திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்:
திருமயம் என்ற திருமெய்யம், பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 43 ஆம் திருப்பதியாகும்.
புதுக்கோட்டையிலிருந்து கிட்டத்தட்ட இருபது கி.மீ தொலைவில் திருமெய்யம் திருக்கோயில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயில் பல்லவர்களின் மேலாண்மைக்கு உட்பட்டு முத்தரையர்களால் நிர்மாணிக்கப்பட்ட குடைவரைக்கோவில்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட (பாடப்பட்ட) 108 திவ்ய தேசங்களில் 18 திவ்ய தேசங்கள் பாண்டிய நாட்டில் அமைந்துள்ளன. திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள் மொத்தம் 46 ஆகும். அவற்றுள் இந்தத் திருமெய்யமும் ஒன்று. இத்தலத்தில் சத்திய மூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். சைவ வைணவ ஒற்றுமைக்கு அருகருகே அமைந்த சத்திய கிரீஸ்வரர் (சிவன்) கோவிலும் ,சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலும் சாட்சி பகர்கின்றன. திருமயத்தின் விஷ்ணு கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இக்கோவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலை விட மிகவும் பழைமையானது என்றும், இது காரணமாக இதற்கு ‘ஆதி ரங்கம்’ என்றும் பெயர் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. சத்ய மகரிஷி முன் தோன்றி பெருமாள் காட்சி தந்த தலம்.
#தல வரலாறு :
பெருமாள் அரவணையில் படுத்து யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த சமயம், மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்கள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தேவியரை அபகரிக்க முயன்றனர்.
இதற்கு அஞ்சிய தேவியர் இருவரும் ஒளிந்து கொள்ளலாயினர். பெருமாளின் திருவடிக்கருகில் பூதேவியும், மார்பில் ஸ்ரீதேவியும் தஞ்சமடைந்தனர்.
பெருமாளின் நித்திரை கலைந்துவிடுமே என்ற கவலையில் அவரை எழுப்பாமல் ஆதிசேஷன் என்ற ஐந்து தலை நாகம் தன் வாய் மூலம் விஷத் தீயை கக்கினார்.
பயந்து நடுங்கிய அரக்கர்கள் ஒடி ஒளிந்தனர். கண்விழித்த பெருமாளிடம் தன் செய்கை பெருமாளுக்கு சினத்தை ஏற்படுத்திவிடுமோ என்று பயந்து அஞ்சியவாறு இருந்த ஆதிசேஷனை, பெருமாள் தான் துயில்கையில் அரக்கர்கள் செய்த வனகொடுமையினைத் தடுக்க எடுத்த வீரச்செயல்களை மெச்சிப் புகழ்ந்தார்.
#புராண வரலாறு :
திருமெய்யம் திருக்கோயிலின் பெருமை பிரம்மாண்ட புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.
சிவபெருமானே நாரதருக்கு இத்திருத்தலப் பெருமைகளைக் கூறியதாகவும், சத்திய தேவதையும் தர்மதேவதையும் கலியுகத்தில் இங்கு வந்து வழிபடுவர்களுக்கு கவலை இல்லா மனத்தையும் நீண்ட ஆயுளையும் அளிப்பதாகவும் புராண வரலாறு கூறுகிறது.
சத்தியகிரி எனும் இம்மலை சாளக்கிராம மலைக்கு ஒப்பானது என்று பிரம்மாண்டப் புராணத்தில் கூறப்படுகிறது.
#சைவ வைணவ ஒற்றுமை :
திருமெய்யம் குன்றினுடைய செங்குத்தான தெற்கு நோக்கிய சரிவில் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் அறுபதடி தூரத்தில் அடுத்தடுத்து இரு திருக்கோயில்களும் அமைந்துள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமெய்யம் திருமாலையும் , சிவபெருமானையும் ஒரே வாயிலின் வழியாகச் சென்று தரிசிக்கும் வண்ணம் இத்திருக்கோயில்கள் அமைக்கப்பட்டு சைவ வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக உள்ளன.
www.andalvastu.com
Share this: