வயலூர் முருகன் கோவில் திருச்சியில் இருந்து 9 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பாக சோழ வம்சத்தின் ஆட்சியின் போது கட்டப்பட்டது.
இக்கோவில் ஆதி வயலூர், குமார வயலூர்,வன்னி வயலூர் மற்றும் அக்னீஸ்வரம் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
சுவாமி : சுப்ரமணிய சுவாமி
அம்பாள் : வள்ளி, தெய்வானை
தீர்த்தம் : சக்தி தீர்த்தம்
தலவிருட்சம் : வன்னி மரம்
தலச்சிறப்பு :
அருணகிரிநாதருக்கு முருகபெருமான் காட்சி தந்து அவருடைய நாவிலே தன் வேலினால் ஓம் என்று எழுதி திருப்புகழ் பாட அருளிய தலம்.
அக்னிதேவன், அருணகிரிநாதர், திருமுக கிருபானந்த வாரியார் ஆகியோர் போற்றி வணங்கிய தலம்.
இத்தலத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி அருள்புரிவதால் இத்தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பாகும்.
சோழர் காலத்திய கல்வெட்டுகள் திருகோவிலின் பழமைக்கு சான்றாகும். முருகன் தன் #வேலால் உருவாக்கப்பட்ட #சக்தி தீர்த்தம் திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ளது.
இத்தலத்தின் ஆதிநாதர் சன்னதி கர்ப்பகிரக சுவரில் 20 கல்வெட்டுக்கள் உள்ளன. சித்தர்கள் தேடிவந்து முக்தி அடையும் இடம் வயலூர் முருகன் சன்னதி ஆகும்.
தல வரலாறு :
சோழமன்னர்கள் இப்பகுதிக்கு வந்து வேட்டையாடும்போது தாகம் எடுக்க மூன்று கிளைகளாக அமைந்து வளர்ந்திருந்த ஒரு கரும்பினை ஒடித்து தாகம் தீர்க்க எண்ணி ஒடித்த போது கரும்பிலிருந்து இரத்தம் கசிந்தது.
பிறகு அவ்விடத்தை தோண்டியபோது கரும்பு வளர்ந்த அடிப்பகுதியில் சிவலிங்கம் தென்பட உடனே மன்னர் இத்திருக்கோயிலினை அமைத்து சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டு வந்தார்.
பிறகு அந்த இடத்தில் கோயில் எழுப்பினான். சிவனுக்கு ஆதிநாதர் என்ற பெயர் சூட்டி அம்பாள் ஆதிநாயகிக்கும் சன்னதி எழுப்பினான். வயல்கள் நிறைந்த அவ்வூருக்கு ‘வயலூர்” என்று பெயர் ஏற்பட்டது.
திருப்புகழ் தந்த திருமுருகன் :
திருவண்ணாமலையில் முருகன் அருள் பெற்ற அருணகிரியார் ‘முத்தைத் தரு” எனத் துவங்கும் திருப்புகழ் பாடினார். அதன்பின் அவர் வேறு பாடல் எதுவும் பாடவில்லை.
ஒரு சமயம் அவர் முருகனைத் தரிசனம் செய்தபோது ஒலித்த அசரீரி ‘வயலூருக்கு வா!” என்றது.
அருணகிரியார் இங்கு வந்தார். அங்கு முருகனின் தரிசனம் கிடைக்குமென நினைத்து வந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முருகன் வரவில்லை. உடனே ‘அசரீரி பொய்யோ?” என உரக்கக் கத்தினார்.
அப்போது முருகன் அங்கு தோன்றி வேலால் அருணகிரிநாதரின் நாக்கில் ‘ஓம்” என்று எழுதினார். அதன்பின் இத்தல முருகனைப் போற்றி அவர் 18 பாடல்கள் பாடினார். தொடர்ந்து பல முருகன் கோயில்களுக்குச் சென்று திருப்புகழ் பாடினார்.
திருவிழா :
வைகாசி விசாகப்பெருவிழா, கந்த சஷ்டி பெருவிழா, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்றவை இங்கு விஷேஷமாக கொண்டாடப்படுகிறது.
#திருப்புகழ் #திருமுருகன் #சுப்ரமணிய_சுவாமி #அருணகிரியார் #வயலூர் #முருகன்
Share this: