கு இசைந்த திருமால், ஈசனைக் காணச் சென்றார். செல்லும் வழியில் கச்சித் திருத்தலத்தை அடைந்த திருமால் வீரட்டகாசத்தின் முன்பு தனது சக்ராயுதத்தால் தீர்த்தம் ஒன்றை உருவாக்கினார். தினமும் அதில் நீராடி 14,000 தாமரை மலர்களைக் கொண்டு வீரட்டகாசரை வழிபட்டார். திருமாலின் வழிபாட்டைக் கண்டு மகிழ்ந்த ஈசன், உமையோடு அவர்முன் தோன்றி அருள்பாலித்து, “பச்சை மேனியனுக்கு பவளவண்ணம் தந்தோம்” என்றார்.

 

கோயில் சிறப்புகள்:

  • 108 திவ்யதேசங்களில் இங்குள்ள பெருமாள் சிவந்த நிறத்துடன் ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.

 

  • காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு நேரே கிழக்கு திசையில் இக்கோயில் அமைந்துள்ளது. ஏகாம்பரேஸ்வரரும், பவளவண்ணரும் எதிரெதிரே பார்த்தவாறு இருக்கின்றனர்.

 

  • பிரகாரத்தில் பிரவாளவல்லி தாயார், ஆண்டாள் சன்னதிகள் உள்ளன. ஐந்து நிலை ராஜகோபுரம் உடையது.

 

  • இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

 

  • திருமாலைக் காண பிருகு முனிவர் வைகுண்டம் சென்றார். திருமால் இவரைக் கவனிக்காது திருமகளுடன் உரையாடிக் கொண்டிருந்தார். தன்னை திருமால் அவமதிப்பதாக எண்ணிய முனிவர், திருமாலின் மார்பில் உதைத்தார். ஆனால், சிறிதும் கோபப்படாமல், அவரது பாதம் புண்பட்டதோ என்று திருமால் அவரது காலை வருடிவிட்டார். தனது தவறை உணர்ந்த முனிவர் பூலோகத்தில் உள்ள தலங்களுக்குச் சென்று வழிபட்டு சாப விமோசனம் தேடலானார். அப்போது நாரதர் அவரிடம், “காஞ்சியில் உள்ள சத்ய க்ஷேத்ரம் என்று அழைக்கப்படும் திருப்பவளவண்ணம் சென்று திருமாலை வழிபட்டால் சாப விமோசனம் கிடைக்கும்” என்று ஆலோசனை வழங்குகிறார். அதன்படி இத்தலம் வந்து பவளவண்ணரை வழிபட்டு சாப விமோசனம் பெறுகிறார். இதனால் பிருகு முனிவர் இத்தலத்தில் கருவறையில் திருமாலை வணங்கிய நிலையில் உள்ளார்.

 

  • மூலவர் சிவந்த வடிவம் கொண்டு காட்சி அளிப்பதை வேறு எந்த தலத்திலும் காண முடியாது. அஸ்வினி தேவதைக்கும் பார்வதி தேவிக்கும் நேரடி காட்சி கொடுத்திருக்கிறார் என்பது மற்றொரு சிறப்பு.

 

  • திருமால் கிருதயுகத்தில் பால் நிறமாகவும், திரேதாயுகத்தில் பவள நிறமாகவும், துவாபாரயுகத்தில் பசுமை நிறமாகவும், கலியுகத்தில் நீலநிறமாகவும் காட்சி அருளியுள்ளார். அவ்வகையில் பார்த்தால் இவர் திரேதாயுகத்தில் அருள் செய்தவராக உள்ளார்.

 

  • இத்தலம் பவள வண்ணர், பச்சை வண்ணர் என்று 2 சந்நிதிகளைக் கொண்டது. இரண்டும் எதிர் எதிராக அமைந்திருக்கின்றன. இரண்டையும் சேர்த்தே ஒரே திவ்ய தேசமாக வணங்குவது வழக்கம்.

 

  • 5 நிலை ராஜகோபுரம் கொண்ட இத்தலத்தில் பிரவாள விமானத்தின் கீழ் மூலவர் பவளவண்ணர் அமர்ந்த கோலத்தில் மேற்கு நோக்கி சேவை சாதிக்கிறார். தாயார் பவளவல்லி. தனிக்கோயில் நாச்சியாராக எழுந்தருளி உள்ளார். பவள வண்ணர் ஆதிசேஷன் மீது வீற்றிருந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார். பெருமாளின் அருகில் சந்தான கோபாலகிருஷ்ணர் உள்ளார்.

 

  • இங்குள்ள பிரவாளவல்லித் தாயார் சந்நிதியின் முன்மண்டப மேற்கூரையில் எட்டு திசை அதிபர்களின் சிற்பங்கள் உள்ளன

 

  • ஆண்டாள், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், உடையவர், பன்னிரு ஆழ்வார்கள், ஆறு ஆச்சார்யர்கள், மணவாள மாமுனிகள் சந்நிதிகள் உள்ளன.

 

  • கோயிலுக்கு முன்பகுதியில் சக்கர தீர்த்தம் உள்ளது. வட்ட வடிவில் சக்கரம் போலவே உள்ள இத்தீர்த்தத்தின் மத்தியில்தான் திருமால் சக்ராயுதம் கொண்டு அசுரர்களை வதம் செய்தார் என்று கூறப்படுகிறது.

 

  • யாகத்தை அழிக்க சரஸ்வதி தேவி அனுப்பிய பல அரக்கர்களை திருமால் அழித்து யாகத்தை காத்தார். இதனால் திருமாலின் உடல் முழுவதும் ரத்தத்தால் பவளம் போல் சிவந்து காணப்பட்டது. இந்த சிவந்த மேனி கொண்ட பவள வண்ண பெருமாள் குடிகொண்டுள்ள இடம் தான் பவளவண்ணம் திருக்கோயில். இங்குள்ள அத்தி மரத்தினாலான பவளவண்ண பெருமாள் திருக்குளத்தில் தான் வைக்க வேண்டும் ஆனால், திருக்குளத்தில் நீர் இல்லாத காரணத்தால் மூலவர் அருகில் வைக்கப்பட்டு பூஜித்து வருகின்றனர். அத்தி மரத்தினாலான பவளவண்ண பெருமாள் சேச வாகனத்தில் அமர்ந்தது போல காட்சி அளிக்கின்றார்.

 

திருவிழா: 

வைகாசியில் 10 நாட்கள் பிரம்மோற்சவம், பங்குனியில் 5 நாட்கள் பவித்ரஉற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி.

 

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 11 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பவளவண்ணப்பெருமாள் சுவாமி திருக்கோயில்,

திருப்பவளவண்ணம் – 631 502.

காஞ்சிபுரம் மாவட்டம்

 

போன்:    

+91- 98423 51931.

 

அமைவிடம்:

காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து சுமார் 1 கி.மீ., தூரத்தில் கோயில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

seventeen − 10 =