பொன்னர் சங்கர் கோவில்:
✩ திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெரியக்காண்டியம்மன் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் தலம்தான் வீரப்பூர். இங்கு பெரியக்காண்டியம்மன் கோவிலுக்கு அருகில் அண்ணமார் சுவாமிகள் எனப்படும் பொன்னர் சங்கர் கோவில் உள்ளது.
அதற்கு அருகில் காவல் தெய்வமாய், பிரமாண்டமான உயரத்தில் மிரட்டும் விழிகளுடன் இருக்கும் மந்திரம் காத்த மகாமுனி சிலை, காளை மாட்டுடன் கூடிய சாம்புவன் சிலை ஆகியன உள்ளது.
அருகே வீரமலை மீது பெரியக்காண்டியம்மன் தவம் செய்த இடமென கூறப்படும் தவசு கம்பம் உள்ளது. வீரமலையின் ஒரு பகுதியில் கூவனாம்பள்ளம், வீரப்போர் நடந்த இடமாக கருதப்படும் படுகளம் காட்டு கோவில், அண்ணமார் சுவாமி கதையில் வெள்ளாங்குளம் என்று கூறப்படும்.
இனாம்குளத்தூர், வளநாட்டை ஆண்ட பொன்னர் சங்கர் கோட்டை கோவில், கன்னிமார் அம்மன் கோவில், கரூர் மாவட்டம் மாயனூர் அருகே உள்ள மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவில் என பொன்னர் சங்கரை மையமாக கொண்ட கோவில்கள் மற்றும் முக்கிய இடங்கள் என ஏராளம் உள்ளன.
அண்ணமார் சுவாமி கதை சுருக்கம் :
✩ கொங்கு நாட்டின் கீழ் பகுதியில் சுமார் 15 ஆம் நூற்றாண்டு காலத்தில் நடந்ததாக சொல்லப்படும் கதை, கொங்கு நாட்டில் நிலவும் பண்பாட்டைக் காட்டும் வாய்மொழி இலக்கியமாகும். பொன்னர் சங்கரின் தாத்தா, பொன்னி வளநாடு மற்றும் நெல்லி வளநாடு ஆண்ட குறுநில மன்னர்.
குறுநில மன்னரான இவர் மதுக்கரை செல்லாண்டியம்மனுக்கு கோவில் கட்டி குடமுழுக்குச் செய்தார். இவருக்கு குன்றுடையான் என்னும் மகன் இருந்தார். அதன்பிறகு குன்றுடையானின் கோலாட்சி வரும்போது பங்காளிகள் வில்லத்தனம் செய்கின்றனர்.
அத்தை மகள் தாமரையை அவள் விருப்பத்தோடு கல்யாணம் செய்கிறான், குன்றுடையான். குன்றுடையான் – தாமரை அரியநாச்சி தம்பதிக்கு பொன்னர், சங்கர், தங்கை அருக்காணி பிறக்கிறார்கள். பொன்னர் சங்கர் வாலிபர்களானதும் பங்காளிகளைப் பழிவாங்குகிறார்கள்.
பயந்த எதிரிகள் தலையூர்க்காளி துணைகொண்டு இடைஞ்சல் செய்கிறார்கள். பெற்றோர் மறைவுக்குப்பின், தங்கை மனம் கோணாது வளர்க்கிறார்கள். சூழ்ச்சிகள் மற்றும் சதிகளால் போரில் கடவுள் மாயவர் தலையூர்க்காளி வடிவெடுத்து அம்பு விட்டு சங்கரை கொல்கிறார்.
இதை அறிந்து அங்கு வந்த பொன்னர், சங்கரின் மரணம் கண்டு தானும் தற்கொலை செய்கிறார். அழுதுகொண்டே வந்த தங்கை அருக்காணியும் மாய்கிறாள். இந்த கதையில் போர் நடைபெற்ற இடம்தான் வீரப்பூர் ஆகும்.
திருவிழா :
வருடந்தோறும் மாசி மாதம் நடைபெறும் திருவிழாவை காண கண்கோடி வேண்டும். பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழாவிற்கு வரும் பெரும்பான்மையான மக்கள் இப்பகுதிகளிலேயே தங்கியிருந்து திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள்.
வீரப்பூர் கோவிலில் மாசி திருவிழா சிவராத்திரிக்கு அடுத்த நாள் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். இதை தொடர்ந்து காப்பு கட்டுதல், படுகளம், வேடபரி, தேரோட்டம் என கோலாகலமாக நடைபெறுகிறது.
கொங்கு மண்டலப் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நெல்லி வளநாட்டில் கூடிவருவார்கள். முதல் நாள் வீரப்பூரில் பெரியக்காண்டியம்மன், பொன்னர் சங்கர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வேடபரி திருவிழா எட்டாம் நாள் நடைபெறுகிறது. குதிரை வாகனத்தில் அமர்ந்து பொன்னர் முன்னே செல்கிறார். பெரியக்காண்டியம்மன் யானை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். பொன்னர் சங்கரின் தங்கை அருக்காணி தங்காயி கையில் தீர்த்தக் குடத்துடன் வேடபரி நிகழ்வில் வலம் வருகிறாள். இதனை தொடர்ந்து வேடபரி நடைபெறுகிறது. வேடபரி திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகிறார்கள்.
Share this: