July 13 2018 0Comment

பழனியப்பர் திருக்கோவில்: 

பழனியப்பர் திருக்கோவில்: 

மூலவர் பழனியாண்டவர் தனியாக வேடன் ரூபத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

மூலவரை நேருக்கு நேராக நின்று வணங்கினால் வேடனைப் போலவும் வலதுபுறம் நின்று வணங்கினால்

ஆண் வடிவமாகவும் இடதுபுறமாக நின்று வணங்கினால் பெண் வடிவமாகவும் காட்சி தரும் சிறப்புகளை கொண்ட பழனியப்பர் திருக்கோவில் நாமக்கல் மாவட்டம் #பேளுக்குறிச்சியில் அமைந்துள்ளது.

மூலவர் : பழனியாண்டவர்.

தீர்த்தம் : யானைப்பாழி தீர்த்தம்.

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்.

ஊர் : பேளுக்குறிச்சி.

மாவட்டம் : நாமக்கல்.

தல வரலாறு :

படைப்புக்குரிய மூலமான ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்குரிய பொருளை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரிடம் முருகப்பெருமான் கேட்டார்.

மூவராலும் சரியாக பதில் கூறமுடியவில்லை. இதனால் மூவரையும் தன்கட்டுப்பாட்டுக்குள் அடக்கிய முருகன், பிரம்ம சாஸ்தா என்னும் பெயருடன் பூலோகம் வந்தார்.

கொல்லிமலை அடிவாரத்திலுள்ள #கூவைமலை என்னும் குன்றில் தங்கினார். கூவை என்றால் பருந்து. கொல்லிமலையின் மேலிருந்து கூவை மலையைப் பார்த்தால் கழுகு சிறகை விரித்திருப்பது போன்ற தோற்றம் இருக்கும். எனவே இப்பெயர் ஏற்பட்டது.

படைத்தல், காத்தல்,அழித்தல் ஆகிய மும்மூர்த்திகளுக்குரிய தொழில்களையும் முருகப் பெருமான் தன்வசம் எடுத்துக் கொண்டார்.

பிறவியைத் தருவதற்கும் முடிப்பதற்கும் உரிய சகல அதிகாரமும் இவரிடம் உள்ளது.

தல பெருமை :

சேர மன்னான வல்வில் ஓரி ஆட்சிக்குட்பட்ட சேந்தமங்கலம், அறப்பள்ளி, சிங்களாந்தபுரம், ராசிபுரம், கல்குறிச்சி ஆகிய இடங்களில் சிவாலயமும் பேளுக்குறிச்சியில் முருகன் கோவிலும் கட்டினான்.

முருகப்பெருமான், சிவன்-பார்வதி அம்சமாக இருப்பதால் சிவனை குறிக்கும் வகையில் இங்குள்ள மூலவர் பழனியாண்டவர் மூன்று பட்டை வடிவில் நெற்றியில் திருநீறும் தியை குறிக்கும் வகையில் நெற்றியில் பொட்டும் காணப்படுகிறது.

அருணகிரிநாதரால் பாடல் பெற்றதும் அகத்தியர் பூஜித்த பெருமை பெற்றதுமான இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது.

முருகனின் கையில் சேவல் :

பத்மாசுரன் முருகனால் வதம் செய்யப்பட்டதும் அவனை முருகன் சேவலாகவும் மயிலாகவும் மாற்றினார். இந்தச் சேவலை தனது கையில் வைத்திருக்கிறார்.

மற்ற முருகன் கோவில்களில் சேவல் சின்னம் கொடியில் இருக்கும். இங்கே சேவலை முருகன் கையிலேயே அடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தீர்த்தம் :

மலையடிவாரத்தில் பாறைகளுக்கு இடையே யானை வடிவிலான வற்றாத சுனை காணப்படுகிறது. இதை யானைப்பாழி தீர்த்தம் என்கின்றனர். இதில் நீராடுவதால் தோல் மற்றும் எலும்பு நோய்கள் தீர்வதாக நம்பிக்கை.

இடும்பன் சன்னதி : 

அகத்தியரின் உத்தரவுப்படி சிவகிரி திகிரி என்னும் மலைகளை இமயமலையில் இருந்து ஒரு தண்டத்தின் இருபுறமும் கட்டி தூக்கி வந்தவன் இடும்பன் என்னும் அசுரன். பார்ப்பதற்கு இது காவடி போல இருக்கும். முருகப்பெருமான் அவனைத் தடுத்து அந்த மலைகளைத் தனதாக்கிக் கொண்டார்.

காலணி அணிந்தவர் : 

முருகப்பெருமான் வேடன் ரூபத்தில் எழுந்தருளியுள்ளார். தலையில் கொண்டையும், வேங்கை மலர் கிரீடமும், கொன்றை மலரும் சூடியுள்ளார். ருத்ராட்ச மாலை அணிந்துள்ளார்.

காலில் காலணியும் வீரதண்டையும் அணிந்துள்ளார். இடது கையில் வேலும் இடுப்பில் கத்தியும் வலது கையில் ஆயுதம் எனப்படும் வஜ்ரவேலும் தாங்கியுள்ளார்.

Share this:

Write a Reply or Comment

15 + 6 =