September 15 2018 0Comment

பாசுபதேஸ்வரர் திருக்கோவில்: 

பாசுபதேஸ்வரர் திருக்கோவில்:

சாஸ்திரப்படி கோவில் எப்படி அமைக்க வேண்டும் என்று உள்ளதோ அதன்படி அமைக்கப்பட்ட கோவில் இதுவாகும். பல்லவ அரசர்களால் செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோவில் 1914ல் கானாடுகாத்தான் பெத்த பெருமாள் செட்டியாரால் கருங்கற்களால் செப்பனிடப்பட்ட பாசுபதேஸ்வரர் கோவில் கடலூர் மாவட்டம் திருவேட்களம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும்.

மூலவர் : பாசுபதேஸ்வரர்.

தாயார் : சத்குணாம்பாள் நல்லநாயகி.

தல விருட்சம் : மூங்கில்.

தீர்த்தம் : கிருபா தீர்த்தம்.

ஆகமம் : காமிய ஆகமம்.

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்.

புராண பெயர்ஃஊர் : திருவேட்களம்.

தல வரலாறு :

பாரதப்போரில் வெற்றிபெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்புகிறான். அப்போது கிருஷ்ணன் நீ அனைத்து அஸ்திரங்களையும் உனது மானசீக தந்தையான இந்திரனிடமிருந்து பெற்றாய். ஆனால் பாசுபதாஸ்திரத்தை மட்டும் நீ சிவனிடமிருந்து தான் பெற வேண்டும். அதற்கு இந்திரனின் அனுமதி பெற வேண்டும் என்றார்.

இதற்காக அர்ஜுனன் மூங்கில் காடாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தான். அர்ஜுனனின் தவத்தை கலைக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். உடனே சிவன் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து பன்றியை கொன்றார்.

அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பு எய்தான். பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும் அர்ஜுனனுக்கும் சொற்போரும் விற்போரும் நடந்தது. போரில் அர்ஜுனனின் வில் முறிந்தது.

கோபமடைந்த அர்ஜுனன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி மூவுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. வேடுவப்பெண்ணாக வந்த பார்வதி கோபமடைந்தாள். சிவன் பார்வதியிடம் உமையவளே! நீ லோகமாதா! நீ கோபப்பட்டால் இவ்வுலகம் தாங்காது என சமாதானப்படுத்தி ‘சற்குணா” (நல்லநாயகி) தள்ளி நில் என்கிறார்.

சிவன் தன் திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். சிவனின் பாத தீட்சை பெற்று அன்னையின் கருணையால் இத்தல கிருபாகடாட்ச தீர்த்தத்தில் விழுகிறான். சிவன் பார்வதியுடன் காட்சி கொடுத்து பாசுபதாஸ்திரத்தை தந்தருளினார். அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம்.

தலபெருமை :

அர்ஜுனன் தவம் செய்து பாசுபதம் பெற்ற முதன்மைத் தலமாகக் கருதப்படுவது திருவேட்களம். இரண்டாயிரம் ஆண்டு பழமையான இங்கு தான் அர்ஜுனனுக்கு இறைவன் பாசுபதம் வழங்கினார்.

அம்மன் நல்லநாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு கைகளில் ஒரு கையில் தாமரையும் ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள்.

இத்தலத்தில் முருகப்பெருமான் பன்னிரு திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் மயில் மீது கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

ஒரு முறை சம்பந்தர் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க வருகிறார். அப்போது அவர் திருவேட்களத்தில் தங்கி சிதம்பரம் நடராஜரை தரிசித்துள்ளார்.

தட்சிணாமூர்த்தியின் காலடியில் உள்ள முயலகன் இடப்பக்கம் தலைவைத்துள்ளார். சூரியனும் சந்திரனும் அருகருகே இருப்பதால் சூரிய, சந்திர கிரகணங்களின் போது இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

Share this:

Write a Reply or Comment

fourteen − 7 =