August 03 2018 0Comment

மணப்பாறை மாரியம்மன் திருக்கோவில்:

மணப்பாறை மாரியம்மன் திருக்கோவில்:

கல்லில் நீண்ட காலமாக உயிர் கொண்டிருந்த மாரியம்மன் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை என்ற ஊரில் அமைந்துள்ளது.

மணப்பாறை மாரியம்மன் வகையறா கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.

மூலவர் : மாரியம்மன்

பழமை : 500 வருடங்களுக்குள்

ஊர் : மணப்பாறை

மாவட்டம் : திருச்சி

தல வரலாறு :

முன்னொரு காலத்தில் இந்த மாரியம்மன் கோவில் உள்ள இடம் மூங்கில் மரங்கள் மற்றும் வேப்ப மரங்கள் நிறைந்த காடுகளாக இருந்தன. 

மூங்கில் மரங்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அப்பகுதியினர் வானுயர்ந்த மூங்கில் மரங்களை வெட்டினர். அச்சமயத்தில் வேப்பமரம் ஒன்றை வேருடன் சாய்த்தனர். அப்போது அந்த வேப்ப மரத்தின் அடியில் கல் ஒன்று புதைந்து இருந்தது.

கல்லைப் பெயர்த்தெடுக்க முயன்ற போது கடப்பாறை முனை பட்டதும் கல்லுக்குள் இருந்து ரத்தம் கசிந்தது. அதிர்ந்துபோன மக்கள் அலறியடித்து ஓடி ஊர் பெரியவர்களை அழைத்து வந்தனர். 

அப்போது ஒருவருக்கு அருள்வந்து தான் மகமாயி என்றும் இந்த வேப்ப மரத்தடியில் கிடந்த கல்லில் நீண்ட காலமாக குடிகொண்டு இருந்ததாகவும் தனக்கு கோவில் கட்டி வணங்கினால் அனைவரையும் காத்து அருள்பாலிப்பதாகவும் கூறியது.

பக்தர்கள் அந்தக் கல்லை சில காலமாக கர்ப்பகிரகத்தில் வைத்து வழிபட்டு வந்தனர். பிறகு அம்மனுக்கு சிலை வடிக்கப்பட்டது. இருப்பினும் கர்ப்பக்கிரகத்தில் புனிதக்கல் இன்றும் உள்ளது.

தலச் சிறப்பு :

சமயபுரம் மாரியம்மனின் தங்கையாக கருதப்படும் இந்த மணப்பாறை மாரியம்மன் காவிரியின் தெற்கு கரையிலும் சமயபுரம் வடகரையிலும் அமைந்திருப்பது மிகச் சிறப்பாகும்.

இங்கு தமிழ் வருடப்பிறப்பன்று திருவிளக்கு பூஜையும் சித்திரை 2ம் தேதி பால்குடமும் எடுக்கப்படுகிறது.

வேப்பமரத்தடியில் புனிதக்கல் கிடைத்ததால் வேப்பிலை மாரியம்மன் என்ற பெயர் சூட்டப்பட்டது. வேப்பிலை மணக்க பாறையில் பிறந்தவள் என்பதால் ஊரின் பெயர் மணப்பாறை ஆகிவிட்டது. 

கோயில் அமைப்பு:

இக்கோயிலில் மாரியம்மன் சன்னதியும், விநாயகர், நவகிரகங்கள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

Share this:

Write a Reply or Comment

sixteen − seven =