நாயே நாயாக இரு:
எந்த நாயும் ஜாதி பார்ப்பதில்லை
எந்த நாயும் மதம் பார்ப்பதில்லை
எந்த நாயும் இனம் பார்ப்பதில்லை
ஆத்மார்த்தமான நண்பனாக எல்லா நேரங்களிலும்;
ஆபத்பாந்தவனாக தேவைப்படும் நேரங்களிலும்;
மொழி புரிந்தவர்களுடன் குழந்தையாக பல நேரங்களிலும்;
என
நாய்கள் நமக்கு
நடத்தும் பாடங்கள் ஏராளம்
நாய்களுக்கு
மேல்முகம்
உள்முகம் என்று
இரண்டு முகம் கிடையாது
நாய்கள்
நாய்களாக இருக்கும் வரை
எப்பொழுதும்
அமைதியாகவே கிடக்கின்றன
அமைதியையே விரும்புகின்றன
கடைசிவரை நாய்கள்
நாய்களாகவே வாழ
ஆசைப்படுகின்றன மனிதர்களுடன் பழகிய பிறகும்
உச்சகட்ட பசியிலும்
தனக்கான உணவை
திருடுவதில்லை
தெருநாயாக
இருந்தாலும் தெருவிற்கு பாதுகாப்பாக இருந்து
உழைத்து உண்கின்றன
தனக்கான எல்லையை
வரையறுத்து அந்த எல்லைக்கு உட்பட்டு வாழ்கின்றன
நாய்கள் எந்த காலகட்டத்திலும் எதிரியுடன்
கூட்டுச் சேர்வது இல்லை
எஜமான் சொல் மீறுவதில்லை
எஜமானை அடக்க
முற்பட்டதும் இல்லை
முற்படுவதும் இல்லை
வட்டிக்கு விடுவதும் இல்லை
வாடகைக்கு விடுவதும் இல்லை
அது அதாக கடைசிவரை வாழ்கின்றது
மனிதன் தான்
மனிதனை கடிக்கவும்
பயமுறுத்தவும்
நாய்களை மாற்ற முற்படுகின்றான்
நாயை நாயாக வாழ விடுவோம்
நன்றி மறந்த நம் புத்தியை நாய்க்கு புகுத்த வேண்டாமே
நம் நயவஞ்சகத் தனத்தை நாய்க்கு அறிவுறுத்த வேண்டாமே
நம் குறுக்கு புத்திக்கு நாயை பழக்கப்படுத்த வேண்டாமே
நாயே
நீ நீயாக இரு
மனிதனாக மாறாதே…..
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this: