அத்தகைய சின்னங்கள் தனி நபரது வாழ்க்கை முறைகளிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்ற நம்பிக்கை அனைத்து நாடுகளிலும் உண்டு.
ஸ்வஸ்திக் சின்னம்: யஜீர் வேதத்தில் இதை பற்றி குறிப்பு உள்ளது. அதாவது, சகல வளங்களும் நிறைந்த நல்வாழ்வை தருவதற்காக, தேவர்களை குறித்து செய்யப்படும் பிரார்த்தனையாக இந்த குறியீடு உள்ளது.
வேத பிரார்த்தனையில் உள்ள ‘ஸ்வஸ்தி’ என்ற வார்த்தை ‘தடைகள் இல்லாத நல்வாழ்வு’ என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்படுகின்றது. அந்த நிலையை ஏற்படுத்தும் சின்னமாக ‘ஸ்வஸ்திகா’ எனப்படும் ‘ஸ்வஸ்திக்’ என்று பயன்படுத்தப்படுகிறது.
மகாவிஷ்ணுவின் வலது கரத்தில் உள்ள சுதர்சன சக்கரத்தின் வடிவமே ‘ஸ்வஸ்திக்’ என்றும் ஒரு கருத்து இருக்கின்றது.
செங்கோண வடிவத்தில், மேலிருந்து கீழாக மற்றும் இடமிருந்து வலமாக, ஒன்றுக்கு ஒன்று குறுக்காக செல்லும் கோடுகள் மூலம் இவ்வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சின்னத்தில் இருக்கும் எட்டு கோடுகளும் எட்டு திசைகளை குறிப்பதாகவும், அந்த திசைகளிலிருந்து புறப்படும் சுப காரிய தடையை உண்டாக்கும் சக்திகளை ‘ஸ்வஸ்திக்’ தடுப்பதாகவும் ஐதீகம் உண்டு.
இந்திய ஆன்மீக பண்பாட்டு ரீதியாக, வீட்டின் தலைவாசல், தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களை வைக்கும் இடங்கள், பணப்பெட்டி, கல்லாப்பெட்டி, கணக்கு புத்தகம் மற்றும் குறிப்பேடுகள், வழிபாட்டுக்குரிய தலங்கள் ஆகிய சகல இடங்களிலும் ‘ஸ்வஸ்திக்’ வடிவ சின்னம் பயன்படுத்தப்படுகிறது.
வரையும் முறை :
ஸ்வஸ்திக் சின்னத்தை வரைவதற்கென்று பிரத்யேகமான ஒரு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது, முதலில் இடமிருந்து வலமாக உள்ள மூன்று கோடுகளை வரைந்து கொள்ளவேண்டும்.
பின்னர், கீழிருந்து மேலாக மற்ற மூன்று கோடுகளையும் வரைய வேண்டும். இந்த முறைப்படிதான் சகல இடத்திலும் ஸ்வஸ்திக் சின்னம் அமைக்கப்பட வேண்டும்.
அதன் மூலம் அனைத்து விதமான நலன்களும் ஏற்படும் என்பது ஐதீகம். அவ்வாறு வரையப்பட்ட சின்னத்தை வண்ணங்களால் அலங்கரிக்க விரும்புபவர்கள், மஞ்சள் நிறத்தில் பட்டையான கோடுகளை வரைந்த பிறகு, அவற்றின் மையப்பகுதியில் குங்குமம் மூலம் பொட்டிட்டு அலங்கரிப்பது, மங்கள சக்திகளை ஈர்ப்பதாக தாத்பரியம் உண்டு.
இரண்டு வகைகள் :
ஸ்வஸ்திக் சின்னமானது வலப்புற சுற்று மற்றும் இடப்புற சுற்று ஆகிய இரண்டு நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக, மங்களமான சக்திகளை ஈர்க்கக்கூடிய வலப்புற சுற்று அமைந்த (அதாவது கடிகார முள் சுற்றுவதுபோல) சின்னம்தான் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.
அதற்கு மாறாக, இடப்புற சுற்றாக (கடிகார முள் சுற்றுவதற்கு எதிர்ப்புறமாக) பயன்படுத்தப்படும் ஸ்வஸ்திக் சின்னம் தீய சக்திகளை ஈர்க்கும் தன்மை பெற்றதாக கருதப்படுகிறது. அதனால், சின்னத்தை வரையும்போது கவனமாக இருப்பது அவசியம்.