மலரட்டும் மகிழ்ச்சி…

Vastu - Begger

தலைநகரத்தின் பிரதானக் கடைத்தெருவில் இருக்கும் கடைகளில் பிச்சை எடுத்துத் தன் வயிற்றைக் கழுவிக் கொண்டிருந்தான் பிச்சைக்காரன். கடைக்காரர்கள் சில சமயம் அவன் மேல் இரக்கப்பட்டு செப்புக்காசுகளைப் பிச்சை போடுவார்கள்.

அவர்களுடைய வியாபாரம் சரியில்லை என்றால் பிச்சைக்காரன் மேல் எரிந்து விழுவார்கள். சிலர் காசு போட்டாலும் வாய்க்கு வந்தபடி திட்டுவார்கள். பிச்சைக்காரனுக்கு மிகவும் அவமானமாக இருக்கும்.

சில நாட்களில் முன்னிரவு வேளையில்தான் அவனுக்கு முதல் உணவு கிடைக்கும். அதை உண்ணும்போது தனக்குக் கிடைத்த வசவு வார்த்தைகளை நினைத்துப் பார்ப்பான். “இந்தப் பிழைப்பும் ஒரு பிழைப்பா!’ என்ற சுய பச்சாதாபம் மேலிட, சாப்பாட்டை தெரு நாய்க்குப் போட்டுவிட்டுத் தண்ணீர் குடித்துவிட்டு படுத்துவிடுவான்.

சில நாட்களில் கடைக்காரர்கள் அவன்மேல் இரக்கப்பட்டு நிறைய காசு, வீட்டில் மீந்துபோன தின்பண்டங்கள், பழைய ஆடைகளைத் தருவார்கள். அப்போது மகிழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருப்பான்.

ஒருசமயம், கடைத்தெருவில் வியாபாரம் பெரிதாக இல்லை. வியாபாரிகள், தங்களின் ஆதங்கத்தை எல்லாம் அந்த பிச்சைக்காரனிடம் காண்பித்தார்கள். ஒரு துணிக்கடை வியாபாரி, அந்தப் பிச்சைக்காரனைப் பேசிய வார்த்தைகளை அச்சேற்றக்கூட முடியாது. “”இப்படி ஒரு மானம்கெட்ட பிழைப்பு பிழைப்பதற்குப் பதிலாகச் சாவது எவ்வளவோ மேல். இவ்வளவு பேச்சையும் வாங்கிக்கொண்டு உன்னால் எப்படிச் சாப்பிட முடிகிறது என்று எனக்குத் தெரியவில்லை.” பிச்சைக்காரன் ஒன்றும் பேசாமல் தன் குடிசைக்குத் திரும்பிவிட்டான். வயிற்றைப் பசி கிள்ளியது. அதற்கு மேல் யாரிடமும் பிச்சை கேட்கத் தோன்றவில்லை. வியாபாரியின் வசவுச் சொற்கள் அவன் இதயத்தைப் பிசைந்தது.. செயல்படுத்த முடியாத கோபம் அவனைப் பாடாய்ப் படுத்தியது. அப்படியே கண்ணயர்ந்து விட்டான்.

இரவு வேளை. திடீரென்று குதிரைகளின் குளம்புச் சத்தம் கேட்டு குடிசையை விட்டு வெளியே வந்தான். குடிசைக்குச் சற்றுத் தள்ளிப் பல குதிரைப்படை வீரர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

ஒரு வீரன் பிச்சைக்காரனைப் பார்த்துவிட்டான்.

“”அதோ அங்கே பாருங்கள்.” என்று அந்த வீரன் கர்ஜித்தான். பிச்சைக்காரன் சுதாரிப்பதற்குள், பல வீரர்கள் அவன் மேல் பாய்ந்து அவனைப் பிடித்தார்கள். ஒருவன் பிச்சைக்காரனின் கந்தல் ஆடைகளை விலக்கி அவன் கணுக்காலைக் கூர்ந்து பார்த்தான்.

“”இவரே தான். கொண்டு வாருங்கள் பல்லக்கை.”

எங்கிருந்தோ ஒரு பல்லக்கு வந்தது. பிச்சைக்காரனைக் குண்டுக்கட்டாகத் தூக்கி அதில் வைத்தார்கள். பாதுகாப்புடன் அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அரண்மனை வாயிலில் பிச்சைக்காரனைப் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றார்கள்.

மூத்த அமைச்சர் ஒருவர் நிலைமையை விளக்கிச் சொன்னார்.
அதாவது அந்த நாட்டை அதுவரை நல்ல முறையில் ஆண்டுகொண்டிருந்த மன்னர் திடீரென்று இறந்துவிட்டார். அவருக்கு வாரிசுகள் ஒருவரும் இல்லை. மன்னர் மரணப்படுக்கையில் இருந்தபோது ஒரு உண்மையை அவர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.. பல வருடங்களுக்கு முன் அவருக்கு ஒரு குழந்தை பிறந்ததாகவும், தன் மனைவியோடு தீர்த்தயாத்திரை சென்ற போது அதை ஒரு திருடர் கூட்டம் கடத்திக் கொண்டு போய்விட்டதாகவும் சொன்னார். அந்தக் குழந்தையைத் திருடியவர்களில் ஒருவன் பல வருடங்கள் கழித்து மன்னனைச் சந்தித்தான். அந்தக் குழந்தை இப்போது அந்த நாட்டின் தலைநகரின் கடைத்தெருவில் பிச்சை எடுத்துக்கொண்டு வாழ்ந்து வருவதாகச் சொல்லியிருந்தான். மச்சம், முக அமைப்பு, நிறம் போன்ற அடையாளங்களையும் அந்தத் திருடர் கூட்டத்து ஆள் துல்லியமாகச் சொல்லியிருந்ததால் பிச்சைக்காரனாக இருந்த மன்னனின் மகனைக் கண்டுபிடித்து அழைத்து வந்து விட்டார்கள்.

நேற்று வரை கடைவீதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவன், இன்று நாடாளும் மன்னனாகி விட்டான்.

மாதங்கள் ஓடின. பிச்சைக்கார மன்னனுக்கு ஒரு விபரீத ஆசை வந்தது. ஒரே ஒரு நாள் மீண்டும் பிச்சைக்காரனாகக் கடைத்தெருப் பகுதிக்குப் போய் வந்தால் என்ன? மாறுவேடம் இட்டான். இரண்டு அந்தரங்கக் காவலர்களிடம் மட்டும், தான் போடும் வேடம் பற்றிச் சொன்னான். சற்றுத் தொலைவில் இருந்து தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்படியும் உயிருக்கு ஆபத்து வந்தால் மட்டுமே அவர்கள் குறுக்கிட வேண்டும் என்றும் கண்டிப்பாகக் கட்டளை போட்டு விட்டான்.

கடைத்தெரு வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பிச்சைக்காரனின் வேடத்தில் இருந்த மன்னரை யாருமே அடையாளம் கண்டுகொள்ளவில்லை. சில கடைக்காரர்கள் “பிச்சைக்காரனிடம்’, “”பல நாட்களாக உன்னைக் காணவில்லையே! என்ன ஆயிற்று?” – என்று கனிவுடன் பேசி உணவும் பணமும் தந்தார்கள்.
சில கடைகளில் வியாபாரம் மந்தமாக இருந்தது. அந்தக் கடைக்காரர்கள் அவனை வழக்கம்போல் கன்னா பின்னாவென்று திட்டினார்கள்.
“”இவ்வளவு நாட்கள் உன் தொந்தரவு இல்லாமல் இருந்தோம். இதோ நீ வந்துவிட்டாய். வியாபாரமும் படுத்துவிட்டது. அதிர்ஷ்டக்கட்டை. மானம் கெட்டவனே! சுரணையில்லாதவனே! நீ எல்லாம் உப்புப் போட்டுச் சாப்பிடுகிறாயா என்ன?”
கடைக்காரன் சத்தமாகப் பேசியது காவலர்கள் காதில் விழுந்துவிட்டது. இருவரின் கைகளும் வாளைத் தொட்டுக்கொண்டிருந்தன.
“”பிச்சைக்காரன்” லேசாகக் கண்ணசைத்திருந்தால் போதும், கடைக்காரன் பிணமாகியிருப்பான். ஆனால் பிச்சைக்காரனுக்குக் கோபமே வரவில்லை. புன்னகையுடன் வசவுச் சொற்களை ஏற்றுக் கொண்டான். பின் அடுத்த கடைக்குச் சென்றான். அந்தக் கடைக்காரன் இன்னும் மோசமான வார்த்தைகளில் திட்டினான்.

மற்றொரு கடையில் அமோக வரவேற்பு இருந்தது.

அந்த சமயத்தில் தான், மன்னனுக்கு ஒரு உண்மை உரைத்தது. தான் மன்னன் என்பதை உணர்ந்தவுடன் கடைக்காரர்களின் சுடு சொற்கள் அவனை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. அவர்கள் கூறிய இனிய சொற்களும் அவனுள் எந்த மாற்றத்தையும் உண்டாக்கவில்லை. நன்மையையும் தீமையையும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் மன்னனால் எதிர்கொள்ள முடிந்தது.

எப்படி? பிச்சைக்காரன் என்பது ஒரு வேடம். ஒரு நாள் கூத்து. அவ்வளவுதான். அவனுடைய உண்மை நிலை – நாடாளும் மன்னன்.
அந்தக் கடைக்காரர்களை ஒரு நொடியில் நிர்மூலம் செய்துவிடும் சக்திமிக்கவன். அந்த நிலையில் அவனுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

இந்த மன்னனின் மனநிலையை, நாமும் பெற்றுவிட்டால் நம் வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகள் நம்மை எந்தவிதத்திலும் பாதிக்காது. நாம் அனைவருமே கடவுளின் குழந்தைகள். ஒரு வகையில் மன்னர்கள். குமாஸ்தா, மென்பொருளாளன், மருத்துவன், வழக்கறிஞன், குடும்பத்தலைவி, சமையல்காரன், ஓட்டுனர் என்பதெல்லாம் ஒரு வாழ்நாள் கூத்துக்கான வேஷங்கள் மட்டுமே. அதே போல் மகன், மகள், தம்பி, தங்கை, அக்கா, அண்ணன், கணவன், மனைவி. போன்றவை அனைத்துமே ஒரு வாழ்நாளில் நாம் ஏற்று நடிக்கும் பாத்திரங்கள் மட்டுமே. நமது உண்மைநிலையை – அதாவது நாம் மன்னர்கள் என்பதை – உணர்ந்துவிட்டால் உறவும் பகையும் நமக்கு இருக்காது. சுகமும் துக்கமும் நம்மைப் பாதிக்காது. நம் வாழ்வில் மகிழ்ச்சி மலரும்.

பிச்சைக்காரனாக அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் நாம் எப்படி மன்னராவது?

நாம் மன்னர் ஆகத் தேவையில்லை. நாம் ஏற்கனவே மன்னர்கள்தான். அதை உணர்ந்து கொண்டாலே போதும். அமைச்சர்கள் அந்தப் பிச்சைக்காரனின் உண்மை நிலையை உணர்த்தியது போல், நமக்கு குரு ஸ்தானத்தில் உள்ளவர் நம் நிலையை நமக்கு உணர்த்துவார்.

இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்டால் சுகதுக்கங்களை சமமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நமக்கு எளிதாக விளங்கிவிடும்.

Courtesy: Dinamalar

Share this:

Write a Reply or Comment

16 + 17 =