நெஞ்சில் ஓர் ஆலயம்

வாஸ்து - நெஞ்சில் ஓர் ஆலயம்இரக்கம், கருணை என்பதெல்லாம் இல்லவே இல்லை சாம்பு. நேற்று, ரோட்டில் நடந்து கொண்டிருந்தேன். ஒரு பெரியவர் மீது வேகமாக வந்த வண்டி இடித்து விட்டது. அவர் கீழே விழுந்து துடித்தார். நான் ஓடிப்போய் அவரைத் தூக்க முயன்றேன். தனியாக தூக்க முடியாமல், இரண்டு, மூன்று பேரை கூப்பிட்டேன். “வேறு வேலை இல்லையா? உங்க வேலையைப் பாத்துட்டு போங்க சார். நீங்க தான் கொலை பண்ணுனீங்கன்னு போலீசுகாரங்க புடிச்சிட்டு போயிடுவாங்கன்னு பொறுப்பில்லாம பேசிட்டு போயிட்டாங்க. பிறகு, ஒரு வழியா ஆம்புலன்சுக்கு பேசி அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தேன், என்றார் வாசுகியின் அப்பா.

சாம்பு அவரிடம், “”இந்த கலியுகத்திலே மனுஷங்ககிட்ட கருணையை எதிர்பார்த்தது உங்க தப்பு,” என சொல்லிவிட்டு, “”இந்தக் கதையை எல்லாரும் கேட்கட்டும். அதன் பிறகாவது திருந்துறாங்களான்னு பார்க்கலாம்,” என்று ஆரம்பித்தார்.

“”ஒரு ஏழைக்கு கடும் பசி. சாப்பிட்டு நாலு நாளாயிட்டுது. ஒரு மாந்தோப்புக்குள் வந்தான் அவன். மாம்பழங்களைப் பார்த்ததும் பசி வேகம் இன்னும் கூட, ஒரு கல்லைத் தூக்கி எறிந்தான். சில பழங்கள் பொலபொலவென உதிர்ந்தன. இவனுக்கோ கெட்ட நேரம். மேலே எறிந்த கல் நேராக, தோப்பின் இன்னொரு புறம் அமர்ந்திருந்த ராஜாவின் தலையில் போய் விழுந்தது. அவர், தன் ராணிகளுடன் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தார். நல்லவேளையாக அவர் கிரீடம் அணிந்திருந்ததால் கல் கிரீடத்தில் விழுந்தது. ராஜா அதை பெரிதுபடுத்தவில்லை. ஆனால், சுற்ற நின்ற மந்திரிகள், வேலைக்காரர்கள் ராஜாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக தோப்பு முழுக்க சுற்றி, மாம்பழத்தை சுவைத்துக் கொண்டிருந்த ஏழையைப் பிடித்து இழுத்து வந்தார்கள். ஒரு நீதிபதியின் முன் நிறுத்தி, ராஜாவின் மண்டை உடைந்திருந்தால் அவரது உயிருக்கே ஆபத்து வந்திருக்கும், இத்தகைய செயலுக்கு காரணமான இவனுக்கு மரண தண்டனை கொடுங்கள் என வாதாடினர். நீதிபதியும் “ஓகே’ சொல்லிவிட்டார்.

“”அப்புறம் என்னாச்சு’ என்று குறுக்கிட்டார் வாசுகியின் அப்பா. சாம்பு தொடர்ந்தார்.

“”மரண தண்டனை அடைந்தவனை ராஜா முன்னால் கொண்டு வந்து நிறுத்தினர். மரணதண்டனை கைதிகளை ராஜா முன் நிறுத்த வேண்டும் என்பது விதி. அவர் நடந்ததைக் கேட்டறிந்தார். பழம் பறிக்க வீசிய கல் தான் தலையில் விழுந்தது என்பது உறுதியாகி விட்டது. நீதிபதியின் தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் அவருக்கு உண்டு. “இவனை விடுதலை செய்யுங்கள். பசியால் துடித்த இவன் இப்படி அறியாமல் செய்துவிட்டான். இவனை பசியால் துடிக்க விட்டது என் ஆட்சியில் நான் செய்த குற்றம். எனவே, அரண்மனை கஜானாவில் இருந்து இவனுக்கு மாதம்தோறும் உதவித்தொகை கொடுக்க உத்தரவிடுகிறேன்,” என்று கதையை முடித்த சாம்பு,

“”பார்த்தீர்களா! பிறரால் துன்பமே அடைந்தாலும் கூட, அந்த துன்பத்துக்கு காரணம் யார் என்பதை அறியும் இரக்கமனம் படைத்தவர்கள் ஒரு காலத்தில் இருந்தார்கள்.

இப்போது, கண் முன் அநியாயம் நடந்தாலும் “எனக்கென்ன’ என்று ஓடுபவர்களைத் தான் பார்க்கிறோம். எல்லாம் கலியின் கொடுமை,” என முடித்தார்.

“”நீ சொல்றது சரி தான்,” என்ற வாசுகியின் அப்பா, “”இந்தக் கதையைப் படிப்பவர்களாவது தங்கள் மனதை மாற்றிக்கொண்டு, கஷ்டப்படுவோர் மீது இரக்கப்பட்டு உதவட்டும். தங்கள் இதயத்தை ஆலயமாக்கிக் கொள்ளட்டும்,” என்றார்.

Courtesy: Dinamalar

Share this:

1 comment

  1. sir we are also kind enouf to help others, but after that what we will face is very difficult in our life so that all are avoviding, any how it is not correct. we have to help others at any cause

    Reply

Write a Reply or Comment

2 × five =