பயணங்கள் முடிவதில்லை….
நெல்லை சீமை பயணம்
என்றாலே ஒரு ஏத்தம் தான்…
யார் முகத்திலும் பரபரப்பு இருக்காது.
அதை அதன் போக்கில் வாழும் மனிதர்கள்
அரசியல்வாதிகள் இன்னும் நம்மை காப்பாற்றவே
உள்ளார்கள் என்கின்ற அசாத்திய நம்பிக்கை கொண்டவர்கள்
கவுண்டமணியின் காமெடியை இன்னும்
சிலாகித்து பேசுபவர்கள்
தினமும் விபத்தை வித்தியாசமாக விவரிப்பவர்கள்
வெட்டு குத்து என்று பேச்சுக்காவது பேசி
வீரமாக வாழ்பவர்கள்
பணம் செலவு செய்ய தயங்குபவர்கள்
ரசனைவாதிகள்
பாசக்கார பய புள்ளைகள்
அதிலும் ஆச்சிமார்கள் தங்கள் வீட்டு
வாரிசுகளை பஞ்சு மெத்தை விரிப்பில்
உள் பொதிந்து எடுத்து
செல்லும் அழகை வேறு எங்கும் பார்க்கவே முடியாது
அப்படி தூக்கி செல்லும் பாங்கிற்கே
மீண்டும் ஒருமுறை பொறக்கணும்/
பொறந்தே ஆகணும் இந்த மண்ணிலே
ஏனோ இந்த மண்ணை மிதிக்கும் போதெல்லாம்
வயல் வாசனை காத்து மூக்கை தொடும் போதேல்லாம் எல்லாத்தையும் அப்படியே
விட்டு விட்டு இங்கேயே இருந்துடணும்
என எண்ணம் அதிகம் ஆகி கொண்டே இருக்கின்றது.
கீழப்பாவூர் நரசிம்மனை பார்க்க ஆசைப்பட்டு
நெல்லை வந்த நான் மக்களை ரசிக்க
முன் பதிவு இல்லா இரண்டாம் வகுப்பு பெட்டியில் அமர்ந்து ரயில் பயணம்
இன்னும் என் மண் துண்டு போட்டு
இடம் பிடிக்கின்றது என்பதை பார்த்தவுடனே
பேரானந்தம்….
இடம் பிடிக்க குட்டி செல்ல சண்டை
வயசான ஆச்சி அவள் தூக்கு சட்டியில்
கை விட்டு எதையோ பிசைந்து
எதையோ அவள் வாயில் போடும் முன்
கொஞ்சம் சாப்பிடறியா அய்யா
என வாஞ்சையுடன் என்னிடம் கேட்டபோது
பஞ்சம் பிழைக்க போன என் சென்னையில்
வாசல் மூடி விட்டு சாப்பிடற
ஞாபகம் வந்து நெஞ்சு கொஞ்சம் பாரமாகி போனது
யாருண்ணே தெரியாது
யாரையோ திட்டி கொண்டே அமர்ந்தவர்
உடனே தில்லான அடுத்த கேள்வி என்னிடம்
சென்னையா
ஆம்
சார் அடுத்து யார் ஜெயிப்பா
யார் ஜெயிச்சாலும் நீங்க இதே வண்டியில் தான்
நிரந்தர பயணம்
எவன் ஜெயிச்சா நமக்கென்ன
– நம்ம பதிலை கேட்டு நம்மாளு சிரிச்சத
ஊரே ரசிச்சது
பொது இடத்தில அரசியல் பேச்சு தவிர்க்க
பக்கத்தில் இருந்த பயபுள்ளைகிட்ட பேச்சு
கொடுத்தேன்
ஏல எந்த ஊரு
கல்லிடை
படிப்பு
ஒம்பது
ஸ்கூல்
அம்பை தீர்த்தபதி
எங்க போற
குளிக்க குற்றாலம்
லீவா
இல்லை ஸ்கூல் உண்டு
போலியா
இல்லை
ஏன்
தண்ணி வரும்போது தானே குளிக்க முடியும்
கடைசி பால்ல ஒரு சிக்ஸர் அடிச்சு இந்தியா ஜெயிச்சத பார்த்த ஒரு பீல்
அப்ப படிப்பு
எப்படி இருந்தாலும் அது பிரயோஜனப்படாது
ஏன்
நான் எலெக்ட்ரிசியன் ஆகணும்னு முடிவு எடுத்துட்டேன் அதுக்கு ஒம்பது போதும்
நல்ல நாள் பாத்து தொழிலுக்கு போக வேண்டியது தான்
மிரட்டித் தள்ளிவிட்டான்
எவ்வளவு தீர்க்க தரிசனம்
எவ்வளவு பெரிய சிந்தனை
இந்த வயதிலேயே சில குறிக்கோள்களை வகுத்து
தனக்கான வாழ்க்கையை வாழ முற்பட்டுள்ள வாழ்க்கையை வாழ தெரிந்த மாமேதையாகவே அவனை பார்த்தேன்
நொடிக்கு வாழும் இவனின் பெயர் அரவிந்தன்
எருமை மாடு வயதாகியும்
போக்கு தெரியாமல் வாழ்ந்த
என்னையே என்னிடம்
தொலைந்து போக வைத்து விட்டான்
இந்த கல்லிடை கௌதம புத்தன்.
வற்புறுத்தி ஒரு சமோசா வாங்கி
கொடுத்துவிட்டு
பாவூர்சத்திரம் இறங்கி
நரசிம்மனை பார்க்க பயணித்தேன்
விட்டதை பிடிக்க
பயணம் புலப்பட
பாதை புரிய
பாதையை காட்ட
நரசிம்மன் இருப்பான் கூடவே
என்று இருந்தவனுக்கு
அவனை பார்ப்பதற்கு முன்னேயே
காட்டிவிட்டான்
கோடிட்டு காட்டிவிட்டான்
கோடிட்டு காட்டிவிட்டு சென்றும் விட்டான்
அனுபவம் தான் வாழ்க்கை
அது கிடைக்க பயணமே
இலக்காக இருக்க வேண்டும் என்று இந்த
பயணம் மூலம்
சாகறதுக்குள்ள வாழனும்
அதற்காகவாது
பயணங்கள் தொடரும் / தொடர வேண்டும்.
வாழ்க வளமுடன்
Dr. ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this: