July 13 2018 0Comment

பொன்னர் சங்கர்:

பொன்னர் சங்கர்:

அண்ணன்மார் சுவாமிகளின் ஆலயங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது வீரப்பூர் திருத்தலம்.

இவ்வழிபாட்டுக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவது பொன்னர்-சங்கர் சகோதரர்களின் வரலாறும், அவ்வரலாற்றோடு இணைந்த மக்களின் பாரம்பரியத் தொடர்பும் தான் காரணமாக அமைகிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பெரியக்காண்டியம்மன் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் தலம்தான் வீரப்பூர். இங்கு பெரியக்காண்டியம்மன் கோயிலுக்கு அருகில் அண்ணன்மார் சுவாமிகள் எனப்படும் பொன்னர்- சங்கர் கோவில் உள்ளது. அருகில் “நான் உங்களுடனேயே இருக்கிறேன்; பிறகு என்ன கவலை? உங்களுக்கு பயம் எதற்கு?” என்று கூறி அருள்பாலிக்கும் காவல் தெய்வமாய், பிரமாண்டமான உயரத்தில் அமைந்து மிரட்டும் விழிகளுடன் விளங்கும் மந்திரம் காத்த மகாமுனி சிலை, காளை மாட்டுடன் இணைந்து நிற்கும் சாம்புவன் சிலை ஆகியன உள்ளன. அருகே வீரமலை மீது பெரியக்காண்டியம்மன் தவம் செய்த இடமெனக் கூறப்படும் தவசு கம்பம் உள்ளது.

வீரமலையின் ஒரு பகுதியில் கூவனாம் பள்ளம், வீரப்போர் நடந்த இடமாகக் கருதப்படும் படுகளம் கோவில், அண்ணன்மார் சுவாமி கதையில் வெள்ளாங்குளம் என்று கூறப்படும் இனாம்குளத்தூர், வளநாடு அண்ணன்மார் கோட்டை கோவில், கன்னிமார் அம்மன் கோவில், கரூர் மாவட்டம் மாயனூர் அருகே உள்ள செல்லாண்டியம்மன் கோவில் என வீரப்பூரை, பொன்னர்- சங்கரை மையமாகக் கொண்ட கோவில்கள், முக்கிய இடங்கள் எனக் குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஏராளம் உள்ளன.

முன்பெல்லாம் (சுமார் 30 – 40 ஆண்டுகளுக்கு முன்) கட்டுச்சோறு கட்டி எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டு இரண்டு அல்லது மூன்று நாள் பயணமாக வீரப்பூர் செல்வார்களாம். தங்களின் ஊரில் இருந்து வீரப்பூரின் அடையாளமாக விளங்கும் ஏதேனும் ஒரு கோவிலில் இருந்து புறப்பட்டு வீரப்பூரை மையமாகக் கொண்ட அத்தனை கோவில்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்வது வழக்கமாக இருந்தது. அப்போது பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர்ப் பந்தல் (நீர்மோரும் கிடைக்கும்) அமைத்து தரும காரியம் செய்து வந்தனர்.

அங்குள்ள பெரிய கோவிலில் (வீரப்பூரில் பெரியக்காண்டியம்மன் கோவிலை அங்கு இவ்வாறு சொல்வார்கள்) குழந்தைகளுக்கு முடியிறக்கி, பொங்கல் வைத்து, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவதாக மாறிவிட்டது. புறப்பட்டு வரும் வழியில் கூடுதலாக படுகளம் கோவிலில் சுவாமி கும்பிட்டு விட்டு வருவதோடு முடிந்து விடுகிறது. ஆனால், மாசி மாதத் திருவிழாவின்போது வீட்டுக்கு ஒருவரேனும் சென்று நெய்விளக்குப் போட்டுவிட்டு வருவது வழக்கத்தில் உள்ளது.

அண்ணன்மார் சாமி கதை நடந்த இடமாக கருதப்படும் வீரப்பூரில் வருடம் தோறும் மாசி மாதம் நடைபெறும் திருவிழாவைக் காணக் கண்கோடி வேண்டும். பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழாவிற்கு வரும் பெரும்பான்மையான மக்கள் அந்த பத்து நாட்களும் இப்பகுதிகளிலேயே தங்கியிருந்து திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். இலட்சக்கணக்கில் கூடும் மக்கள் கூட்டத்தால் இப்பகுதியே திமிலோகப்படுகிறது.

வீரப்பூர் கோவிலில் மாசித் திருவிழா சிவராத்திரிக்கு அடுத்த நாள் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். இதைத் தொடர்ந்து காப்பு கட்டுதல், படுகளம், வேடபரி, தேரோட்டம் என கோலாகலமாக நடைபெறுகிறது. கொங்கு மண்டலப் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நெல்லி வளநாட்டில் கூடிவருவார்கள். முதல் நாள் வீரப்பூரில் பெரியக்காண்டியம்மன், பொன்னர் – சங்கர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. 

பொன்னர் – சங்கர் கோட்டை எழுப்பி ஆட்சி புரிந்த நெல்லி வளநாட்டில் திருவிழா நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. வேட்டுவர் படைகளை வீழ்த்துவதற்காக பொன்னர் – சங்கர் படுகளம் சாய்ந்த நிகழ்வைப் போற்றும் படுகளத் திருவிழா தொப்பம்பட்டியில் நடைபெறுகிறது.  தொப்பம்பட்டியில் படுகளம் சாய்ந்தவர்களை பொன்னர் – சங்கர் உடன்பிறந்த தங்கை அருக்கானித் தங்காள் புனித நீர் ஊற்றி உயிர்த்து எழுப்பும் நிகழ்வுடன் இந்தத் திருவிழா தொடங்குகிறது.  

திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வேடபரி திருவிழா எட்டாம் நாள் நடைபெறுகிறது. மாலை 4.30 மணியளவில் குதிரை வாகனத்தில் அமர்ந்து பொன்னர் முன்னே செல்கிறார். பெரியக்காண்டியம்மன் யானை வாகனத்தில்  எழுந்தருளி அருள்பாலிக்கிறார். பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் குதிரை மற்றும் யானை வாகனங்களைச் சுமந்து வருகிறார்கள். பொன்னர் – சங்கரின் தங்கை அருக்காணித் தங்காள் கையில் தீர்த்தக் குடத்துடன் வேடபரி நிகழ்வில் வலம் வருகிறாள்.

மாலை 5.30 மணியளவில் வீரப்பூருக்கும்-அணியாப்பூருக்கும் இடையே உள்ள இளைப்பாற்றி மண்டபத்தில் பெரியக்காண்டியம்மனும், அருக்காணித் தங்காளும் ஓய்வெடுக்க, குதிரை வாகனத்தில் அமர்ந்து அணியாப்பூர் செல்லும் பொன்னர் மாலை 6.30 மணியளவில் அம்பு போட்டு இளைப்பாற்றி மண்டபம் திரும்பவதுடன் வேடபரி திருவிழா நிறைவு பெறுகிறது. வேடபரித் திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து, தேரோட்ட திருவிழா ஒன்பதாம் நாள் நடைபெறுகிறது. அன்றைய தினம் கோவில் முன்பு உள்ள பெரிய தேரில் பெரியக்காண்டியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். தொடர்ந்து, பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கும் தேரோட்டம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுகிறது. பத்தாம் நாள்  மஞ்சள் நீராட்டுடன் இந்தத் திருவிழா நிறைவு பெறுகிறது.

குல தெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபடுபவர்கள்தான் மாசித் திருவிழாவிற்கு போய்வர வேண்டுமென்பதில்லை. நீங்கள்கூட வீரப்பூர் திருவிழாவிற்கு ஒருமுறை நீங்கள் போய் வந்தால் பின்னர் தொடர்ந்து வருடாவருடம் போய் வருவீர்கள். 

வரவழைத்த பெரிய கண்டியம்மனுக்கு நன்றிகள் பல கோடி……..

என்றும் அன்புடன்

முனைவர் ஆண்டாள் பி சொக்கலிங்கம்

 

 

 

Share this:

Write a Reply or Comment

two × 3 =