திருப்பாவை
பாடல் 26:
(வேண்டுவன இவை எனல்) மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.
விளக்கம் :
திருமாலே! மணிவண்ணனே! ஆலிலை மேல் பள்ளிகொள்பவனே! மார்கழி மாதம் நீராடுவதற்காக மேன்மை பொருந்திய அடியவர்கள் செய்யும் செயல்பாடுகளை செய்ய எமக்கு என்ன வேண்டும் என்று நீ கேட்பாயானால் யாம் உரைக்கின்றோம். எங்கும் ஒலிக்கும் பெருமை கொண்ட பால்போன்ற வெண்மை நிறமுடையதுமான உன் பாஞ்சஜன்யம் என்னும் சங்கைப் போன்ற சங்குகளும், மிக பெரிய பறைகளும், பல்லாண்டு பாடக்கூடிய இசை வல்லவர்களும், அழகிய திருவிளக்குகளும், கொடிகளையும், ஆதவன் கதிர்களை தடுக்கும் கூரைச்சீலைகளையும், ஆலிலையின் மீது துயில் கொள்ளும் எங்களின் தலைவனே! இவற்றை எங்களுக்குக் கொடுத்து அருள் செய்வாயாக…!!
Source:web