February 04 2018 0Comment

பத்துமலைக் குகை முருகன் கோயில்:

பத்துமலைக் குகை முருகன் கோயில்:
வேல் தாங்கிய கரமும், புன்னகை பொழியும் விழிகளும் கொண்டு 147 அடி உயரத்துடன் கம்பீரமாகக் காட்சிதரும் இந்த முருகன் சிலைதான் உலகின் மிகப்பெரிய முருகன் சிலை
மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் (இந்துக்கள்) மட்டுமின்றி சீனர்களும் வந்து வழிபடக்கூடிய கோயில்களில் ஒன்று பத்துமலைக் குகை முருகன் கோயில்.
இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்குள்ள முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.
 வரலாறு:
மலேசியாவின் பத்துமலையிலுள்ள சிறிய குகையில் வேல்மாதிரி உருவம் கற்பாறையில் தெரிவதைக் கண்ட ஒரு தமிழ்ப்பக்தர் ஒரு மூங்கிலை நிறுவி அதை வேலாகக் கருதி வழிபட்டு வந்தார்.
பிறகு உலோகத்திலான வேல் நிறுவப்பட்டு முருகப் பெருமானுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது என்கிறார்கள்.இந்த பத்துமலையில் இரு குகைகள் உள்ளது. ஒன்று மிக ஆழமாகச் செல்வது, மிகவும் இருண்டது. மற்றொரு குகையில்தான் முருகன் கோயில் கொண்டிருக்கிறார்.
இந்த பத்துமலைக் குகை முருகன் கோயில் 1891ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டிருக்கிறது.
அப்போது இந்த முருகனைத் தரிசிக்க கரடுமுரடான பாதையில் செல்ல வேண்டியிருந்தது. அதன் பின்பு 1938 ஆம் ஆண்டில் இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல 272 படிக்கட்டுகளைக் கொண்ட மூன்று நடைபாதைகள் அமைக்கப்பட்டது.
இது தவிர தனியே இரயில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழிகளைப் பயன்படுத்தி தரையிலிருந்து 400 அடி உயரத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சுப்பிரமணிய சுவாமியான முருகப் பெருமானைத் தரிசித்து வரலாம்.
தற்போது இந்தக் கோயிலுக்குச் செல்லும் பாதைகளுக்கு முன்பாக, அதாவது நுழைவு வாயிலின் அருகில் தங்கம் போல் தகதகவென மின்னும்படியாக வர்ணம் பூசப்பட்ட மிகப் பெரிய முருகன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய வேலை வலது கையில் தாங்கி நிற்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையின் உயரம் 42.7 மீட்டர், அதாவது 140.09 அடி.
இந்த சிலை அமைக்க 2003 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட பணி 2006 ஆம் ஆண்டில்தான் நிறைவு பெற்றது. இந்த சிலை அமைக்க 2006 ஆம் ஆண்டில் இந்திய மதிப்பில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது.
இந்த சிலை அமைப்பிற்கான கட்டுமானப் பொருட்கள் அதிகமாக பக்கத்து நாடான தாய்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கிறது.
உலகின் மிகப்பெரிய முருகன் சிலையாக அமைக்கப்பட்ட பின்பு இந்த பத்துமலைக் குகை முருகன் கோயிலுக்கு வருபவர்கள் எண்ணிக்கையுடன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.
சிறப்பு விழா:
இங்கு வருடந்தோறும் தை மாதம் வரும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தைப்பூச விழாவில் இந்துக்கள் தவிர சீனர்கள் மற்றும் வேறு சிலரும் இங்குள்ள புனித ஆற்றில் நீராடிவிட்டு, முருகன் கோயில்களில் நேர்த்திக் கடன்களாகச் செய்யப்படும் அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற பலவிதமான நேர்த்திக் கடன்கள் இங்கும் இருக்கிறது.
ஆனால் இங்கு தமிழர்களைத் தவிர சீனர்கள் மற்றும் பிற மதத்தைச் சார்ந்தவர்களும் முருகனுக்கு வேண்டிக் கொள்வதும் நேர்த்திக்கடன் செலுத்துவதும் ஆச்சர்யமான ஒன்றாகும்.
Share this:

Write a Reply or Comment

14 − 9 =