திருப்பைஞ்ஞீலி:
திருச்சி அடுத்த திருப்பைஞ்ஞீலி என்ற இடத்தில் ஞீலிவனேஸ்வரர் கோயில் உள்ளது.
ஞீலி என்பது ஒரு வகை #கல்வாழை. பைஞ்ஞீலி என்றால் பசுமையான வாழை. பசுமையான #ஞீலி வாழையை தல விருட்சமாக பெற்றதால் திருப்பபைஞ்ஞீலி என்று இத்தலம் பெயர் பெற்றது.
இக்கோயிலில் இரு அம்மன் சன்னதிகள் இருக்கின்றன. இரண்டு அம்மன்கள் பெயரும் #விசாலாட்சி தான். பார்வதி தேவி ஒருமுறை இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள். நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணிவிடை செய்ய வந்த சப்த கன்னிகளை வாழை மரங்களாக அருகில் இருக்கக் கூறி அருள்செய்தாள். அத்தகைய பெருமை பெற்ற வாழைக்குப் பரிகாரம் செய்ய விரைவில் திருமணம் கைகூடும்.
திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் என்பது சம்பந்தர், சுந்தரர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல்பெற்ற சிவத்தலமாகும். மூலவர் ஞீலிவனேஸ்வரர் என்றும், தாயார் விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி என்றும் அழைக்கப்பெறுகிறார். இத்தலத்தில் 7 தீர்த்தங்கள் மற்றும், கல்வாழை தலவிருட்சமாக உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 61வது சிவத்தலமாகும்.
பெயர்ச்சிறப்பு :
ஞீலி என்பது மனிதர்கள் உண்ண இயலாத இறைவனுக்கு மட்டுமே படைப்பாகிற ஒரு வகைக் கல்வாழை. இதுவே இத்தல மரமாக அமைந்ததால், இது ஞீலிவனம் எனப் பெயர் பெற்றது.
நீலகண்டனார் சிதம்பரத்தில் தாம் கொண்டிருந்த ஆடலரசன் கோலத்தை வசிட்ட மாமுனிக்கு இத்தலத்திலேயே காட்டியமையால், இது மேலச் சிதம்பரம் எனலானது.
தல வரலாறு :
ஏழு கன்னிமார்களான பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் திருமண வரம் வேண்டி இவ்விடத்தில் தவம் இயற்றுகையில், பார்வதி அன்னை அவ்ர்கள் முன் தோன்றி, அவர்களுக்கு வரம் அளித்ததுடன், வாழை மர வடிவில் அத்தலத்திலேயே குடி கொண்டு என்றேன்றும் தனது காட்சியினைக் கண்டு களித்தேயிருக்கலாம் எனப் பெரும் பேறளித்தாள். பின்னர், அவ்வாழை வனத்தின் மத்தியில் சிவனாரும் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளினார்.
தென்கைலாயம் :
முன்னொருகாலத்தில் வாயுவுக்கும், ஆதிசேசனுக்கும், யார் பெரியவர் என்ற அகந்தைக் கூடியது. அதிசேசன் கைலாய மலையை சுற்றி வளைத்துக் கொண்டார். கைலாய தளர்த்த சண்ட மாருதத்தை (கடுமையான சூராவளிக் காற்று) உண்டு பண்ணினார். சண்ட மாருதம் கடுமையாக வீசியதால் கைலாயத்திலிருந்து எட்டு கொடுமுடிகள் (சிகரங்கள்) பெயர்ந்து விழுந்தன.அவை
. திருகோணமலை
. திருகாளத்தி
. திருசிராமலை
. திருஈங்கோய்மலை
. ரஜிதகிரி
. நீர்த்தகிரி
. ரத்தினகிரி
. சுவேதகிரி
என்பனவாகும். இவற்றுள் சுவேதகிரி என்பதே இத்தலமான திருப்பைஞ்ஞீலி. ஆகவே இது தென்கைலாயம் என வழங்கப்படுகிறது.
வரலாற்றுச் சிறப்பு :
இது பல்லவர் காலக் கோயிற்கட்டிட அமைப்பைக் கொண்டுள்ளது.
பைஞ்ஞீலி மகாதேவர் மற்றும் பைஞ்ஞீலி உடையார் ஆகிய பெயர்களில் இது சோழர் காலக் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.
Share this: