திருப்பாவை பாடல் 24
(புகழ் மாலை) அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
விளக்கம் :
திரி விக்கிரமனாய் அவதரித்து மூவுலகையும் தன் சேவடியால் அளந்த பிரானே, உன் பாதம் போற்றி போற்றி…! ராம அவதாரத்தில் தென்னிலங்கை அரசனை அழித்தாய் உன் புகழ் பாடுகிறோம். சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அசுரனை ஒரே உதையில் அழித்தாய் உன் புகழைப் போற்றுகிறோம். கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்கலம் உண்டாகட்டும். இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து ஆயர்குலத்தவரை காப்பாற்ற கோவர்த்தனகிரியை குடையாக்கி பிடித்தாய் உன் பண்பு போற்றுகிறோம். எதிரிகள் எவ்வளவு பலம் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். எந்த காலத்திலும் உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்களின் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம் என்று ஆயர்பாடி பெண்கள் வேண்டுகின்றனர்.
Source:web