December 05 2018 0Comment

பஞ்சநதீஸ்வரர் கோவில்  

பஞ்சநதீஸ்வரர் கோவில்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களில், புராதன சிறப்பு வாய்ந்த ஆலயமாக விளங்குகின்றன பஞ்சநதீஸ்வரர் கோவில் மற்றும் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் ஆகியவை.
இந்த ஆலயம் பெரம்பலூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் துறையூர் செல்லும் சாலையில் குரும்பலூர் பேரூராட்சியில் அமைந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு அரணாக பச்சைமலை உள்ளது. குரும்பலூர் பச்சை மலையினால் சூழப்பட்டு காட்சி தருகிறது.
தல #வரலாறு :
சோழ சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி ராஜேந்திர சோழன் காலத்தில், விராடராஜன் என்ற குறுநில மன்னன் இப்பகுதியை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்துள்ளான்.
அந்த சமயத்தில் 10-ம் நூற்றாண்டில் பஞ்சநதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. இதற்கான சான்றாக இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகள், விராடராஜன் தலைமையில் கோவில் நிர்மாணிக்கப்பட்டதை தெரிவிக்கின்றன.
தற்போதைய பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்த பச்சை மலையில் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, புலிகள் அதிகம் வாழ்ந்துள்ளன.
பெரும்புலிகள் காட்சி அளித்த ஊர் ‘பெரும்புலியூர்’ என்று அழைக்கப்பட்டு, அதுவே நாளடைவில் ‘பெரம்பலூர்’ என்று மருவியதாகவும் சொல்லப்படுகிறது.
இதே போலத்தான் குறும் புலிகள் வாழ்ந்த ஊர் ‘குரும்புலியூர்’ என்றும், அதுவே மருவி ‘குரும்பலூர்’ என்றும் ஆனதாக கூறப்படுகிறது.
விராடராஜ மன்னன் அன்றாட முக்கிய பணிகளை தொடங்கும் முன், திருவையாறு சென்று அங்கு அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பனை தரிசித்துவிட்டு வருவது வழக்கம்.
அந்த வகையில் மழைக்காலத்தில், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கின் காரணமாக, அந்த நாளில் #விராடராஜ மன்னனால், திருவையாறு சென்று ஐயாறப்பரை தரிசிக்க முடியவில்லை. இதனால் மன்னன் பெரும் வருத்தம் அடைந்தான்.
அன்று இரவு மன்னனின் கனவில் தோற்றிய இறைவன், தனக்கு #குறும்புலியூரிலேயே (குரும்பலூர்) கோவில் அமைக்கும்படி கூறினார். அதன்படியே குரும்பலூரில் ஈசனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது.
#வியாக்ரபாத முனிவர் என்று அழைக்கப்பட்ட புலிப்பாணி சித்தர், குறும்புலி உருவில் வாழ்ந்து வழிபட்ட தலம், குரும்பலூர் பஞ்சநதீஸ்வரர் கோவில் ஆகும். இந்தப் பகுதியில் சித்தர்கள் அதிகமாக வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 12, 13, 14 ஆகிய தினங்களில் சூரிய உதய நேரத்தில், இறைவனின் கர்ப்ப கிரகத்தில் உள்ள லிங்கத்தின் மீது #சூரிய ஒளி விழும் அதிசயம் நிகழ்கிறது. சூரிய பகவான் இத்தல இறைவனை வழிபட்டு பேறுபெற்றதாக சொல்லப்படுகிறது.
ஐந்து ஆறுகள் சூழ்ந்த பகுதியில் இருப்பவர் என்பதால் திருவையாறு தலத்தில் உள்ள இறைவனின் திருநாமம் ‘#ஐயாறப்பர்’ என்றானது.
அந்த இறைவனின் அருளாசியால் உருவான ஆலயம் என்பதால் இந்த ஆலயத்தில் உள்ள இறைவனும் அதே பொருள்படும் படியாக ‘பஞ்சநதீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.
இத்தல இறைவியின் திருநாமம் #தர்மசம்வர்த்தினி என்பதாகும். அதாவது அறம் வளர்த்த நாயகி என்பது அன்னையின் திருப்பெயர். கேட்ட வரங்களைத் தரும் கருணைத் தாயாக இந்த அன்னை காட்சியளிக்கிறாள்.
இங்கு கல்யாண விநாயகர், சோமாஸ்கந்தர், பிரதோஷ நாயகர், சூரியன், சந்திரன், 63 நாயன்மார்கள், நால்வர், பஞ்சலிங்கம், பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, 7 அடி உயர கம்பீர கணபதி, ஒரே கல்லால் செதுக்கப்பட்ட 12 கைகளுடன் கூடிய முருகப்பெருமான், விஸ்வநாதர், விசாலாட்சி, விஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர், நடராஜர் – சிவகாம சுந்தரி, பைரவர், நவக்கிரகங்கள் போன்ற திருமேனிகள் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருவையாறில் நடைபெறுவது போல பூஜை முறைகளும், சிறப்பு உற்சவங்களும் இங்கு நடைபெறுகிறது. நீள் மதில்கள் சூழ 5 நிலை ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
‘அண்டத்தில் (பேரண்டம்) உள்ளது பிண்டத்திலும் (மனித உடலில்) உள்ளது’ என்று சித்தர்கள் கூறுவார்கள். அதன்படி பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூதங்களை விளக்கும் வகையில் நீர் (திருவானைக்காவல்), நிலம் (காஞ்சீபுரம்), ஆகாயம் (சிதம்பரம்), வாயு (காளகஸ்தி), அக்னி (திருவண்ணாமலை) ஆகிய பஞ்சலிங்க சிலைகள் இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
தினமும் 4 கால பூஜை, கார்த்திகை சோம வார வழிபாடு, மார்கழி திருவெம்பாவை வழிபாடு, திருவாதிரை, ஆடி கிருத்திகை பிரதோஷம், அஷ்டமி பூஜை ஆகியவை சிறப்பாக நடைபெறுகிறது.
Share this:

Write a Reply or Comment

7 − 4 =

Open chat
1
Hello,
Can I help You?
Powered by