August 28 2020 0Comment

விளம்பரப் படுத்த அல்ல இந்த நிகழ்வு

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

27/08/20 அன்று ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் மதுரை மாவட்டம் சார்பாக திரு நாகராஜன், திரு ராஜா, திரு பாண்டியராஜா ஆகிய மூவரும் சில மாதங்களுக்கு முன் சீனாவுக்கு எதிரான போரில் தங்கள் இன்னுயிரை கொடுத்து நம் நாட்டை காப்பாற்றிய 20 வீரர்களில் ஒருவரான திரு பழனி அவர்களுடைய மனைவி திருமதி வானதி பழனி அவர்களை சந்தித்து, அவரின் இரண்டு வாரிசுகளுக்கு என ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள இரட்டைக் காப்பீட்டை ஒப்படைத்தார்கள்.

மேலும் ஒன்றரை லட்ச ரூபாய் தருவதாக உறுதி அளித்து விட்டு வந்துள்ளார்கள். செய்வதை சொல்லி காண்பிக்கக் கூடாது. நான் எங்க அம்மாவுக்கு சோறு போடுகிறேன். நான் என் தங்கைக்கு திருமணம் செய்தேன். நான் என் அக்கா பிள்ளைகளை படிக்க வைத்தேன் என்று சொல்வது எப்படி அபத்தமோ, அதைவிட அபத்தமானது நான் என் நாட்டை காக்கும் ராணுவ வீரனுடைய குடும்பத்திற்கு உதவி செய்தேன் என்று சொல்வது.

இவ்விடத்தில் நாங்கள் உதவி செய்தோம் என்று பதிய வைப்பதற்கு ஒரே ஒரு நோக்கம் தான் உண்டு. அது பிறரையும் உதவி செய்ய வைக்க வேண்டும் என்பது மட்டுமே அதற்கு காரணமாக இருக்க முடியும். இவ்விடத்தில் ஒன்றை ஞாபகப்படுத்த ஆசைப்படுகின்றேன்.

மதுரைக்கு கீழே மக்களுடைய ஒரே நம்பிக்கை கருப்பசாமி. தமிழ்நாட்டின் உச்சக்கட்ட சாமி அழகர். அந்த அழகருக்குகே பாதுகாப்பு கருப்பசாமி தான். அந்த வகையிலே ஒப்பாரும் மிக்காரும் இல்லா கருப்பசாமியை விட மேலான விஷயம் ஒன்று உண்டு என்றால் அந்தப் பெருமை நம் எல்லையை பாதுகாக்கும் நம் ராணுவ வீரர்களையே சாரும்.

நாம் சுதந்திரமாக சுவாசிப்பதற்காக தன் சுவாசத்தை நிறுத்திக்கொண்ட ஒவ்வொரு ராணுவ வீரனும் நம் மதங்கள் சொல்லும் அத்தனை கடவுள்களையும் விட மேலானவர்கள். அந்த வகையிலே நமக்காக நமக்காக மட்டுமே உயிர்நீத்த எண்ணற்ற ராணுவவீரர்களை அவர்கள் உயிர் நீத்த அந்த நொடியில் நினைத்து விட்டு அடுத்த நொடி மறந்து போய்க் கொண்டிருக்க கூடிய இந்த சூழ்நிலையிலே நாம் அனைவரும் அவர்களுக்காக இருக்கவேண்டும் இருந்தே ஆகவேண்டும் என்கின்ற நிலையை உருவாக்க எங்களால் முடிந்த இந்த விஷயத்தை செய்து நீங்களும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு துவக்கி வைத்திருக்கின்றோம்.

நாங்கள் செய்ததை விளம்பரப் படுத்த அல்ல இந்த நிகழ்வு. அனைவரும் செய்ய வேண்டும் என்கின்ற ஆவலை உண்டு பண்ணவே நாங்கள் இவ்விஷயத்தை பதிவிடுகிறோம். இனி போர் வரக்கூடாது. நம் ராணுவ வீரன் வீர மரணம் அடையக்கூடாது. வீரமரணம் அடையும் பட்சத்தில் ஒவ்வொரு ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கும் நாம் அரணாக இருக்க வேண்டும். இருந்தே ஆகவேண்டும்.

நாங்கள் இருக்கின்றோம் என்கின்ற ஒத்தை வாக்கியம் அவர்களை வாழவைக்கும் சந்தோஷமாக காலத்திற்கும். எல்லையை பாதுகாக்கும் ஒவ்வொரு ராணுவ வீரனுக்கும் நம் ஆதரவு எப்போதும் இருக்கும் என்கின்ற நம்பிக்கை அவர்களுக்கு வரவேண்டுமென்றால் நாம் அனைவரும் மதம் இனம் ஜாதி மறந்து பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தை நம் குடும்பத்துடன் இணைத்துக் கொள்வோம்.

நல்லது நடக்கும் நல்லதே நடக்கும் நம்புவோம் நாளை நமதே.

அன்புடன்

டாக்டர் ஆண்டாள் பி சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

four + twenty =