December 31 2020 0Comment

திருப்பாவை பாடல் 15:

திருப்பாவை பாடல் 15:

(உரையாடல்கள்)

எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ! சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன் வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.

விளக்கம் :

இளமையான கிளியை போன்ற அழகிய பேச்சை உடைய பெண்ணே…! பொழுது விடிந்தும் இன்னும் உறங்கி கொண்டு இருக்கின்றாயே? நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, சினத்துடன் தூக்கத்தை கெடுக்காதீர்கள். இதோ விரைவில் வந்து விடுகிறேன், என்கிறாள். உடனே தோழிகள், பேச்சில் வல்லவள் ஆகிய உன் பேச்சை பற்றி நாங்கள் நன்கு அறிவோம். இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர். அப்போது அவள், சரி… சரி… எனக்கு பேசத்தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப்போகிறேன் என்கிறாள். அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள். அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள். என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள். தோழிகள் அவளிடம், நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப்பார். அனைவரும் வந்து விட்டனர். கம்சனின் மாளிகையின் வாசலில் தன்னை மிதித்தழிக்கக் காத்திருந்த குவலயாபீடம் எனும் யானையைக் கொன்று, கம்சன், சாணூரன், முஷ்டிகன் ஆகிய பகைவர்களின் அகந்தையை அழித்தவனும், மாயச்செயல்கள் புரிந்து நம்மை ஆட்கொள்ளுபவனும் ஆன கண்ணனின் புகழைப் பாட விரைவில் எழுந்து வருவாய் என்கின்றனர்.

Source:web

Share this:

Write a Reply or Comment

12 + 20 =