பாசுரம் 3:
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!!
விளக்கம்:
நாராயணனே பரம்பொருள் என்றும் அவனால் தான் நாம் வேண்டுவன அனைத்தையும் அளிக்க முடியும் என்று முதல் பாடலில் குறிப்பிட்ட ஆண்டாள், அவன் பாற்கடலில் உறைகின்றான் என்று நமக்கு அந்த பரம்பொருளை இரண்டாவது பாடலில் அடையாளம் காட்டுகின்றார்.
அவன் தனது யோக நித்திரையிலிருந்து எழுந்து, எவ்வாறு உயிர்களுக்கு உதவி செய்கின்றான் என்பதை, இந்த பாடலில், மூன்றாவது பாடலில் குறிப்பிடுகின்றார். அவன் திரிவிக்ரமனாக உருவெடுத்து, மூன்று உலகங்களையும் மகாபலியின் பிடியிலிருந்து விடுவித்தான் என்ற செய்தி இந்த பாடலில் கூறப்படுகின்றது.
வாமனனாக வந்து மூன்றடி மண் கேட்ட, திருமால் நெடியவனாக வளர்ந்து உலகினை அளந்தது, தேவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினால் தானே தவிர, தனது நலத்திற்காக எதுவும் செய்ய வில்லை என்பதால், உத்தமன் என்று இங்கே ஆண்டாள் கூறுவது உணரத் தக்கது.
பாவை நோன்பு நோற்பதால், நாடு எவ்வாறு நலமடையும் என்றும், பசுக்களும் பால் அதிகமாகப் பொழிந்து நமது செல்வங்கள் பெருகும் என்று உணர்த்தி, கன்னிப் பெண்கள் மட்டுமல்ல அனைவரும் நோற்க வேண்டிய நோன்பு மார்கழி நோன்பு என்று இங்கே உணர்த்தப்படுகின்றது.
சாற்றுதல் = உணர்த்துதல்; தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல் தங்களிடம் உள்ள பால் அனைத்தையும் அளிக்கும் பசுக்களை வள்ளல் என்று கூறும் நயத்தை நாம் உணரலாம்.
நாம் நீராடும்போதும் கண்ணனின் திருநாமத்தை சொல்லியவாறு நீராட வேண்டும் என்று சொல்வதன் மூலம், நாம் எந்த செயல் செய்தாலும் இறைவனின் திருநாமங்களை சொல்லியவாறு செய்யவேண்டும் என்று ஆண்டாள் பிராட்டியார் இந்த பாடலில் உணர்த்துகின்றார்.
பொருள்:
மகாபலியிடம் மூன்றடி மண்ணினை தானமாகப் பெற்ற பின்னர், நெடிய உருவம் எடுத்துத் தனது ஈரடியால் மூன்று உலகங்களையும் அளந்த உத்தமனாகிய திருமாலின் பெயர்களைப் பாடியவாறு நாங்கள், பாவை நோன்பினைத் தொடங்குகின்றோம் என்று பாவைத் தெய்வத்திற்கு உணர்த்தி நீராடுவோம்.
இவ்வாறு நாங்கள் பரமனின் திருநாமங்களைச் சொல்வதால், நாட்டில் அதிகமான மழையால் தீங்கு ஏதும் விளையாதவாறு, மாதம் மூன்று முறை, தேவையான அளவுக்கு மழை பொழிகின்றது.
இவ்வாறு பெய்யும் மழையினால், உயர்ந்து வளரும் செந்நெல் பயிர்களின் நடுவில் கயல் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. மேலும் தேன் நிறைந்து காணப்படும் குவளை மலர்களில் தேனை உண்ட மயக்கத்தில் வண்டுகள் களிப்புடன் தூங்குகின்றன.
இந்த சூழ்நிலையில் வளர்ந்த வளமான பசுக்கள், தங்கள் உடலினில் பாலினைத் தேக்கிக் கொள்ளாமல், பசுக்களின் பால் காம்புகளைப் பற்றி இழுக்கும் மாந்தர்கள் வைத்துள்ள குடங்கள் நிறையும் அளவுக்கு, வள்ளல் தன்மையுடன் பாலைப் பொழிகின்றன.
இவ்வாறு எங்களை விட்டு செல்வம் என்றும் நீங்காத அளவு உள்ள நிலை, நாங்கள் பரமனின் திருநாமங்களைச் சொல்வதால் ஏற்படுகின்றது.