January 03 2018 0Comment

18.சௌரிராஜப்பெருமாள் கோவில்

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று.மேலும் இது பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். இந்தக் கோவில் சௌரிராஜப்பெருமாள் கோவில் எனவும் அறியப்படுகிறது.
கோயில் தகவல்கள்:
பெயர்: திருக்கண்ணபுரம்
சௌரிராஜப்பெருமாள்
(நீலமேகப்பெருமாள்)
ஊர்: திருக்கண்ணபுரம்
மாவட்டம்: நாகப்பட்டினம்
மூலவர்: நீலமேகப்பெருமாள் (விஷ்ணு)
உற்சவர்: சௌரிராஜப்பெருமாள்
தாயார்: கண்ணபுர நாயகி
தீர்த்தம்: நித்திய புஷ்கரணி
மங்களாசாசனம்
பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்
விமானம்: உத்பலாவதக
கல்வெட்டுகள்: உண்டு
இந்தக் கோவிலின் கோபுரம் 7 அடுக்குடையது.
மூலவர் : நீலமேகப்பெருமாள்
பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். மற்ற கோயில்களில் உள்ளது போல அபயக் கரத்துடன் இல்லாமல் தானம் பெறும் கரத்துடன்உள்ளார்.
பக்தர்களின்  துன்பங்களையெல்லாம் அவர் பெற்றுக்கொள்வார் என்பதை இது உணர்த்துவதாக உள்ளது. வைகாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் போது அதிகாலையில் சிவனாகவும் மாலையில் பிரம்மாவாகவும், இரவில் விஷ்ணுவாகவும் காட்சிதரும் மும்மூர்த்தி தரிசனம் இக்கோயிலின் சிறப்பாகும்.
விமானம்: உத்பலாவதக
திருக்கோயிலை வலம் வரும் போது இத்திருக்கோயிலின் விமானம் கண்ணில் படுவதில்லை என்பது இதன் சிறப்பு.
திருவிழா:
வைகாசி, மாசி மாதங்களில் நடைபெறும் பிரம்மோற்சவத் திருவிழாக்கள் சிறப்பானவை.
மாசி மாதம் பௌர்ணமியின் போது கடற்கரையில் நடைபெறும் கருடனுக்குக் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெறும்.
திருமலைராயன்பட்டினத்திலுள்ள கடற்கரை கிராமமான பட்டினச்சேரிக்கு வரும் சௌரிராஜப் பெருமாளுக்கு அங்குள்ள வெள்ளை மண்டபம் என்ற பகுதியில் அலங்காரம் செய்யப்படுகிறது.
மீனவர்கள் அலங்கரிக்கும் நெற்கதிர்கள் தோரணமாகத் தொங்கவிடப்பட்டிருக்கும் பவளக்கால் சப்பரத்தில் தங்க கருடவாகனத்தின் மீதமர்ந்திருப்பார்.
பட்டினச்சேரி மீனவ மக்கள் சௌரிராஜப் பெருமாளை ’மாப்பிள்ளைப் பெருமாள்’ என்று அழைக்கின்றனர்.
இக்கோவில் அர்ச்சகர் ஒருநாள், கோவிலுக்கு வந்த அரசனுக்கு சுவாமிக்கு சூடிய மாலையைத் தர அதில் ஒரு நீண்ட தலைமுடி இருந்தது.
இதனால் கோபங்கொண்ட அரசனிடம், அர்ச்சகர் அது பெருமாளின் திருமுடி என்று சொல்லிவிட, அரசன் தான்    நாளை வந்து பார்க்கும்போது பெருமாளுக்கு முடி இல்லையெனில் அர்ச்சகர் தண்டனைக்குள்ளாவார்
என்று கூறிவிட்டுச் சென்றான்.
அர்ச்சகர் பெருமாளிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினார். அவரிடம் இரக்கம்கொண்ட பெருமாள் அவரைக் காப்பாற்ற திருவுளம் கொண்டார். அடுத்த நாள் அரசன் வந்து பார்த்தபோது உண்மையிலேயே பெருமாள் தலையில் திருமுடி இருந்தது. இந்நிகழ்வின் காரணமாகவே உற்சவர் சௌரிராஜப்பெருமாள் எனப் பெயர் கொண்டுள்ளார் என்பது தொன்நம்பிக்கை.
உற்சவர் உலாவில் அமாவாசையன்று மட்டும்
திருமுடி தரிசனம் காணலாம்.
முனையதரன் பொங்கல் :
திருக்கண்ணபுரத்தில் வாழ்ந்து வந்த முனையதரையர் எனும் பக்தர் பெருமாள் திருப்பணிகளைச் செய்து வந்த போது, பஞ்சம் ஏற்பட்டது.
அவரோ பெருமாளுக்குப் படைக்காமல் எதுவும் உண்ணாதவர். எனவே வீட்டில் இருக்கும் பொங்கலை அவரது மனைவியார் இறைவனுக்கு மானசீகமாகப் படைத்து வழிபட, திருக்கோயிலைத் திறக்கும்போது பொங்கல் மணம் வீசுவதையும் பொங்கல் முனையதரையர் வீடு வரையும் சிதறி இருப்பதையும் கண்டு அடியார் வீட்டில் படைத்த எளிய பொங்கலை பெருமாள் ஏற்றுக்கொண்டதை அனைவரும் அறிந்தனர்.
இதை நினைவுகூரும் விதமாக இன்றளவும் அர்த்த சாமத்தில் பெருமாளுக்கு பொங்கல் வழங்கப்படுகின்றது. இரண்டாம் கால நிவேதனமாக இரவு ஒன்பது மணிக்குமேல் படைக்கப்படுகின்றது.
பொங்கல்:
அரிசி ஐந்து பங்கு, பாசிப்பயிறு முழுப்பயிறு ஐந்து பங்கு, இரண்டு பங்கு வெண்ணெய் உருக்கிய நெய் மற்றும் உப்பு கலந்து தயாரிக்கப்படும் நைவேத்தியப்பிரசாதம். மிளகு, சீரகம் சேர்க்கப்படுவது இல்லை.
காளமேகப்புலவரும் கண்ணபுரம் பெருமாளும்:
வைணவக்குடும்பத்தில் பிறந்த காளமேகம் சைவராக மாறிவிட்டாரே என்று கண்ணபுரம் பெருமாளுக்கு கோபம் ஏற்பட்டதாம். மழைநாளில் கண்ணபுரம் பெருமாள் கோயிலில் மழைக்காக புலவர் ஒதுங்க, கோயில் கதவுகளை மூடிப் பெருமாள் உள்ளே விடவில்லை.உடனே காளமேகப்புலவர் கவிதை ஒன்று இயற்றி, பெருமாளை நோக்கிப் பாட கோயில் கதவுகள் திறந்தனவாம்.
இத்திருத்தலத்துப் பெருமாள் மறுபிறவியின்றி வீடு பேறளிக்கும் பெருமாளாக வழிபடப்படுகின்றார்.
Share this:

Write a Reply or Comment

twelve + eighteen =